Advertisment

“அஞ்சி நடுங்கி இருக்கும் நிலையில்தான் எதிர்க்கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது” - முதல்வர் பேச்சு!

CM mk stalin says opposition is operating in a state of fear and trembling

சென்னை பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் இன்று (29.03.2025) இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் கொளத்தூர் தொகுதி இஸ்லாமிய மக்களுக்கு ரமலான் பரிசுப் பொருட்கள் வழங்கினார். இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “இப்தார் விழாக்களைப் பலரும் நடத்துவார்கள். ஆனால், இஸ்லாமியர்களுக்கு ஒரு தீமை நடக்கும்போது வாயைத் திறக்க மாட்டார்கள். ஆனால், குடியுரிமைத் திருத்தச் சட்டமாக இருந்தாலும், காஷ்மீருக்கான370வது பிரிவை ரத்து செய்வதாக இருந்தாலும், சிறுபான்மையினருக்கு எதிராக எது நடந்தாலும் முதல் எதிர்ப்புக்குரல் கொடுத்துக் கொண்டிருப்பது திமுக தான்.

Advertisment

இப்போது கூட வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராகக் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிலும் தி.மு.க. சார்பாக தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டு வருகிறோம். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட, இஸ்லாமியரை வஞ்சிக்கும் இந்த சட்டத் திருத்தத்தை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் நிறைவேற்றி, அரசின் நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்திருக்கிறோம். இந்தத் தீர்மானத்தை, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவிலும், உலக அளவிலும் இருக்கும் பல்வேறு இந்திய முஸ்லீம் அமைப்புகள் வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். நம்மைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தீர்மானத்தில் கூட எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலந்து கொள்ளவில்லை. ஏன் என்று உங்களுக்கு தெரியும்.

Advertisment

இரவோடு இரவாகத் திட்டம் தீட்டி, விடியற்காலையில் யாருக்கும் தெரியாமல் டெல்லிக்கு சென்றார் ஒருவர், அவர்தான் எதிர்கட்சித் தலைவர். அவ்வாறு விமான நிலையத்தில் இறங்கி, நான்கு கார்கள் மாறி மாறிச் சென்றிருக்கிறார். அது தெளிவாக அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளிவந்திருக்கிறது. அவ்வாறு பல கார்கள் மாறிச் சென்று என்ன செய்திருக்கிறார் என்றால், இந்தச் சட்டத்தைக் கொண்டு வர இருக்கும் அமித்ஷாவைச் சந்தித்திருக்கிறார், இதுதான் முக்கியம். மறுநாள் இந்தத் தீர்மானத்தை நாம் கொண்டு வரப்போகிறோம் என்று தெரிந்தும் சட்டமன்றத்துக்கு வரவில்லை. இன்றைக்கு பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க.தான். இதில் வேடிக்கை என்ன என்றால், இன்றைக்கு கூட மாலையில் பத்திரிகைகளில் பார்த்திருக்கலாம். அடுத்து நாங்கள்தான் ஆளுங்கட்சி, ஆளுங்கட்சி என்று சொல்லிக் கொண்டிருந்தார் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி. இன்றைக்கு ஒருவருக்கு பதில் சொல்வதற்காக அவர் ஒரு பேட்டி தந்திருக்கிறார்.

நாங்கள்தான் அடுத்த எதிர்க்கட்சி என்று. எனவே, ஆளுங்கட்சி, ஆளுங்கட்சி என்று சொல்லிக் கொண்டிருந்தவர், எதிர்க்கட்சி என்று சொல்லும் நிலைக்கு இன்றைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இதுதான் இன்றைக்கு இருக்கும் நிலை. எனவே, இப்போது இரண்டாவது இடத்திற்கு யார் வருவது என்றுதான் அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டிருக்கிறது. நம்மைப் பொறுத்தவரை, நாம்தான் எப்போதும் முதல் இடத்திற்கு வரப்போகிறோம்; நாம்தான் ஆளுங்கட்சி. நான் ஏதோ, மமதையில் அகங்காரத்தில் சொல்கிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். மக்களிடத்தில் இருக்கும் ஆதரவு மக்கள் நம்மை வரவேற்கும் காட்சியை வைத்து நான் சொல்கிறேன்.

CM mk stalin says opposition is operating in a state of fear and trembling

எனவே, இந்தத் தீர்மானத்தை கொண்டு வரப்போகிறோம் என்று தெரிந்து, அவர் டெல்லிக்குப் பறந்து, இந்த திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற இருக்கும் ஒரு பொறுப்பில் இருக்கும் அமைச்சரைச் சந்தித்து வருகிறார். எனவே, அந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள் என்ன செய்வது என்று முழிக்கிறார்கள். சட்டமன்றத்தில் தீர்மானம் வருகிறதே, ஏற்கனவே சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள், அதிலும் குறிப்பாக இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் நம்மை மொத்தமாகப் புறக்கணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் அந்தக் கட்சியுடன் தொடர்பு வேண்டாம் என்று நாம் அறிவித்திருக்கிறோம். இருந்தாலும் இன்றைக்கு டெல்லிக்கு சென்று இந்த நிலைமை ஏற்பட்டுவிட்டதே, இப்போது என்ன செய்வது? இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பதா? வேண்டாமா? என்று சட்டமன்றத்தில் நடைபெறும் காட்சிகளை எல்லாம் பார்க்கிறோம். ஒருவரை ஒருவர் முகத்தைப் பார்த்துக் கொள்கிறார்கள். வெளியில் செல்கிறார்கள்; யாரிடமோ போனில் பேசிவிட்டு வருகிறார்கள். என்ன செய்வது என்று முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார்கள். அதற்குப் பிறகு, ஒப்புக்கு என்று சொல்வார்களே, அதுபோன்று நான் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து பேசினார்கள்.

