Skip to main content

“ஒழுங்கீனமும் முறைகேடும் நடந்தால் சர்வாதிகாரியாக மாறுவேன்!” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் எச்சரிக்கை!

 

Chief Minister M.K.Stalin gave a stern warning in the conference of local body representatives.

 

“ஒழுங்கீனமும், முறைகேடும் தலைதூக்குமானால் நான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன்” என்று உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எச்சரித்தார். 

 

நாமக்கல் மாவட்டம், பொம்மைக்குட்டை பகுதியில், திமுகவைச் சேர்ந்த நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 3) நடந்தது. அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை உரையாற்றினார். அவர் பேசியதாவது; “உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று நிறைய பெண்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். பெண்களுக்கு பயமோ, கூச்சமோ, தயக்கமோ இருக்கக் கூடாது. தரப்பட்ட பொறுப்புகளை நீங்களே கையாள வேண்டும். தரப்பட்ட பொறுப்பை உங்கள் கணவரிடம் ஒப்படைத்துவிடாதீர்கள். நிமிர்ந்த நடை; நேர்கொண்ட பார்வை; நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் கொண்டவர்களாக தன்னிச்சையாக செயல்பட வேண்டும். 


சட்டப்படி, விதிமுறைப்படி, நியாயத்தின்படி மக்களுக்காக நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையாக எச்சரிக்கிறேன். கட்சி ரீதியாக மட்டுமல்ல; சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். நான் அதிகப்படியான ஜனநாயகவாதியாக மாறிவிட்டேன் என்று எனக்கு நெருக்கமான சில நண்பர்கள் அடிக்கடி சொல்வார்கள். அனைவரின் கருத்தையும் கேட்டு, அவர்கள் கருத்துக்கும் மதிப்பளித்து செயல்படுவதுதான் ஜனநாயகம். யாரும் எதையும் செய்யலாம் என்பது ஜனநாயகம் அல்ல. அப்படி நான் மாறிவிடவும் இல்லை. 


ஒழுங்கீனமும், முறைகேடும் தலை தூக்குமானால் நான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என்பதை உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு மட்டுமின்றி,  இங்குள்ள அனைவருக்கும் சொல்லிக் கொள்கிறேன். நான் ஒன்றும் ஆட்சிக்கு சும்மா வந்துவிடவில்லை. தங்க தாம்பாளத்தில் வைத்து தமிழ்நாட்டு முதலமைச்சர் பதவி எனக்குத் தரப்படவில்லை. 50 ஆண்டு கால உழைப்பின் பலன் இது. கோடிக்கணக்கான தொண்டர்களின் தன்னலமற்ற உழைப்பின் பயன் இது. 


என்னை நம்பி கோடிக்கணக்கான தொண்டர்கள் இந்தக் கட்சியை ஒப்படைத்து இருக்கிறார்கள். என்னை நம்பி கோடிக்கணக்கான மக்கள் இந்த ஆட்சியை ஒப்படைத்து இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாட்டின் எதிர்காலம் என்பதே திமுக கையில்தான் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. அவற்றுக்கு களங்கம் ஏற்படுத்தும் காரியத்தை யாரும் செய்து விடக்கூடாது. 


யாரோ ஒரு சிலரின் தவறான செயல்களின் காரணமாக தமிழ்நாட்டின் முதலமைச்சரான நானோ, கோடிக்கணக்கான தொண்டர்களோ அவமானத்தால் தலை குனியக் கூடிய நிலையை யாரும் உருவாக்கி விடக்கூடாது என தாழ்மையோடு உங்களை கேட்டுக்கொள்கிறேன். பேரறிஞர் அண்ணாவின் தம்பிகள், முத்தமிழறிஞர் கலைஞரின் உடன்பிறப்புகள் நாம். உங்களில் ஒருவனான எனது சகோதர, சகோதரிகள் என்பதை ஒவ்வொரு நாளும் உணர்ந்து செயல்படுங்கள். திமுகவைச் சேர்ந்தவர்கள் தமிழினத்தின் இனமானம் காக்க, சுயமரியாதை காக்க, முற்போக்கு சிந்தனையோடு பேரறிஞர் அண்ணாவின் பின்னாலும் கலைஞர் பின்னாலும், ஏன்... இன்று என் பின்னாலும் அணி திரண்டு இருப்பவர்கள் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். 


பேரறிஞர் அண்ணா சொன்னதுபோல, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவை கழகத்தினருக்கு அழகு. இதை கட்டளையாகச் சொன்னார்கள். இந்த மூன்றையும் மூச்சென கடைபிடியுங்கள். உள்ளாட்சிப் பொறுப்புகளுக்கு வந்திருக்கக் கூடிய உங்களுக்கு முதலில் தேவை ஒற்றுமை. உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிகாரிகள் ஆகியோர் ஒற்றுமையோடு இருந்தால்தான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும். அப்படி ஒற்றுமை இல்லாவிட்டால் அனைத்துப் பணிகளும் முடங்கிப் போய்விடும். மேயரும், துணை மேயரும் பேச மாட்டார்கள். நகராட்சித் தலைவருக்கும் கவுன்சிலருக்கும் ஆகாது. பஞ்சாயத்துத் தலைவருக்கு உள்ளேயே பஞ்சாயத்துதான். இந்த செய்திகள் எல்லாம் என் கவனத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் அதற்கு அறவே இடம் கொடுக்கக் கூடாது. உங்களில் சிலருக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, ஒற்றுமையுடன் மக்கள் பணி ஆற்றுங்கள். ஒற்றுமையாக இருங்கள். ஊருக்காக உழையுங்கள்.


