Cm should resign EPS Emphasis

சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாள் கூட்டம் நேற்று (21.06.2024) காலை 10மணிக்குத் தொடங்கியது. அப்போது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் குறித்து விவாதிக்க அதிமுக உட்பட எதிர்க்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும் சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். அதோடு அவை நடவடிக்கைகள் பாதிக்கும் வகையில் அதிமுக உறுப்பினர்கள் செயல்பட்டதால் நேற்று ஒருநாள் சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்க பேரவைத் தலைவர் தடைவிதித்திருந்தார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசுகையில், “மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ள நிலையில், வெளியேற்றப்பட்டவர்கள் இந்த அவைக்கு வினாக்கள் விடைகள் நேரம் முடிந்த பின்னரே அனுமதிக்கப் பெறலாம் என்னும் வேண்டுகோளையும், பிரதான எதிர்க்கட்சி தன்னுடைய கருத்தினைப் பதிவு செய்ய வாய்ப்பு தர வேண்டும் என்றும், இதனைத் தாங்கள் பரிசீலித்து ஆவன செய்ய வேண்டுமெனக் கேட்டு அமர்கிறேன்” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து முதல்வரின் உரையைச் சுட்டிக்காட்டி அதிமுக உறுப்பினர்கள் அவைக்குள் வர சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்தார். இருப்பினும் அவை நிகழ்வில் பங்கேற்கவில்லை என அதிமுக அறிவித்தது. அதோடு சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி இருந்து புறப்பட்டுச் சென்றார்.

Advertisment

 Cm should resign EPS Emphasis

இந்நிலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்த விவாதம் நடத்தக்கோரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டபோது சபாநாயகர் எங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார். அதன் பிறகு வந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் ‘ஜனநாயக மாண்பு காப்பாளர்’ என்று கூறி கள்ளச்சாராய மரணங்கள் குறித்த முற்றிலும் ஏற்கத்தகாத ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். அதிமுகவினர் சபையில் இல்லாதபோது வந்து, தான் ஓடி ஒளியவில்லை என்று திமுக முதல்வர் சொல்வது நகைப்புக்குரியது.

சென்ற ஆண்டு செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 23 பேர் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த பிறகாவது, திமுக அரசு கள்ளச்சாராயத்தை ஒழிக்க ஏதேனும் நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று கள்ளக்குறிச்சியில் இச்சோகம் நிகழ்ந்திருக்காது. எனவே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு முழு பொறுப்பு முதல்வர் மு.க. ஸ்டாலின் தான். இப்போது வந்து ‘நான் அதிகாரிகளை மாற்றிவிட்டேன்’ என்று சொல்வது பொறுப்பற்றத் தன்மையின் உச்சம்.

Advertisment

மக்கள் நலன் ஒன்றே அதிமுகவின் அரசியல் ஆதாயம். அந்த ஆதாயம் நிறைவேற நாங்கள் அனைத்து ஜனநாயக வழிகளிலும் போராடுவோம். 18.02.2017 அன்று நீங்கள் சட்டப்பேரவையில் அரங்கேற்றிய அராஜகம், தமிழ்நாடு சட்டப்பேரவை கண்டிராத ஜனநாயகப் படுகொலை. ஜனநாயக மாண்பைப் பற்றிப் பேச திமுகவிற்கு எந்த அருகதையும் இல்லை. நீங்கள் அதிகாரிகளை மாற்றவே 50 உயிர்கள் பலியாக வேண்டுமா?. இப்போது நீங்கள் வாசிக்கும் பட்டியலால் போன 50 உயிர்கள் மீண்டும் வந்துவிடுமா?. மனசாட்சி என்பது கொஞ்சமும் இருந்தால் முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்”எனக் குறிப்பிட்டுள்ளார்.