அப்போது நான் அதற்கெல்லாம் நன்றி சொல்லிப் பேசினேன். அப்போது, இதே அவையில் ஏற்கனவே இருமொழிக் கொள்கை பிரச்சினை பற்றி பேசியபோது, மும்மொழிக் கொள்கை வேண்டாம்; இருமொழிக் கொள்கைதான் தமிழ்நாட்டிற்குத் தேவை என்று ஒரு தீர்மானத்தை கொண்டுவந்து பேசினோம். அப்போது நான் சொன்னேன், ஒருவர் டெல்லிக்குச் சென்றிருக்கிறார். அந்தச் செய்தி எனக்கு கிடைத்திருக்கிறது. யாரைச் சந்திக்க சென்றிருக்கிறார் என்ற செய்தியும் கிடைத்திருக்கிறது. அவ்வாறு செல்கிறபோது, எதுவேண்டுமானாலும் பேசுங்கள். நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் கூட்டணி அமைக்கிறீர்களோ, அமைக்கவில்லையோ, அது உங்கள் சொந்தக் கட்சி பிரச்சினை.

CM mk stalin says opposition is operating in a state of fear and trembling

அதில் எனக்கு சம்பந்தம் இல்லை. ஆனால், தமிழ்நாட்டுப் பிரச்சினையாக இருக்கும் இருமொழிக் கொள்கை பற்றி வலியுறுத்திப் பேசிவிட்டு வாருங்கள். நீங்கள் இங்கே ஆதரித்தால் மட்டும் போதாது. அங்கு பேசிவிட்டு வாருங்கள் என்று சொன்னேன். அவரும் பேசிவிட்டு, மறுநாள் சென்னை திரும்பியிருக்கிறார். அப்போது விமான நிலையத்தில் நிருபர்கள் கேட்டிருக்கிறார்கள், இருமொழிக் கொள்கைப் பற்றி பேசிவிட்டீர்களா? இருமொழிக் கொள்கைப் பற்றி அழுத்தமாகப் பேசினேன் என்று சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் சார்பில் அவருக்கு நான் நன்றி சொன்னேன். அதேபோல, வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா பிரச்சினை குறித்தும் நீங்கள் பேச வேண்டும். கார் மாறி மாறி சென்று பேசிவிட்டு வந்தீர்கள் அல்லவா?. அதேபோல, மறுபடியும் டெல்லிக்கு சென்று பேசிவிட்டு வர வேண்டும் என்று சொன்னேன். உடனே அ.தி.மு.க.வைச் சார்ந்தவர்கள் எழுந்து, சபாநாயகரைப் பார்த்து ஒரு நிமிடம், ஒரு நிமிடம் என்று கேட்டார்கள். அவர் அனுமதித்தார். அப்போது அவர்கள், முதலமைச்சர் வரவேற்று நன்றி எல்லாம் சொன்னார்கள்.

அந்த கார் மாறி மாறிச் சென்றார் என்று சொன்னதை மட்டும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கிவிடுங்கள் என்று ஒரு வேண்டுகோள் வைத்தார்கள். நானும் உடனே எழுந்து, அது ஆதாரத்தோடு பத்திரிகைகளில் வந்திருக்கிறது; தொலைக்காட்சிகளில் வெளிவந்திருக்கிறது. அதை வைத்துதான் சொன்னேனே தவிர, வேறு எந்த நோக்கத்திலும் சொல்லவில்லை. எனவே, மாறி மாறி என்று சொன்ன காரணத்தினால் உங்கள் மனம் புண்பட்டிருந்தால், அதை நீக்கிவிடுங்கள் என்று நானே பெருந்தன்மையாகச் சொல்லிவிட்டேன். எதற்காக சொல்கிறேன் என்றால், இவ்வாறு பயந்து அஞ்சி நடுங்கி இருக்கும் ஒரு நிலையில்தான் இன்றைக்கு எதிர்க்கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு உங்களையெல்லாம் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, இன்றைக்கு இப்தார் கொண்டாடுகிறவர்களுக்கும் திமுக விற்கும் இருக்கும் தொடர்பு என்ன என்று உங்களுக்கு தெரியும். இஸ்லாமியர்களுக்கு ஒரு பக்கம் ஆபத்து வந்தால், ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்றாலும், அதை எதிர்க்கும் நிலையில் இருக்கும் கட்சிதான் திமுக. இஸ்லாமியர்களின் கல்வி வளர்ச்சி, இட ஒதுக்கீடு மூலமாக அவர்களுக்கான சமூகநீதி எல்லாம் கிடைப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் இன்றைக்கு இந்த ஆட்சி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

admk ifdar KOLATHTHUR
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe