Skip to main content

“போராடும் விவசாயிகளை புரோக்கர் என்று சொன்ன, அரசியல் புரோக்கர்தான் பழனிசாமி” - முதல்வர்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
cm  stalin said Palanisamy, who called the struggling farmers as brokers, is a political broker

தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தேனி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன்,  திண்டுக்கல் வேட்பாளர் சச்சிதானந்தம் இருவரையும் அறிமுகப்படுத்தி, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்தப் பிரச்சார கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “நாம்தான் எல்லாத் தொகுதியிலும் வெல்லப் போகிறோம் என்று தெரிந்து கொண்ட பழனிசாமி, இப்போது என்ன கேட்கிறார். மத்திய அரசில் 14 ஆண்டுகள் இருந்த தி.மு.க. என்ன சாதித்தது என்று கேட்கிறார். பலமுறை இதற்குப் பதில் சொல்லி இருக்கிறேன். முதலில் பழனிசாமி அவர்களைப் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன், காலையில் எழுந்ததும் செய்தித்தாள்களைப் படியுங்கள். பழனிசாமியால் எந்தச் சாதனையாவது சொல்ல முடியுமா? ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும்போதெல்லாம், அ.தி.மு.க. இரண்டே இரண்டு காரியங்களைத்தான் செய்யும். ஒன்று, தி.மு.க. ஆட்சி நடந்து கொண்டிருந்தால், அதைக் கலைக்கச் சொல்லுவார்கள். இல்லை என்றால், தங்கள் மீதான ஊழல் வழக்குகளை வாபஸ் வாங்கச் சொல்லுவார்கள். இப்படிப்பட்டவர்கள், நம்மைப் பார்த்துக் கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கிறது?

தினமும் அமாவாசை எப்போது என்று காலண்டரில் பார்க்கும், அரசியல் அமாவாசையான பழனிசாமி என்ன உளறிக் கொண்டு இருக்கிறார். ஸ்டாலின் பிரதமர் கனவில் இருக்கிறார், அதற்கு வழியில்லை என்று உளறிக் கொண்டு இருக்கிறார். பழனிசாமி அவர்களே… தி.மு.க. பிரதமர்களை உருவாக்கும் இயக்கம், குடியரசுத் தலைவர்களை உருவாக்கும் இயக்கம், ஒன்றியத்தில் ஜனநாயகம் பாதிக்கப்பட்ட போதெல்லாம், ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். இதுதான் வரலாறு!

நீங்கள் என்ன கனவில் இருந்தீர்கள்? ஒரே நாடு – ஒரே தேர்தல் என்று பா.ஜ.க. சொல்கிறது, நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டமன்றத்திற்கும் தேர்தல் வந்துவிடும் என்று ‘இலவு காத்த கிளி’ போன்று இருந்தார் பழனிசாமி. அவர் வதந்தி கிளப்பியது போன்று எதுவும் நடக்கவில்லை. அதனால்தான் இப்போது வாய்க்கு வந்ததை எல்லாம் பேச ஆரம்பித்திருக்கிறார். அம்மையார் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, அனைத்துத் தேர்தலிலும் தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் பழனிசாமி அவர்களே, அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க.தான் மாபெரும் வெற்றி பெறும். பார்த்துக் கொண்டே இருங்கள். உங்களிடம் இருக்கும் தொகுதிகளையும் சேர்த்தே பறிக்கப் போகிறோம்.

அடுத்து என்ன பேசுகிறார்? அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள் என்று சவடால் விடுகிறார். அ.தி.மு.க.வை அழிக்க வெளியில் இருந்து யாரும் வரத் தேவையில்லை. அதுதான் நீங்களும்,  பன்னீர்செல்வமும், தினகரனும் அதை போட்டிப் போட்டு செய்து கொண்டு இருக்கிறீர்களே.

அதற்குப் பிறகு என்ன? அதில் சந்தேகம் வேண்டாம் விவசாயிகளின் கஷ்டங்களைப் பற்றி, ஸ்டாலினும், உதயநிதியும் பேசவில்லை என்று நீலிக் கண்ணீர் வடித்திருக்கிறார் பழனிசாமி. விவசாயிகள் உங்கள் ஆட்சியைப் போன்று, கஷ்டத்தில் இருந்தால்தானே, அவர்களின் கஷ்டங்களைப் பேசுவார்கள். திமுக  ஆட்சியில் விவசாயிகள் மிகமிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பழனிசாமிக்கு உண்மையிலேயே உழவர்கள்மேல் அவ்வளவு அக்கறை இருக்கிறது என்றால், இப்போது ஒன்றிய அரசுக்கு எதிராகப் போராடும் உழவர்களுக்காக ஏன் பழனிசாமி பேசவில்லை? அவர்களுக்காக ஏன் கண்ணீர் வடிக்கவில்லை? அதற்குக் காரணமான மோடியை ஏன் விமர்சிக்கவில்லை?

cm  stalin said Palanisamy, who called the struggling farmers as brokers, is a political broker

மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து உழவர்களின் வயிற்றில் அடித்தது ஒன்றிய பா.ஜ.க. அரசு. ஒன்றரை ஆண்டுகள் தலைநகர் டெல்லியில் தங்கிப் போராடினார்கள் விவசாயிகள். அவர்கள் தெரிவித்த எதிர்ப்பினால்தான், பின்வாங்கியது பா.ஜ.க. அரசு. அப்போது பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்தது ஒன்றிய அரசு. ஆனால், அதையும் கடந்த ஓராண்டு காலத்தில் நிறைவேற்றவில்லை. எனவே மீண்டும் டெல்லியில் உழவர்கள் போராட்டம் தீவிரமடைந்து இருக்கிறது. அவர்கள்மேல் இரக்கமற்ற வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது. எதிரி நாட்டு பயங்கரவாதிகள் போன்று, மோடி அரசு சொந்த நாட்டு உழவர்களை பழிவாங்கியபோது, இந்த பச்சைப்பொய் பழனிசாமி எங்குச் சென்றார் உழவர்களுக்கு எப்படிப்பட்ட துரோகத்தை செய்தார் இந்த பழனிசாமி? மூன்று வேளாண் சட்டங்களால் எந்தப் பாதிப்பும் இல்லை. பாதிப்பு இருப்பதாகச் சொல்கின்றவர்களுடன் நான் விவாதிக்கத் தயார். இந்தச் சட்டம் வந்தால் தமிழ்நாட்டு விவசாயிகள் உத்தரப் பிரதேசத்திற்குச் சென்று வியாபாரம் செய்யலாம்” என்று கப்சா விட்டவர் பழனிசாமி. போராடிய விவசாயிகளை, அவர்கள் விவசாயிகளே இல்லை, புரோக்கர் என்று சொன்ன, அரசியல் புரோக்கர்தான் பழனிசாமி. அப்படிப்பட்டவர், இன்றைக்கு விவசாயிகளுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்.

பழனிசாமி அவர்களே… தி.மு.க. ஆட்சியில்தான், வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்திருக்கிறோம். மூன்றே ஆண்டுகளில் இரண்டு இலட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் கொடுத்திருக்கிறோம். நீங்கள் கஜானாவைத் தூர்வாரினீர்கள். நாங்கள் டெல்டா மாவட்டங்களில் கால்வாய்களைத் தூர்வாரிக் காவிரியைக் கடைமடைக்கும் கொண்டு சென்றோம். உணவு அமைச்சர் சக்கரபாணி இருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் கொள்முதலில் சாதனை செய்கிறோம். வேளாண் துறை சார்பில் கண்காட்சி, திருவிழா, சங்கமம் என்று நடத்தி, உழவர்கள் உள்ளத்தில் நம்பிக்கை விதைக்கிறோம். மண்ணும் செழிக்கிறது. மக்களும் செழிக்கிறார்கள். இதுதான் திராவிட மாடல் ஆட்சி.

உழவர்களுக்கு துரோகம் செய்தது போன்றே, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்து, சிறுபான்மை இஸ்லாமிய சகோதரர்களுக்கும் துரோகம் செய்தார் பழனிசாமி. இன்றைக்கு திண்டுக்கல்லில் சிறுபான்மை மக்களைப் பற்றிப் பேச ஆரம்பித்து இருக்கிறார். சி.ஏ.ஏ.வுக்கு எதிராகப் போராடிய பெண்கள், குழந்தைகள் மீது தடியடி நடத்தி ரசித்து, நான் உட்பட இந்தியா கூட்டணி தலைவர்கள் என்று எட்டாயிரம் பேர் மேல் எப்.ஐ.ஆர் போட்டாரே. குடியுரிமைத் திருத்தச் சட்டம் வந்தபோது, பழனிச்சாமி என்ன செய்தார்? எந்த முஸ்லிம் பாதிக்கப்பட்டார்? என்று ஆணவமாகக் கேட்டார், என்று கடுமையாக சாடினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.