சமூக நீதி, சுயமரியாதை, பகுத்தறிவு, சமத்துவம், சகோதரத்துவம், பெண் விடுதலை, மொழிப்பற்று, இன உரிமைகள், மாநில சுயாட்சி, கூட்டாட்சி கொண்டதுதான் இந்தியா. அடிப்படை கருத்தியலைக் கொண்டதுதான் திராவிட இயக்கம். அந்த கருத்தியலை உள்வாங்கி செயல்படக்கூடிய திராவிட மாடல் அரசுதான் இந்த அரசு. இந்தக் கோட்பாடுகளை நீங்கள் முழுமையாக அறிந்தும், தெரிந்தும், புரிந்தும் வைத்திருக்க வேண்டும். 


நகராட்சி தலைவருக்கு, பேரூராட்சி தலைவருக்கு, வார்டு கவுன்சிருக்கு இவையெல்லாம் எதற்கு என்று நீங்கள் யாரும் கருத மாட்டீர்கள் என நான் நினைக்கிறேன். திராவிட இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அனைவரும் இந்த கோட்பாடுகளை அறிந்து வைத்திருக்க வேண்டும். அதை செயல்படுத்தக் கூடியவராகவும் இருக்க வேண்டும். சாலைகள் போடுவதோ, தண்ணீர் தொட்டி கட்டுவதோ, பாலங்கள் கட்டுவதோ, கழிவுநீர்க் கால்வாய்கள் அமைப்பதற்கான பணிகளோடு உங்கள் பணி முடிந்து விடுவதில்லை. சமத்துவப் பாதைகள் அமைப்பதும், சகோதர பாதை அமைப்பதும், சமூகத்தின் கழிவுகளை துடைப்பதும் உங்கள் கடமைதான். அதனால்தான் இதனை திராவிட மாடல் ஆட்சி என்று சொல்கிறோம். நம் இலக்குகளை நோக்கி உழையுங்கள். 


அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்து துறைகளின் வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களின் வளர்ச்சி வரிசையில் அனைத்து சமூகங்களின் வளர்ச்சி என்று அடிக்கடி சொல்லி வருவது இதுதான். அனைத்து சமூகங்களையும் வளர்க்காமல் அனைவருக்குமான வளர்ச்சியை நீங்கள் உருவாக்கி விட முடியாது. அனைத்து சமூகங்களையும் வளர்க்காமல், வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்த வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று நீங்கள் பேச முடியாது; கீழடியில் 3200 ஆண்டுக்கு முன்பே தமிழன் எழுத்தறிவோடு இருந்தான் என்று பெருமை பேச முடியாது. 


பெரியார் பிறந்த நாளன்று சமூகநீதி உறுதிமொழியையும், அம்பேத்கர் பிறந்த நாளன்று சமத்துவ நாள் உறுதொழியையும் எடுத்துக்கொள்ளும் தகுதியை நாம் பெற்றாக வேண்டும். இந்த தகுதியை கொண்டவர்கள்தான் திமுகவை சேர்ந்தவர்கள். எது திராவிட மாடல் என்று கேட்பவர்களுக்கு இதுதான் என்னுடைய பதில். பதவி, பட்டம், பொறுப்பு, மாலை, பாராட்டு ஆகிய எல்லாமே கொள்கையை நடைமுறைப்படுத்தக் கூடிய பாதையில் வந்து போகின்றவை. கொள்கையும் கோட்பாடும்தான் நிரந்தரமானது.  


பெரியார், அண்ணா, பேராசிரியர், கலைஞர் ஆகியோர் தங்களை மறந்து தமிழ்ச் சமூதாயத்திற்காக உழைத்தார்கள். அவர்களின் உழைப்பால் உருவான இயக்கம், இந்த இயக்கம். இது இயக்கம். அதனால்தான் இயங்கிக் கொண்டே இருக்கிறது. நமது இயக்கம், தமிழ்நாட்டின் தமிழினத்தின் விடியலுக்காக இருந்தாக வேண்டும். இந்தக் கழகம் உருவாக்க நினைப்பது, தலை நிமிர்ந்த தமிழகம். உன்னதமான தமிழகம். அனைத்திலும் மேம்பட்ட தமிழகம். அத்தகைய தமிழகத்தை உருவாக்க என்னை ஒப்படைத்துக் கொண்டிருக்கிறேன். நீங்களும் உங்களை ஒப்படைத்துக் கொள்ளுங்கள். 


இந்த ஓராண்டு காலத்தில், தேர்தல் அறிக்கையில் சொன்னது போல 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். இதெல்லாம் சரித்திர சாதனைகள். இந்த சாதனைகளை மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும். நாம் நிறைவேற்றிக் கொடுத்திருக்கும் திட்டங்களால் பலன் பெற்ற மக்களுக்கு நினைவூட்ட வேண்டும். வீட்டுக்கு வீடு சென்று திண்ணைப் பிரச்சாரம் செய்யுங்கள். தெருமுனைக் கூட்டம் போடுங்கள். 


நாம் பெற்றிருப்பது பதவி அல்ல; பொறுப்பு. பதவி என்பது தோளில் போடக்கூடிய  துண்டு. கொள்கை என்பது இடுப்பில் கட்டக்கூடிய வேட்டி என்றார் பேரறிஞர் அண்ணா. அண்ணன் காட்டிய பாதைதான் நமது பாதை. அந்தப் பாதையில் மக்கள் உறுதியேற்றுக் கொள்ளுங்கள். மக்களின் பாராட்டைப் பெறுங்கள். திமுகவுக்கும் தமிழகத்திற்கும் பெருமையைப் பெற்றுத் தாருங்கள்” இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.