Cm Mk Stalin opinion about Anna university case verdict

Advertisment

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி (23.12.2024) பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூர சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மறுநாளே கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் (37) என்பவர் கைது செய்யப்பட்டார். மக்கள் மத்தில் பெரும் அதிர்வலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய இந்த வழக்கில் 5 மாதங்களில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்து ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, இன்று (02-06-25) குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் குறைப்பு இல்லாத சிறைத் தண்டனையும், ரூ.90,000 அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். குற்றவாளி ஞானசேகரனுக்கு சிறையில் எந்த சலுகைகளும் வழங்கக் கூடாது என்றும் 30 ஆண்டு சிறை தண்டனையை குற்றவாளி ஞானசேகரன் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தண்டனை தொடர்பாக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த தீர்ப்பு தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்குச் செயலால் பதில் அளித்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை. விசாரணையின் போது, உயர்நீதிமன்றமே பாராட்டிய வகையில், சென்னை மாணவி வழக்கினை நியாயமாகவும் விரைவாகவும் ஐந்தே மாதத்தில் நடத்தி முடித்து, குற்றவாளிக்குக் கடும் தண்டனையைப் பெற்றுத் தந்திருக்கிறோம். தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் இந்த வழக்கில் காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டுள்ளதாக மகளிர் நீதிமன்றமும் முன்வந்து பாராட்டி இருக்கிறது.

Advertisment

இளம்பெண் ஒருவருக்கு நிகழ்ந்த அநீதியில் கூட அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சின்ன புத்தி கொண்ட சிலரின் எண்ணம் இதனால் தவிடுபொடியாகியுள்ளது. பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என அண்மையில் நாம் கொண்டு வந்த சட்டத்திருத்தத்துக்கு ஏற்ப, இவ்வழக்கில் நிவாரணம் (remission) உள்ளிட்ட எந்தச் சலுகையும் இல்லாமல் கடுங்காவல் தண்டனை விதித்துள்ள நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நன்றிகூறி வரவேற்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.