Advertisment

பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் சரமாரி கேள்வி!

Chief Minister M.K. Stalin barrage question

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத் தளத்தில் ‘பதில் சொல்லுங்க மோடி’ எனக் குறிப்பிட்டு பல்வேறு கேள்விகளை அடுக்கியுள்ளார். அதில், “பருவகாலத்தில் பறவைகள் சரணாலயத்துக்கு வருவது போல், தேர்தல் காலங்களில் தமிழ்நாட்டில் வட்டமடிக்கும் பிரதமர் மோடி அவர்களே... குஜராத் மாடல் - சவுக்கிதார் வேடங்கள் போலி என அம்பலமானதால், கேரண்டி கார்டுடன் மக்களவைத் தேர்தலுக்கு வந்திருக்கும் பிரதமர் மோடி அவர்களே... இதோ இந்த கேரண்டிகளைத் தருவீர்களா?. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும். இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு நீக்கப்படும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. இட ஒதுக்கீடு முறையாகக் கடைபிடிக்கப்படும். தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு. ஒருபோதும் இந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிக்கப்படாது. மாநிலப் பட்டியலுக்குக் கல்வி மாற்றம்; கல்விக்கடன்கள் ரத்து.

Advertisment

ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை, ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஊதியம் ரூ.400. வேளாண் விளைபொருட்களுக்கு நியாயமான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம். தாறுமாறாக உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையைக் குறைப்பேன். செஸ், சர் சார்ஜ் என்ற வரிக் கொள்ளை அறவே நீக்கம். அமலாக்கத்துறை - வருமான வரித்துறை - சி.பி.ஐ ஆகியவை சுதந்திரமாகச் செயல்படும். மாநிலங்களை வஞ்சிக்காத நியாயமான நிதிப் பகிர்வு தருவேன். வணிகர்களையும் சிறு குறு தொழில்களையும் வதைக்கும் ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தம். கும்பல் வன்முறைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவேன். வியாபம் முதல் தேர்தல் பத்திரங்கள் வரை பா.ஜ.க.வின் ஊழல்கள் குறித்த வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிடுவேன்.

Chief Minister M.K. Stalin barrage question

கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், ஊடக சுதந்திரத்தை அனுமதிப்பேன். சீனா ஆக்கிரமித்துள்ள பகுதிகளை மீட்பேன். தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை மீட்பேன்; தாக்குதலை நிறுத்துவேன். அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்வேன். வெள்ள நிவாரணத்துக்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து உடனடி ஒதுக்கீடு. சென்னை மெட்ரோ பணிகளுக்கு ஒப்புக்கொண்டபடி ஒன்றிய அரசின் நிதி விடுவிப்பு. தமிழை இந்தியாவின் அலுவல் மொழியாக, திருக்குறளை தேசிய நூலாக, உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கச் சட்டம் இயற்றுவேன். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறுவேன். சிறுபான்மை மக்களை இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்த மாட்டேன் என இதற்கெல்லாம் நீங்கள் கேரண்டி அளிக்கத் தயாரா?.

இல்லையென்றால் உங்கள் கேரண்டி என்பது, ஊழல் கறை படிந்தவர்களுக்குக் காவிக்கறை பூசும் மேட் இன் பிஜேபி (Made in BJP) வாஷிங் மெஷினுக்கு மட்டுமே என்பது மீண்டும் ஒருமுறை அம்பலமாகும். பதில் சொல்லுங்க மோடி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

campaign
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe