Chief Minister's insistence to the Governor that he should  act in accordance with the provisions of the Political Charter

தமிழக சட்டசபையில் நிறைவேறிய பல மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிலையில், அது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி, ஆளுநர், முதல்வரை அழைத்து மசோதா குறித்து உரிய விளக்கம் கேட்டு, சுமுகமாக பேசி முடிவுகளை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பாக ஆளுநர் ரவி, தமிழக முதல்வரை சந்திப்பதற்காக அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் மழை வெள்ளம் காரணமாக அந்த சந்திப்பு நடைபெறாமல் இருந்த நிலையில், இன்று மாலை 5.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். முதல்வருடன், அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், அமைச்சர் ரகுபதி ஆகியோர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தனர்.

Advertisment

இந்த நிலையில், நிலுவையில் உள்ள கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் தர ஆளுநரை முதல்வர் வலியுறுத்தியுள்ளார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசின் சார்பில் அனுப்பப்பட்ட மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு நீண்ட காலமாக ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருப்பது தொடர்பாக, தமிழ்நாடு ஆளுநர் உரிய அறிவுரைகள் வழங்க வேண்டி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. அவ்வழக்கில், தமிழ்நாடு ஆளுநரிடம் நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் தொடர்பாக முதலமைச்சரோடு ஆலோசனை நடத்திட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததன் அடிப்படையில், ஆளுநர் முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள்.

ஆளுநரின் அழைப்பினையேற்று, தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (30.12.2023) ஆளுநர் மாளிகையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத் துறை அமைச்சர் எஸ். இரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் மற்றும் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, ஆகியோருடன் ஆளுநரைச் சந்தித்தார்.ஆளுநருடனான இச்சந்திப்பின்போது, பல மாதங்களாக ஆளுநரிடம் நிலுவையில் இருக்கும் பல்வேறு கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் அளித்து, அரசுக்கு அனுப்பி வைத்திட வேண்டுமென்று முதலமைச்சர் ஆளுநரிடம் வலியுறுத்தினார்.

Advertisment

ஆளுநரிடம் நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் தொடர்பாக அவர் கோரிய அனைத்து விவரங்களும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களால் ஆளுநருக்கு நேரிலும், எழுத்துப்பூர்வமாகவும் அளிக்கப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்களை ஆளுநர் மனதில்கொண்டு, நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கும், கோப்புகளுக்கும் உரிய காலத்தில் ஒப்புதல் வழங்கிட வேண்டுமென்றும், வருங்காலங்களில் இதுபோன்ற தாமதங்களை ஆளுநர் தவிர்த்திட வேண்டுமென்றும் முதலமைச்சர் ஆளுநரைக் கேட்டுக் கொண்டார்.

இந்த ஆலோசனையின் போது, அரசின் சார்பாக மேற்படி கருத்துக்களை முதலமைச்சரும், அமைச்சர்களும் தலைமைச் செயலாளரும் விரிவாக எடுத்துக் கூறினர். மேலும், முதலமைச்சர் ஆளுநருக்கு கடிதம் ஒன்றையும் அப்போது வழங்கினார். இக்கடிதத்தில் அரசியல் சாசனத்தின்படி அமைக்கப்பட்டுள்ள அனைத்து உயர் அமைப்புகளின்மீதும் தனக்கு மிக உயர்ந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், நிலுவையிலுள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் குறித்து தெரிவித்தது, மாநில நிர்வாகம் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி அவற்றிற்கு விரைந்து ஒரு தீர்வு கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளது.