Skip to main content

மக்களுக்கு முதலமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்! -அன்புமணி

Published on 23/09/2020 | Edited on 23/09/2020

 

anbumani ramadoss

 

காவிரி உபரிநீர் பாசனத் திட்டம் கண்டிப்பாகச் செயல்படுத்தப்படும், என மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று முதலமைச்சருக்கு பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இராமநாதபுரத்தில் நேற்று நடைபெற்ற அம்மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் ரூ.14,000 கோடி செலவில் செயல்படுத்தப்படும்; அத்திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த நடப்பு நிதியாண்டில் ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்று அறிவித்திருக்கிறார். இராமநாதபுரம் மாவட்டத்தை வளப்படுத்தும் இத்திட்டம் குறித்த முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

 

காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று 20 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், தி.மு.க ஆட்சியில் 2008-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. அப்போதே  இத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் ரூ.3,290 கோடியில் நிறைவேற்றி முடிக்கப்பட்டிருக்கும். ஆனால், இத்திட்டம் அறிவிக்கப்பட்டதைத் தவிர, அதற்குத் தேவையான நிதி ஒதுக்கப்படாததைச் சுட்டிக்காட்டி, அத்திட்டத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று கடந்த 12 ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. நிதி ஒதுக்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக காவிரி - வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தின் மதிப்பு இப்போது ரூ.14,000 கோடியாக அதிகரித்திருக்கிறது. இது பா.ம.க.வின் கனவுத் திட்டங்களில் ஒன்று. 8.44 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன ஆதாரமாகத் திகழக் கூடிய இந்தத் திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் அறிவித்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

 

ரூ.14,000 கோடி மதிப்பிலான காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை மகிழ்ச்சியுடன் அறிவிக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு, தருமபுரி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி வழங்கும் தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை அறிவிப்பதில் என்ன தயக்கம்? என்பதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை. தருமபுரி மாவட்டத்தில்  10 அணைகள்,  83 ஏரிகள், 769  சிறிய  ஏரிகள் உட்பட  மொத்தம் 1,230 நீர்நிலைகள் உள்ளன. ஒகேனக்கல் குடிநீர்த் திட்டப் பகுதியில் மழைக்காலங்களில் கிடைக்கும் உபரி தண்ணீரைக் குழாய்கள் மூலம் கொண்டு வந்து 1,230 நீர்நிலைகளிலும் நிரப்புவதுதான் தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டம் ஆகும்.

 

Ad

 

இந்தத் திட்டத்திற்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு 3 டி.எம்.சி. தண்ணீர் மட்டும் தான் தேவைப்படும். காவிரியில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 50 டி.எம்.சிக்கும் கூடுதலான தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கும் நிலையில் இது ஒரு பொருட்டல்ல. ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக அமைக்கப்பட்டுள்ள குழாய்ப் பாதைக்கு இணையாகவே இதற்கான குழாய்ப் பாதையை அமைக்க முடியும் என்பதாலும், ஏரிகளுக்கு இடையே நீர் செல்லும் பாதை மன்னர்கள் காலத்திலேயே  அமைக்கப்பட்டிருப்பதால் ஒரு சில ஏரிகளில் நிரப்பினால், அனைத்து  நீர்நிலைகளுக்கும்  தண்ணீர் தானாகவே சென்று விடும் என்பதாலும் இத்திட்டத்தை மிகவும் எளிதாகச் செயல்படுத்தி, பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து விடலாம்.

 

காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்திற்கான மொத்த செலவு ரூ.650 கோடி மட்டும் தான். இது காவிரி  -குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கான செலவில் வெறும் 4.64% மட்டும் தான். அதே நேரத்தில் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தால் பயனடையும் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்கு, அதாவது 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்; 15 லட்சம் பேருக்கு குடிநீர் வசதி கிடைக்கும். மேலும் தருமபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீரில் ஃபுளோரைடு கலந்திருப்பதால் நிலத்தடி நீரை குடிக்கும் மக்கள் ஃபுளூரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தருமபுரி மாவட்டத்தில் நோய்ப் பாதிப்பு கணிசமாகக் குறையும் வாய்ப்புள்ளது. சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால், இது மற்ற எந்தப் பாசனத் திட்டங்களையும் விட குறைந்த செலவில், அதிக பயனளிக்கும் திட்டம் ஆகும்.


