Skip to main content

வரலாற்றை மறந்து ஆவேச முழக்கமிடும் பழனிசாமிக்கு எடப்பாடியில் டெப்பாசிட் கூட கிடைக்காது... எஸ்.எஸ்.சிவசங்கர்!

 

eps

 

இன்று (15-09-2020) நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் 'நீட்' குறித்த விவாதம் அனல் பறந்தது. நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரி தி.மு.க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. அப்போது, நீட் தேர்வுக்கு தி.மு.க தான் காரணம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். இது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் ஆகியுள்ளது.

 

இதுகுறித்து நக்கீரன் இணையதளத்திடம் அரியலூர் மாவட்ட தி.மு.க செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.எஸ்.சிவசங்கர் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

 

''நீட் தேர்வால் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட 13 மாணவர்கள் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை சட்டமன்றத்தில் தி.மு.க தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். 

 

அதற்குப் பதில் அளிக்கிறேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதை சில தொலைக்காட்சி சேனல்கள் "முதலமைச்சர் ஆவேசம்" எனத் தலைப்பிட்டு ஒளிபரப்பின. 

 

பொய் பேசும் பதற்றம் அவர் முகம் முழுதும் அப்பட்டமாகத் தெரிந்தது. சட்டப்பேரவை தலைவரான சபாநாயகரின் அதிகாரத்தைக் கொண்டு, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பதில் தர அனுமதி தராமல், தான் மட்டுமே பேசி, அ.தி.மு.க உறுபினர்களின் மேசைத் தட்டல் சத்தத்தைக் கொண்டு வாதத்தில் வென்று விட்டதாக நினைத்தால், அதைவிட முட்டாள்தனம் இல்லை.

 

தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.க ஆட்சியில் மட்டுமல்ல, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அ.தி.மு.க ஆட்சிக்காலத்திலும் நீட் தேர்வு தமிழகத்தில் அனுமதிக்கப்படவில்லை என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். 

 

2017 ஆம் ஆண்டு நீட் தேர்வு அழுத்தத்தால் தன் உயிரை மாய்த்துக் கொண்ட அனிதாவின் முகம் இன்னும் தமிழ்நாட்டு மக்கள் மனதை விட்டு அகலவில்லை. இந்த ஆண்டு உயிரை மாய்த்துக் கொண்ட சுபஸ்ரீ, விக்னேஷ், ஜோதி ஸ்ரீ, ஆதித்யா, மோதிலால் ஆகிய மாணவர்களின் மறைவின் தீ அணையாத நிலையிலேயே இப்படிப் பொய் பேசத் துணிந்திருக்கிறார் என்றால் எடப்பாடி மக்களை மக்களாக நினைக்கிறாரா என்பதே சந்தேகம் உள்ளது.

 

Ad

 

தன்னிடம் கமிஷன் பங்கு பெறும் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் என மக்களை நினைத்து விட்டார் போல எடப்பாடி, அதனால் தான் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்.

 

சட்டசபையில் ஓங்கி, ஓங்கிக் கத்தி குரல் உயர்த்தி பேசி, அதைத் தொடர்ந்து ஊடகத்தில் ஒளிபரப்பவைத்தால் நாட்டு மக்கள் நம்பி விடுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி நம்பிக் கொண்டிருக்கிறார் போலும். எடப்பாடி முதலமைச்சர் என்பதையே அ.தி.மு.கவைச் சேர்ந்த முக்கால்வாசி பேரே இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை.

 

Sivasankar.SS

 

கூட்டுக் கொள்ளை அடிக்கும் அ.தி.மு.க அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும், காண்ட்ராக்டர்களும்தான் இவரை முதலமைச்சராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். மீதி அ.தி.மு.கவினர் எடப்பாடியை அ.தி.மு.கவின் தற்காலிக குத்தகைதாரராக தான் பார்க்கிறார்கள். நாட்டு மக்களோ ஒரு கமிஷன் தரகு மண்டி முதலாளியாகத் தான் பார்க்கிறார்கள்.

 

மக்கள் வாக்களித்த எம்.எல்.ஏக்கள் தான் எடப்பாடியை முதல்வராக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஆனால், மக்கள் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.கவுக்கு தான் வாக்களித்தார்கள். எடப்பாடி அந்த சட்டமன்ற உறுப்பினர்களை கூவாத்தூர் ஏலத்தில் பேசி முடித்து முதல்வர் ஆனவர் என்பதை மக்கள் மறந்து விடமாட்டார்கள்.

 

நீட் தேர்வு மட்டுமல்ல, மின் துறையில் உதய் திட்டத்தை அனுமதித்தது, ஒரே நாடு ஒரே ரேஷன் அமல்படுத்தியது, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவை எதிர்க்காதது, புதிய கல்விக் கொள்கையை எதிர்க்காதது என தொடர்ந்து தமிழகத்தை மத்திய அரசு வேட்டையாட அனுமதித்திருப்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

 

Nakkheeran

 

இன்னொரு பக்கம் நீட் தேர்வை எதிர்த்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதையும், தி.மு.கழகம் தொடர்ந்து போராடி வருவதையும் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

 

1991 - 1996 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி காலத்தில், சட்டப்பேரவையில் ஒரே ஒரு தி.மு.க உறுப்பினர் தான், பரிதி இளம்வழுதி. அவரையும் தூக்கி வெளியே போட்டு விட்டு, நினைத்ததை எல்லாம் அன்றைய முதல்வர் ஜெயலலிதா பேசி வந்தார். தி.மு.கவை தேசவிரோத கட்சி, தீய சக்தி என நேரம் கிடைக்கும் போதெல்லாம் சபையில் முழங்கினார். அதுவே தினம், தினம் பத்திரிகையின் தலைப்புச் செய்தியாக வரும். தி.மு.க என்ற ஒரு கட்சி இல்லாத போன்ற மாயையை ஏற்படுத்தினார். இரும்பு மங்கை தோற்றத்தை தனக்கு கட்டமைத்தார்.

 

1996 தேர்தலில், ஆனானப்பட்ட அந்த இரும்பு மங்கை ஜெயலலிதாவே தன் தொகுதி பர்கூரில் தோற்றுப் போனார். 4 இடங்களில் தான் அ.தி.மு.க வென்றது. தி.மு.க ஆட்சிக்கு வந்தது. வரலாற்றை மறந்து "ஆவேச முழக்கம்" இடும் பழனிசாமிக்கு எடப்பாடியில் டெப்பாசிட் கூட கிடைக்காது. 

 

எனர்ஜியை வேஸ்ட் செய்ய வேண்டாம்!'' என்றார் தனக்கே உரிய பாணியில் எஸ்.எஸ்.சிவசங்கர்.