/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_4085.jpg)
“இந்த தி.மு.க. அரசு இனியாவது விழித்துகொண்டு, இதுபோன்ற லட்சக்கணக்கில் மக்கள் கூடும் கோயில் திருவிழாக்களின்போது, தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் நிகழாவண்ணம் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நிர்வாகத் திறமையற்ற இந்த அரசை வலியுறுத்துகின்றேன்” என்று எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; “தென் தமிழ் நாட்டின் முக்கியமான, மிகப் பெரிய திருவிழா மதுரை சித்திரைத் திருவிழாவாகும். அதன் முக்கிய நிகழ்வாக, சித்ரா பௌர்ணமி தினத்தன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்ச்சிக்கு குறைந்தது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருகை தந்து கள்ளழகரை வழிபடுவார்கள்.
ஜெயலலிதாவின் ஆட்சியிலும், தொடர்ந்து ஜெயலலிதா அரசிலும் மேற்கொள்ளப்பட்ட சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், காவல் துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற நடவடிக்கைகள் காரணமாக, சிறு அசம்பாவிதம்கூட ஏற்படா வண்ணம் பக்தர்கள் சிறப்பாக வழிபட்டுச் சென்றனர்.
கடந்த 2022-ஆம் ஆண்டு, கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக 2 பேர் மரணமடைந்த சம்பவத்தை 2022-ஆம் ஆண்டு சட்டமன்றத் தொடரில் குறிப்பிட்டுப் பேசினேன். அப்போது பதில் அளித்த இந்த தி.மு.க. அரசின் அமைச்சர், இது துயரமான சம்பவம் என்றும், வரும் ஆண்டுகளில் சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறா வண்ணம் நல்லபடியாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்வார் என்றும் பெருமை பேசினார்.
ஆனால், 5.5.2023 அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியில், முற்றிலுமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும், பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக திட்டமிடாத காரணத்தினாலும் 3 பக்தர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்ததாகவும், ஒரு பக்தர் கூட்ட நெரிசலில் இறந்ததாகவும், மற்றொரு இளைஞர் கோவில் மண்டப வாசலின் அருகே கொலை செய்யப்பட்ட துயரச் சம்பவங்கள் நடந்ததை அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். செயலற்ற இந்த திமுக அரசிற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் உச்சமாக, மதுரை சித்திரை திருவிழாவில் பட்டாக் கத்தியுடன் இளைஞர்கள் நடனமாடிய காட்சிகள் இன்றுகூட ஊடகங்களில் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. பட்டாக் கத்தியுடன் இருந்த இளைஞர்கள் சுதந்திரமாக உலா வந்ததைக் கண்டு பக்தர்கள் மிகவும் அச்சமடைந்தனர் என்றும், இவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்ததா என்றும் தெரியவில்லை. இந்நிகழ்வுகளைப் பார்க்கும்போது, தமிழகத்தில் உளவுத்துறை செயல்படுகிறதா என்ற சந்தேகமும், காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதோ என்ற சந்தேகமும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இதுதான் இந்த அரசின், காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் பொம்மை முதலமைச்சரின் இரண்டாண்டு சாதனை.
இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, பொதுமக்கள் கூடும் திருவிழா சமயங்களில் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காதது மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக, இரண்டு ஆண்டுகளாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளிய நிகழ்வில் ஏற்பட்ட துயரச் சம்பவங்கள், தஞ்சை மற்றும் தருமபுரி மாவட்டங்களில் தேர் திருவிழாவின் போது ஏற்பட்ட துயரச் சம்பவங்கள், நங்கநல்லூர், அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏற்பட்ட துயரச் சம்பவங்கள் என்று தொடர்ச்சியாக இந்த ஆட்சியில் நடைபெறும் துயரச் சம்பவங்கள் மிகவும் வேதனை அளிக்கக்கூடியதாக உள்ளது.
இந்த தி.மு.க. அரசு இனியாவது விழித்துகொண்டு, இதுபோன்ற லட்சக்கணக்கில் மக்கள் கூடும் கோயில் திருவிழாக்களின்போது, தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் நிகழாவண்ணம் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நிர்வாகத் திறமையற்ற இந்த அரசை வலியுறுத்துகின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)