Skip to main content

“அச்சத்தால் பா.ஜ.க கூட்டணியை இபிஎஸ் ஏற்றுள்ளார்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

Published on 03/05/2025 | Edited on 03/05/2025

 

Chief Minister MK Stalin's criticism eps at district secretaries meeting

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (03-05-25) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாயலத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கட்சி ரீதியான மாவட்டங்களைப் பிரிப்பது, நிர்வாகிகள் மாற்றம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “பா.ஜ.க தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற நினைக்கிறது. அதற்கு அனைத்து விதமான அச்சுறுத்தலை செய்து அ.தி.மு.கவை பா.ஜ.க அடக்கிவிட்டது. எடப்பாடி பழனிசாமிக்கும் வேறு வழியில்லை. பா.ஜ.க கூட்டணியை ஏற்றுக்கொள்ளாவிட்டால் சொந்த கட்சியில் தலைமைக்கே சிக்கல் வந்துவிடும் என்று பயப்படுகிறார். அதனால் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க கூட்டணியை ஏற்றுக் கொண்டுள்ளார். அமைச்சர்கள் சென்னையில் இருப்பதை விட அவர்களது மாவட்டங்களில் அதிக நாட்களை செலவிடுங்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு ஊராகச் சென்று வார்டு வார்டாகச் சென்று மக்கள் குறைகளைக் கேட்க வேண்டும். 

நம்முடைய பலமே, நம்முடைய கழகக் கட்டுமானம்தான். இத்தகைய நிர்வாகக் கட்டமைப்பு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அந்த கட்டமைப்பை காலம் தோறும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறோம். இருக்க வேண்டும். தடங்கல் எப்போதும் நமக்கு இருக்கும், அதை உங்களிடம் இருக்கும் உழைப்பால் வெல்லுங்கள் என்பது என்னுடைய வேண்டுகோள். அனைத்து காலகட்டங்களிலும் இது போன்ற சோதனைகளை நாம் எதிர்கொண்ட இயக்கம் தான் இது. அரசியல் ரீதியாக நம்மை வெல்ல முடியாதவர்கள் இது போன்ற மிரட்டல்கள் மூலமாக அசிங்கப்படுத்த நினைப்பார்கள். அவர்களது அரட்டல், மிரட்டல், உருட்டல் எல்லாவற்றுக்கும் உண்மையான காரணங்கள் எல்லாம் மக்களுக்கு தெரியும். எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் சட்டப்பூர்வமாகவும், மக்கள் ஆதரவுடனும் திமுக எதிர்கொள்ளும். பா.ஜ.கவின் அச்சுறுத்தல்களை அரசியல் ரீதியாக நாம் எதிர்கொள்வோம். 

வேட்பாளர் யார் என்பதை திமுக தலைமை முடிவு செய்யும். வெற்றி பெறுபவரே வேட்பாளராக நிறுத்தப்படுவார்கள். 6வது முறையாக ஆட்சியில் அமர்ந்திருக்கிற காரணம், கோடிக்கணக்கான திமுக தொண்டர்கள் என்பதை நான் அனைத்து இடங்களில் சொல்லி இருக்கிறேன். கடந்த 7 ஆண்டுகளாக நாம் வெற்றியை பெற்று வருகிறோம். இந்த வெற்றிக்கு காரணம் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் தான். இத்தகைய நன்றி உணர்வோடு தான் நான் பேசி வருகிறேன்” என்று பேசினார். 

சார்ந்த செய்திகள்