Advertisment

“இ.பி.எஸ்.-க்கு துரோகத்தைத் தவிர பெருமையாகச் சொல்லிக் கொள்ள என்ன இருக்கிறது?” - முதல்வர் விளாசல்! 

cm mk stalin says What does EPS have to boast about except betrayal

Advertisment

சென்னையில் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் இன்று (22.12.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், “கொஞ்சம் நாட்களாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஒரு வாக்கு சதவிகிதக் கணக்கை சொல்கிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் நிதிபதி குமாரசாமி போட்ட கணக்கையே மிஞ்சுவது போன்று அது இருக்கிறது. ‘காற்றில் கணக்கு போட்டு கற்பனையில் கோட்டை கட்டும்’ பழனிசாமி - ‘கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வாக்கு சதவீதம் 1 விழுக்காடு உயர்ந்திருக்கிறது’ என்று உளறி இருக்கிறார். இல்லாததை இருப்பதுபோல் ஊதிப் பெருக்கிக் காட்டுவது பழனிசாமிக்குக் கைவந்த கலைதான். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. 19.4 விழுக்காடு வாக்குகளை வாங்கியது.

இதுவே 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 34 தொகுதிகளில் போட்டியிட்டும் வெறும் 20.4 விழுக்காடு வாக்குகளைத்தான் வாங்கியிருக்கிறது. 14 தொகுதிகளில் அதிகமாகப் போட்டியிட்ட அ.தி.மு.க. நியாயமாகப் பார்த்தால் 32.98 விழுக்காடு வாக்குகளை 2024 தேர்தலில் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அதைவிட 12.58 விழுக்காடு வாக்குகள் குறைவாகத்தான் வாங்கியிருக்கிறது. எளிமையாகச் சொன்னால், 2019இல் சராசரியாக ஒரு தொகுதிக்கு 4.16 லட்சம் வாக்குகள் வாங்கிய அ.தி.மு.க. 2024-இல் வெறும் 2.61 லட்சம் வாக்குகள்தான் வாங்கியிருக்கிறது. ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 1.5 லட்சம் வாக்குகளை இழந்திருக்கிறது பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.

இப்படி, மக்களால் நிராகரிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்ட பழனிசாமி, அ.தி.மு.க. தொண்டர்களுக்குச் சாதாரண கூட்டல், வகுத்தல் கணக்கே தெரியாது என்று நம்பிப் பொய்க் கணக்கை அவிழ்த்துவிட்டிருக்கிறார். அவர் சொன்ன கணக்கை அடிப்படை அறிவுள்ள அ.தி.மு.க.காரர்களே கேட்டு சிரிக்கிறார்கள் கோழைச்சாமியான பழனிசாமி டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக பா.ஜ.க.வைக் கண்டித்தாரா? புரட்சியாளர் அம்பேத்கரைக் கொச்சைப்படுத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராகக் கீச்சுக்குரலிலாவது கத்தினாரா?. பிரதமரை எதிர்த்துப் பேசும் துணிவு அவருக்கு இருக்கிறதா? கிடையாது. தி.மு.க. என்றால் மட்டும் சட்டமன்றத்திலும், வெளியிலும் கத்திப் பேசுகிறார். கத்திப் பேசினால் தன்னை ஜெயலலிதா என்று மக்கள் நினைத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறார்.

Advertisment

எம்.ஜி.ஆர் போல் தன்னுடைய கட்சிக்காரர்கள் அவரை நினைப்பார்கள் என்று நம்புகிறார். பழனிசாமி என்னதான் கத்தினாலும் எப்படித்தான் கதறினாலும் அவருடைய துரோகங்களும் குற்றங்களும்தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். துரோகத்தைத் தவிர உங்களுக்குப் பெருமையாகச் சொல்லிக் கொள்ள என்ன இருக்கிறது?. தி.மு.க.வின் வரலாறு தியாகம். பழனிசாமியின் வாழ்க்கை முழுவதும் துரோகம். அவர், பாதம்தாங்கி பழனிசாமி மட்டுமல்ல; பயந்தாங்கொள்ளி பழனிசாமி!. இவர்கள் கள்ளக் கூட்டணியாக வந்தாலும் சரி, நேரடிக் கூட்டணி அமைத்து வந்தாலும் சரி, தமிழ்நாட்டுக்கும், தமிழினத்துக்கும் இவர்கள் பேராபத்தானவர்கள் என்று மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். நாம் ஏன் மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வர வேண்டும் என்று சொல்கிற அதேநேரத்தில் - யார் ஆட்சிக்கு வரக் கூடாது; ஏன் அவர்கள் வரக் கூடாது என்றும் மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்” எனப் பேசினார்.

Meeting
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe