Advertisment

“அன்னைத் தமிழைக் காப்பேன்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் சூளுரை!

CM MK Stalin statement I will protect mother Tamil

அன்னைத் தமிழைக் காப்பேன் என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அக்கட்சியின் தொண்டர்களுக்கு இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்ற தலைப்பில் எழுதியுள்ள 5வது கடிதத்தில், “தமிழ்நாடு காட்டுகின்ற பாதையே ஆதிக்க மொழிகளை அடையாளம் கண்டு, அவற்றின் வலையில் வீழாமல் தடுத்துப் பயணிக்கும் பாதை என்பதை பஞ்சாப், தெலங்கானா மாநில அரசுகளின் அறிவிப்பு உறுதி செய்திருக்கிறது. இன்று பஞ்சாப்பும், தெலங்கானாவும் உத்தரவிட்டிருப்பதை, இருபது ஆண்டுகளுக்கு முன்பே தொலைநோக்குப் பார்வையுடன், ‘தமிழ்நாட்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் ஒரு மொழிப் பாடமாகக் கற்றுத் தரப்பட வேண்டும்’ எனச் சட்டமாக நிறைவேற்றியவர் கலைஞர்.

Advertisment

ஆட்சி மொழி அலுவல் மொழி என்ற வகையில் இந்தி மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் என்ற நிலை 1965ஆம் ஆண்டு இந்தியாவில் உருவானபோது, முதலில் எச்சரித்த மாநிலம் தமிழ்நாடுதான். எச்சரித்தது மட்டுமல்ல, ‘தமிழ் வாழ்க.. இந்தி ஒழிக’ என உச்சரித்தபடியே தன் உடலுக்குத் தானே தீ வைத்துக்கொண்டு மொழிகாக்கும் போரில் உயிர் ஈந்த தியாக வரலாறும் தமிழ்நாட்டிற்குரியது. கலைஞரைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை தனிமைச் சிறையில் அடைத்தனர். அதே சட்டத்தில் முரசொலி மாறனும் கைது செய்யப்பட்டார். பேரறிஞர் அண்ணா உள்பட திமுகவினர் களம் கண்டனர். சிறை சென்றனர். தமிழ்நாட்டு மக்களின் தாய்மொழி உணர்வுத் தீ, ஆந்திரா தொடங்கி அசாம் வரை பரவியது. அதன்பிறகே, இந்திய ஒன்றிய அரசில் ஆங்கிலமும் இணை ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக நீடிக்கும் என்ற நிலை ஏற்பட்டது.

Advertisment

இந்திய ஒன்றியத்தில் ஒரு மாநிலத்திற்குரிய சட்டவழியிலான உரிமையை மிகச் சரியாகக் கையாண்டு இருமொழிக் கொள்கையைச் சட்டமாக்கிய பேரறிஞர் அண்ணா, ‘என்னால் ஆனதை நான் செய்துவிட்டேன். இனி டெல்லி தன்னால் ஆனதைச் செய்து கொள்ளட்டும்’ என்று அறைகூவல் விடுத்தார். 1971ஆம் ஆண்டு கோவையில் தி.மு.க. மாணவர் மாநாடு நடைபெற்றது. அழைப்பிதழின் உரையாற்றுவோர் பட்டியலில் என் பெயர் இல்லாவிட்டாலும், மாநாட்டின் எழுச்சியால் உந்தப்பட்டு, ‘மொழிக்காக, போராடுகிற இந்த நேரத்தில், நம்முடைய உயிரை இழக்கின்ற தியாகத்தைச் செய்வதற்குக்கூட காத்திருக்கிறோம்’ என்று நான் முழங்கினேன்.

உங்களில் ஒருவனான எனக்கு திமுக தொண்டர்கள் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து, மகிழ்ச்சியைப் பகிர்ந்து, என்னையும் மகிழ வைத்திருக்கிறீர்கள். உங்கள் அன்பான வாழ்த்துகள் என்னை மேலும் உறுதியுடன் உழைப்பதற்கும் இனம் மொழி காக்கும் போராட்டத்தை முன்னெடுப்பதற்கும் ஊக்கமாக அமைந்துள்ளது. ஆதிக்க மொழித் திணிப்பைத் தடுத்து, அன்னைத் தமிழைக் காப்பேன் என இந்தப் பிறந்தநாளில் சூளுரைக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

letter
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe