CM MK Stalin road show

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 2 நாள் பயணமாகச் சேலத்திற்கு இன்று (11.06. 2025) மாலை வருகை தந்துள்ளார். முன்னதாக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை கோவைக்குச் சென்ற அவர், திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ. செல்வராஜின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார். இதையடுத்து ஈரோடு மாவட்டம், பெருந்துறை, விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் வேளாண்மை - உழவர் நலத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தார்.

அதோடு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் நலத்திட்ட உதவிகளைப் பயனாளிகளுக்கு வழங்கினார். அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். இந்நிலையில் ஈரோடு - சேலம் மாவட்ட எல்லையான பவானி - மேட்டூர் பெரும்பள்ளம் பகுதியில் இன்று மாலை 6 மணியளவில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்குதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து நவப்பட்டியில் உள்ள நீர்வளத்துறை ஆய்வு மாளிகை வரை 11 கி.மீ. தூரம் வாகனத்தில் பயணித்தபடியே பொதுமக்களை (ரோடு ஷோ) சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். அவருடன் அமைச்சர் முத்துசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Advertisment

அதே சமயம் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்குச் சாலையின்இருபுறமும் இருந்த திமுகவினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த ரோடு ஷோவின் போது அவர் மக்கள் கூட்டத்தைப் பார்த்ததும் வாகனத்தை விட்டு இறங்கினார். அச்சமயத்தில் அங்கிருந்த திமுக தொண்டர்கள், பொதுமக்களிடம் சென்று பேசினார். சிறிது தூரம் நடந்து சென்று மக்களின் வரவேற்பைப் பெற்றுக்கொண்டார். அங்கிருந்தவர்களிடம் கை குலுக்கி வணக்கம் தெரிவித்தார். மேலும் குழந்தைகள், பெரியவர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் செல்ஃபி எடுத்துக் கொண்டார். அதே போன்று பொதுமக்களும் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். பொதுமக்களிடம் இருந்து மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.

அதன் பின்னர் நவப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசுகிறார். அதனைத் தொடர்ந்து இன்று இரவு மேட்டூரில் உள்ள பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான ஆய்வு மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். அதன் தொடர்ச்சியாக நாளை (12.06.2025) காலை 09.30 மணியளவில், காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு, சேலம் இரும்பாலை அருகே உள்ள அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.