Advertisment

“தமிழ்நாடு தலையாட்டி பொம்மை அல்ல..” - அமித்ஷாவுக்கு முதல்வர் கடும் கண்டனம்

CM Stalin condemns Amit Shah speech on Hindi language

Advertisment

அலுவல் மொழி தொடர்பான 38 வது நாடாளுமன்றக் கூட்டம் நேற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய அமித்ஷா, “மொழியை மதிக்காமல் பாரம்பரியத்தை மதிப்பது முழுமையடையாதுஎன்றும், உள்ளூர் மொழிகளுக்கு மரியாதை அளித்தால் மட்டுமே ஆட்சி மொழியை ஏற்றுக்கொள்வோம். இந்தி எந்த ஒரு மாநில மொழிக்கும் போட்டி அல்ல. அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்கப்படுத்துவதன் மூலமாக மட்டுமே நாடு வலிமை பெறும்.

எந்த விதமான எதிர்ப்புமின்றி அலுவல் மொழியை ஏற்றுக் கொள்வதற்கான தேவையை உருவாக்க வேண்டும். அலுவல் மொழியை ஏற்றுக்கொள்வது என்பது சட்டம் மூலமாகவோ, சுற்றறிக்கை மூலமாகவோ இல்லாமல், நல்லிணக்கம், உந்து சக்தி மற்றும் முயற்சியின் மூலமாக நிகழ வேண்டும். ஆட்சி மொழியை(இந்தி) ஏற்றுக்கொள்ளும் வேகம் மெதுவாக இருந்தாலும், இறுதியாக அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இதற்கு சு.வெங்கடேசன் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அமித்ஷாவின் பேச்சுக்கு கடும் கண்டம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்குக் கொத்தடிமை ஆக்கும் எதேச்சதிகார முயற்சியாகும். இதைக் கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல; தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும், டெல்லிக்குச் சென்றதும் நஞ்சைப் பரப்புவதும் பா.ஜ.க.வின் பசப்பு அரசியல் என்பதை அனைவரும் அறிவோம். இந்தித் திணிப்பை இப்போது மேற்கு வங்கமும், கர்நாடகமும் எனப் பல மாநிலங்களும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கி இருப்பதை அமித் ஷா அவர்கள் உணர வேண்டும். 1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe