Advertisment

ஆவினுக்கு போட்டியாகும் அமுல்? - டெல்லிக்கு கடிதம் எழுதிய முதல்வர்

The Chief Minister wrote a letter to Delhi regarding Amul

Advertisment

தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதைத்தடுத்து நிறுத்தக்கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (அமுல் நிறுவனம்) இதுநாள் வரையில் தங்களது தயாரிப்புகளைத்தமிழ்நாட்டில் உள்ள அவர்களுடைய விற்பனை நிலையங்கள் வாயிலாக மட்டுமே விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில், பால் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் அந்நிறுவனம் பால் கொள்முதல் செய்வதால் எழும் பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டி, உள்துறை அமைச்சர் அமித்ஷா இதற்கு தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். பிற மாநிலங்களில் திறம்படச் செயல்படும் பால் கூட்டுறவு சங்கங்களைப் போலவே, தமிழ்நாட்டிலும் ஊரகப் பகுதிகளிலுள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோரின் நலனுக்காக 1981 ஆம் ஆண்டு முதல், மூன்றடுக்கு பால் கூட்டுறவு அமைப்பு திறம்படச் செயல்பட்டு வருவதாகவும், ஆவின் நிறுவனம் தலைமைக் கூட்டுறவு விற்பனை இணையமாகச் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பால் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டு முழுவதும் இலாபகரமான மற்றும் சீரான விலை கூட்டுறவு சங்கங்களால் உறுதி செய்யப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம், பால் உற்பத்தியை அதிகரிக்கவும், நிலைநிறுத்தவும், கால்நடைத் தீவனம், தீவனம், தாது உப்புக் கலவை, கால்நடை சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கால்நடைகளுக்கான இனப்பெருக்க சேவைகளையும், இடுபொருட்களையும் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கி வருவதுடன், தரமான பால் மற்றும் பால் பொருட்களை நுகர்வோருக்கு மிகக் குறைந்த விலையில் வழங்குவது உறுதி செய்யப்படுகிறது. கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், நுகர்வோரின் ஊட்டச் சத்தினைப் பூர்த்தி செய்வதிலும் ஆவின் நிறுவனம் முக்கியப் பங்காற்றுகிறது.

Advertisment

இந்தச் சூழ்நிலையில், அமுல் நிறுவனம்தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவியுள்ளது குறித்தும்,தமிழ்நாட்டில்கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் மூலம் பால் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது குறித்தும் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இந்தியாவில், மாநிலங்களுக்குள் ஒருவருக்கொருவர் பால் உற்பத்திப் பகுதியை மீறாமல், தங்களது கூட்டுறவுச் சங்கங்கள் செழிக்க பால் கொள்முதலை அனுமதிப்பது வழக்கமாக இருந்து வரும் நிலையில், அமுல் நிறுவனம் மேற்கொள்ளும் இத்தகைய எல்லை தாண்டிய கொள்முதல், 'வெண்மை புரட்சி' என்ற கொள்கைக்கு எதிராக அமைவதுடன், நாட்டில் பால் பற்றாக்குறை உள்ள சூழ்நிலையில், நுகர்வோர்களுக்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும்.

அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல்பாடு, பல்லாண்டுகளாக கூட்டுறவு மனப்பான்மையுடன் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதியில் பாதிப்பினை ஏற்படுத்தும். அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல், பால் மற்றும் பால் பொருட்களைக் கொள்முதல் செய்து விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்களிடையே ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கிவிடும். மாநிலங்களில் செயல்படும் கூட்டுறவு அமைப்புகள், பால்வளத் துறையின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கி வருவதுடன், பால் உற்பத்தியாளர்களை அத்தொழிலில் ஈடுபடுத்துவதற்கும்ஊக்குவிப்பதற்கும் உதவுவதாகவும், தன்னிச்சையான விலை உயர்விலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதிகளில், அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதைத் தடுத்து நிறுத்திட வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

aavin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe