Skip to main content

“தமிழ் இனத்திற்காக தொடங்கப்பட்டதுதான் திமுக” - முதல்வர் ஸ்டாலின் 

Published on 11/03/2023 | Edited on 11/03/2023

 

cm stalin said dmk will started tamil people

 

தேர்தலுக்காகவும், ஆட்சிக்காகவும் திமுகவை அண்ணா தொடங்கவில்லை; தமிழ் இனத்திற்காக தொடங்கப்பட்டதுதான் திமுக இயக்கம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

தமிழக அரசு விசைத்தறியாளர்களுக்கு இலவசமாக வழங்கி வந்த 750 யூனிட்  மின்சாரத்தை 1000 யூனிட் வழங்குவதாக அறிவித்தது. இதனையொட்டி விசைத்தறியாளர்கள் சார்பாக கோவையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்துகின்றனர். இதற்காக முதல்வர் ஸ்டாலின் கோவைக்கு சென்றுள்ளார். 

 

இந்த நிலையில் கோவையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக்கட்சியைச் சேர்ந்த 10000 பேர் திமுகவில் இணைந்தனர். இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர், “தேர்தலுக்காகவும், ஆட்சிக்காகவும் திமுகவை அண்ணா தொடங்கவில்லை; தமிழ் இனத்திற்காகத் தொடங்கப்பட்டதுதான் திராவிட இயக்கம். முதல்வர் பதவிக்காக இன்று கட்சி தொடங்கிய பல கட்சிகள் காணாமல் போயுள்ளனர். 1949-ல் தொடங்கப்பட்ட திமுக 1957 ஆம் ஆண்டு தேர்தலில் களம் கண்டது. அதில் 15 பேர் திமுக சார்பில் சட்டபேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அடுத்து 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அண்ணா தலைமையில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் திமுக ஆட்சியைப் பிடித்தது. தமிழ்நாட்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அண்ணா கொண்டு வந்தார். ஓராண்டு காலத்தில் சரித்திரத்தில் இடம்பெறக்கூடிய அளவுக்கு தீர்மானங்களை கொண்டு வந்தவர் அண்ணா. இருமொழிக் கொள்கை, தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது உட்பட முக்கிய 3 தீர்மானங்களை அண்ணா நிறைவேற்றினார்” என்று திமுக கடந்து வந்த பாதைகள் குறித்து பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அரச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ. ஏ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
N.I.A in connection with Coimbatore car blast case. Officer 2nd day of investigation

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் குண்டு வெடிப்பு நடந்தது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உமர் பரூக், அப்துல்லா ஆகியோரை என். ஐ. ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களையும் அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உமர் பரூக், அப்துல்லா ஆகியோரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்னசாலட்டி என்ற பகுதியில் வசிக்கும் குப்புசாமி (65) என்பவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது. குப்புசாமி ஆடு மாடுகளை விற்பனை செய்யும் தரகராக இருந்து வருகிறார். இது மட்டும் இன்றி உமர் பரூக், அப்துல்லா ஆகியோருடன் குப்புசாமி குன்றி வனப் பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு என்ற அருவியில் ஒன்றாக குளித்த போட்டோவும் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்தது.

இதனையடுத்து குப்புசாமியிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் கோவையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்ன சாலட்டி பகுதிக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் நேரடியாக குப்புசாமி வீட்டிற்கு சென்று அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் உமர் பரூக், அப்துல்லாவை உங்களுக்கு எப்படி தெரியும்?. அவர்களுக்கும் உங்களுக்கும் எப்படி பழக்கம் என அடுக்கடுக்கான பல கேள்விகளைக் கேட்டனர். பின்னர் உமர் பரூக், அப்துல்லா மற்றும் குப்புசாமி ஆகியோர் போட்டோ எடுத்துக் கொண்ட குன்றி வனப்பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு அருவிக்கு என்ஐஏ அதிகாரிகள் செல்ல முயன்றனர். ஆனால் மாலை நேரம் ஆகிவிட்டதால் அதிகாரிகள் திரும்பி விட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மாலை 6.30 மணி அளவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குன்றி மலைப் பகுதிக்கு வந்தனர். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உமர் பரூக், அப்துல்லா ஆகியோர் இந்தப் பகுதியில் ஏதும் பயிற்சி பெற்றார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணி அளவில் கிளம்பி சென்றனர். மீண்டும் அடுத்த வாரம் விசாரணைக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.