Advertisment

‘கடமைக்கு உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டாம்’ - திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் அறிவுரை

CM mk stalin advises DMK executives for 2026 assembly election work

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு 2026இல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயுத்தமாகி வருகின்றனர். அதன்படி, திமுக தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் அதே கூட்டணியில் இணைந்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவிருக்கிறது. அதே போல், எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவிருக்கிறது. இது தவிர இதர கட்சியான தேமுதிக, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போட்டியில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாக களமிறங்கியுள்ளார். அதனால், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

Advertisment

இந்த சூழ்நிலையில், 2026ஆம் சட்டமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று காணொளி வாயிலாக திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு பல அறிவுரைகளை வழங்கினார். இந்த காணொளியில், திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisment

இதில், கடமைக்கு உறுப்பினர்களை சேர்க்க வேண்டாம் எனவும், ஒவ்வொரு பூத்திலும் 30% புது வாக்காளர்களை கண்டிப்பாக திமுகவினர் சேர்க்க வேண்டும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உறுப்பினர் சேர்க்கையின் போது அவர்களின் குறைகளை கேட்டு பொறுமையுடன் பதிலளிக்க வேண்டும் எனவும், திமுக அரசின் சாதனைகளையும், திட்டங்களையும் விளக்கி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரைகளை வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப்படவும் - நமது திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தொடர்ந்து மக்களுக்குச் சென்று சேரவும், மக்களை ஓரணியில் தமிழ்நாடு என திமுகவில் இணைத்திட, சொல்லாற்றல், செயலாற்றல் மிக்க செயல்வீரர்களான மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் பங்கேற்க மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளுடன் நடந்தேறியது இன்றைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம். களம் 2026 தேர்தல் பரப்புரையை இப்போதே தொடங்கும் விதமாக மக்களைச் சந்திக்கப் புறப்படும் கழகத் தோழர்களின் ஒவ்வொரு நகர்வும் வெற்றிபெறத் தலைமைத் தொண்டனாக வாழ்த்துகிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.

Assembly election Assembly Election 2026 mk stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe