Skip to main content

பெண் சக்தி குறித்து பேச மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது? - முதல்வர் ஸ்டாலின்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
cm Stalin question What qualifies Modi to talk about women power

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதனையொட்டி கூட்டணி கட்சி தலைவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதி, கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் ஆகியோரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “ஒரு மாநில அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு நாம் தான் எடுத்துக்காட்டு; ஒரு மத்திய அரசு எப்படி செயல்படக் கூடாது என்பதற்கு பாஜகதான் எடுத்துக்காட்டு. திராவிட மாடலில் குரல் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; வடக்கிலும் ஒழிக்கிறது. மற்ற மாநிலங்களுக்கு மட்டுமல்ல; இந்தியாவிற்கே தமிழகம் முன்னுதாரணமாக இருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு சேலம் வந்த பிரதமர் திமுகவினர் தூக்கத்தைத் தொலைத்துவிட்டார்கள் என்று பேசியிருந்தார். உண்மையில் பாஜகவால் மக்கள்தான் தூக்கத்தை தொலைத்துள்ளனர். பெட்ரோல் டீசல்,  விலையால் ஓட்டுநர்கள் லாரி உரிமையாளர்கள் தூக்கத்தை தொலைத்துள்ளனர். கேஸ் விலை உயர்வால் மக்கள், பெண்கள் தூக்கத்தை தொலைத்துள்ளார்கள் இப்படி பாஜகவின் ஒவ்வொரு திட்டத்தின் மூலம் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியால் மக்கள் தூக்கத்தை தொலைத்து விட்டார்கள். முன்பு பாஜக தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் தேர்தல் பத்திர ஊழல் வெளியே வந்த பிறகு பாஜகவால் வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பெண் சக்தி பற்றி பிரதமர் மோடி பேசி வருகிறார். பாஜக நிர்வாகிகளால் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்பட்டது மோடி ஆட்சியில்தான். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் நீதி மன்றத்தில் அஜாரவதற்கு செல்லும் வழியிலேயே எரித்துக் கொல்லப்பட்ட சம்பவமும் பாஜக ஆட்சியில்தான் நடந்தது. இப்படி தொடர்ந்து பெண்களுக்கு எதிராக குற்றங்கள் பாஜக ஆட்சியில்தான் நடந்த நிலையில் பெண் சக்தி குறித்து பேச மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது?

தாய்மொழி தமிழாக இல்லை என்று பிரதமர் மோடி நேற்று கவலைப்பட்டார். ஆனால் தமிழ் வானொலியை ஆகாச வானொலி என்று மாற்றி கையெழுத்திட்டுள்ளார். காலையில் இந்தியை திணித்துவிட்டு, மாலையில் தமிழ் மீது பாசம் காட்டுவது.  எங்கும் இந்தி எதிலும் இந்தி  என்ற நிலையை பாஜக அரசு உருவாக்கி விட்டது. பாஜகவில் 261 ரவுடிகள் உள்ளனர். அந்த பட்டியல் என்னிடம் இருக்கிறது. நான் வைத்திருக்கும் 32 பக்கம் கொண்ட பட்டியலில் அனைத்து ரவுடிகளும் பாஜகவில்தான் உள்ளனர். ரவுடிகளை வைத்துக்கொண்டு  சட்ட ஒழுங்கை பற்றி பாஜக பேசலாமா?

தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது என்று பிரதமர் பிரச்சாரம் செய்வது அழகல்ல; இந்தியாவிற்கே குஜராத் வழியாகத் தான் போதைப்பொருள் சென்று கொண்டிருக்கிறது. எங்கள் கட்சியைச் சேர்ந்தவர் மீது போதைப் பொருள் தொடர்பான புகார் வந்தவுடனே கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துவிட்டோம். ஆனால் பாஜக அவர்கள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்குமா? என்றார்.

“தோல்வி பயம் காரணமாகத்தான் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் போட்டியிடவில்லை. அதனால்தான் எம்.எல்.ஏ, ஆளுநர்களை பாஜக களமிறக்கியுள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்