ADVERTISEMENT

“பூனை நினைப்பதைப் போல் பழனிசாமியும் நினைத்தார்” - வெற்றி குறித்து முதலமைச்சர் அறிக்கை

11:54 PM Mar 02, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பல்வேறு பரபரப்புகளைக் கடந்து இன்று நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததிலிருந்து முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 556 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 981 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். ஈவிகேஎஸ். இளங்கோவன் மற்றும் தென்னரசுவிற்கு இடையேயான வாக்குகள் வித்தியாசம் 66 ஆயிரத்து 675 வாக்குகளாக இருப்பதால் இளங்கோவன் வெற்றியை இமாலய வெற்றியாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்கில் வெற்றி பெற்றதை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அருமைச் சகோதரர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறார். இந்த மாபெரும் வெற்றியை வழங்கிய ஈரோடு கிழக்கு தொகுதியின் வாக்காளப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இடைத்தேர்தல் களத்தைத் தனது இழிவான அரசியலுக்குப் பயன்படுத்தியது அ.தி.மு.க., முன்னாள் முதலமைச்சர், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவர் என்ற தகுதியை மறந்து, தன்னிலை இழந்து மிக மோசமான சொற்களைப் பயன்படுத்தி பரப்புரை செய்தார் பழனிசாமி. வேட்டி இருக்கிறதா; மீசை இருக்கிறதா; ஆண்மை இருக்கிறதா என்றெல்லாம் நாலாம் தர ஐந்தாம் தர அ.தி.மு.க. பேச்சாளரைப் போல அவர் பேசினார். நான்காண்டு காலம் தனது கையில் பதவி இருந்தபோது மக்களுக்காகத் துரும்பைக் கூட கிள்ளிப் போடாத பழனிசாமி, அதனை எல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து வாய் நீளம் காட்டினார். பதவியேற்ற நாள் முதல் தினந்தோறும் திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கும் எங்களைப் பார்த்து, 'எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை’ என்றார்.

பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டது என்று நினைப்பதைப் போல பழனிசாமி நினைத்தார். அவரது ஆட்சிக்காலம் இருண்டகாலம் என்பதை மீண்டும் ஒருமுறை அவருக்கு ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் உணர்த்தி இருக்கிறார்கள். இந்த வெற்றிக்காக அயராது பாடுபட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியின் தலைவர்கள், அமைச்சர் பெருமக்கள், கழக முன்னணியினர், மாவட்ட கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், உடன்பிறப்புகள் அனைவருக்கும் இருகரம் கூப்பி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி மட்டுமல்ல. இந்த ஆட்சியின் வெற்றி; கழகத்தின் வெற்றி. இந்த வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT