Chief Minister MK stalin wrote letter to party member at erode by election

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலை, அதிமுக, பா.ஜ.க த.வெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. அதனால், இருமுனை போட்டியாக அமைந்திருக்கும் தி.மு.கவுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே பிரச்சாரப் போர் நடந்த வருகிறது. இரு கட்சியினரும், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், ஈரோடு இடைத்தேர்தலை ஒட்டி தொண்டர்களுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, “பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்து முத்தமிழறிஞர் கலைஞர் காலத்திலும், அவர்கள் இருவருக்குப் பிறகும் தி.மு.கழகம் எத்தனையோ இடைத்தேர்தல் களங்களைச் சந்தித்திருக்கிறது. தற்போது நடைபெறக்கூடிய ஈரோடு கிழக்குச் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் என்பது எதிர்பாராத வகையிலும் மனதில் பெரும் சுமையுடனும் எதிர்கொள்ள வேண்டிய களமாக அமைந்துவிட்டது. 2021 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்டு வென்றவர் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஈவெரா திருமகன் அவருடைய அகால மரணத்தைத் தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் அவரது தந்தையான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் களம் கண்டு மாபெரும் வெற்றி பெற்றார். கடந்த டிசம்பர் மாதத்தில் நம் அனைவரின் அன்பிற்குரிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் ஒன்றிய அமைச்சர், தந்தை பெரியாரின் பேரன் .ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் அதிர்ச்சி தரத்தக்க மரணத்தால் இந்த இடைத்தேர்தல் களத்தைச் சந்திக்கின்றோம்.

Advertisment

இந்த முறை ஈரோடு கிழக்கில் திமுக போட்டியிட வேண்டும் என்று கழகத்தினர் விரும்பியது மட்டுமின்றி, அரசியல் சூழலை நன்குணர்ந்த தோழமைக் கட்சியான காங்கிரஸ் பேரியக்கமும் தீர்மானித்து அறிவித்ததைத் தொடர்ந்து, தி.மு.க.,வின் வேட்பாளராக ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களின் அன்பைப் பெற்ற வி.சி.சந்திரகுமார் களமிறங்கியுள்ளார். கழக அரசின் சாதனைத் திட்டங்களால் ஒவ்வொரு குடும்பமும் பயன் பெற்றிருப்பதால் தங்கள் வாக்குகள் உதயசூரியனுக்கே என்று ஈரோடு கிழக்கு வாக்காளர்கள் உறுதியளித்து வருகின்றனர். உங்களில் ஒருவனான எனது தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் ஈரோடு மாவட்டத்தின் நலன் சார்ந்த பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாவட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையிலும், ஈரோடு மாவட்டத்தின் சிறப்பு மிக்க நெசவுத் தொழில், வணிகம் ஆகியவை வளர்ச்சி பெறும் வகையிலும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. அதில் ஈரோடு கிழக்குத் தொகுதி பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

எந்தக் கோரிக்கை வைத்தாலும் அதனை உரிய முறையில் பரிசீலித்து, நிறைவேற்றித் தரக்கூடியதாக திராவிட மாடல் அரசு இருக்கிறது என்ற நம்பிக்கைதான், இந்த அரசின் திட்டங்களின் பயனாளிகளான ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் புதிய கோரிக்கைகளை வைப்பதற்குக் காரணம். தி.மு.கழக அரசின் மீது தமிழ்நாட்டு மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடுதான், ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் கழக வேட்பாளருக்கு வழங்கும் மகத்தான ஆதரவு. இந்த அரசு மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையையும் ஆதரவையும் எப்படியாவது சிதைக்க வேண்டும் என்று நாளொரு அவதூறையும் பொழுதொரு பொய்யையும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பரப்பினாலும் அவை மக்கள் மன்றத்தில் எடுபடுவதில்லை. பொழுது சாய்வதற்குள் எதிர்க்கட்சிகளின் பொய்களும் அவதூறுகளும் பொடிப் பொடியாகிவிடுகின்றன.

Advertisment

கழக வேட்பாளரை எதிர்க்க முடியாமலும், பொதுமக்களைச் சந்திக்கும் வலிமையில்லாமலும் அ.தி.மு.க, பா.ஜ.க. ஆகிய கட்சிகள் வழக்கம்போல அவதூறான குற்றச்சாட்டுகளைச் சொல்லி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலைப் புறக்கணித்துள்ளன. தி.மு.க.வை நேரடியாக எதிர்க்கும் துணிவின்றி சில உதிரிகளைத் தூண்டிவிட்டு, மறைமுக யுத்தம் நடத்திப் பார்க்கின்றன. தமிழ்நாட்டின் நலனுக்காகப் பாடுபடுகிற கழக அரசையும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசையும் தமிழ்நாட்டு மக்கள் சரியாக அடையாளம் கண்டு வைத்திருக்கிறார்கள். அதனை ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் இடைத்தேர்தலில் உதயசூரியனுக்கு அளிக்கும் மகத்தான வெற்றியின் வாயிலாக நிரூபிப்பார்கள். ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் மீதும், அங்கே தேர்தல் பணியாற்றும் கழக உடன்பிறப்புகள் மற்றும் தோழமைக் கட்சியின் செயல்வீரர்கள் மீதும் உங்களில் ஒருவனான நான் வைத்திருக்கும் நம்பிக்கையினாலும், என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையினாலும், நான் நேரில் வந்து வாக்கு சேகரித்ததாகக் கருதி, தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமாருக்கு பிப்ரவரி 5-ஆம் தேதியன்று உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்குகளை அளித்து மகத்தான வெற்றியை அளிக்குமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.