ஒப்பீட்டளவில் தமிழகத்தின் எந்த மாவட்டத்தையும் விட தருமபுரி மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தில் தொழில் வாய்ப்புகளும் இல்லாததால் 5 லட்சத்திற்கும் கூடுதலான மக்கள் வேலை தேடி பிற மாநிலங்களுக்கும், பிற மாவட்டங்களுக்கும் செல்கின்றனர். தருமபுரி மாவட்டம் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டம். சராசரி மழை அளவில் பாதி கூட பெய்வதில்லை. அதனால், பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் 1,200 அடிக்கும் கீழ் சென்று விட்டது. பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், அரூர் ஆகிய வட்டங்களில் ஆழ்துளை குழாய்க் கிணறு அமைத்து தண்ணீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் விவசாயம் செய்யப்படும் பரப்பு வேகமாகக் குறைந்து வருகிறது.

 

Nakkheeran

 

காவிரி உபரிநீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தருமபுரி மாவட்டத்தில் விவசாயம் செழித்து, வேலைவாய்ப்புகளும், பிற வாழ்வாதார வாய்ப்புகளும் ஏற்படும். அதைக் கருத்தில் கொண்டுதான் காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.  இந்தக் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி முதல் தருமபுரி மாவட்ட மக்களிடம் 10 லட்சத்துக்கும் கூடுதலான கையெழுத்துகளைப் பெற்று தமிழக முதலமைச்சரிடம் பாட்டாளி மக்கள் கட்சி ஒப்படைத்தது. 2019-ஆம் ஆண்டு மார்ச் 5-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் சந்தித்து காவிரி உபரி நீர் பாசனத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டோம். பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் பழனிசாமி, மக்களவைத் தேர்தலின் போது தருமபுரி தொகுதியில் என்னை ஆதரித்துப் பரப்புரை செய்தபோது, காவிரி உபரிநீர் பாசனத் திட்டம் கண்டிப்பாகச் செயல்படுத்தப்படும் என்று 9 இடங்களில் உறுதி அளித்தார். ஆனால், தேர்தல் முடிந்து ஒன்றரை ஆண்டுகளாகியும் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை.

 

பின்தங்கிக் கிடந்த எத்தனை மாவட்டங்கள் முன்னேறின என்பதுதான் ஓர் ஆட்சியின்  செயல்பாட்டை அளவிடுவதற்கான முக்கியக் காரணியாகும். தருமபுரி போன்ற பின்தங்கிய மாவட்டங்களை முன்னேற்ற ஏதேனும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் தான் தமிழகத்தில் நடப்பது வளர்ச்சிக்கான ஆட்சி என்று போற்றப்படும். எனவே, தருமபுரி மாவட்டத்தைச் செழிப்பாக்குவதற்கான காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை உடனடியாக அறிவித்து, அதற்கான நிதியையும் முதலமைச்சர் பழனிசாமி ஒதுக்கீடு செய்ய வேண்டும்''. இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

'அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது'- ராமதாஸ் கருத்து

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு  நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை.

 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6ஆம் நாள் தான் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்பதால், அதுவரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். அதாவது தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதே காலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது.

நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலை பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கூட அரசால் செய்ய முடியாத நிலை உருவாகும்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் தான். சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் அதில் கிடைத்தப் பணத்தை சந்தைக்கு கொண்டு சென்று தான் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். அவ்வாறு வணிகர்கள் பணத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களை மடக்கி சோதனை நடத்தும் பறக்கும் படையினர் வணிகர்களிடம்  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் கூட மொத்தப் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வணிகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களை மேலும் 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்த  தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.