Advertisment

“இது சரியான நிலைப்பாடாக இருக்க முடியாது” - பாட்னா கூட்டத்தில் எடுத்துச் சொன்ன முதலமைச்சர்

Chief Minister M. K. Stalin's press conference regarding the meeting of opposition parties in Patna

Advertisment

பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கும் என்று கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து சற்று காலதாமதமாக நண்பகல் 12 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்து பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசியுள்ளனர். இக்கூட்டத்தில் 16 எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட 6 மாநில முதல்வர்களும் கலந்து கொண்டனர்.

பாட்னா கூட்டம் முடிந்த பின் தமிழ்நாடு வந்த முதலமைச்சர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்தியாவில் உள்ள ஜனநாயகத்தைக் காப்பாற்ற பல்வேறு கட்சிகளின் கலந்தாய்வுக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காக நானும் கழக பொருளாளர் டி.ஆர்.பாலுவும் சென்றிருந்தோம். மிகுந்த மகிழ்ச்சியும் நம்பிக்கையும் உருவாக்குவதாக இந்த கூட்டம் அமைந்திருந்தது. அகில இந்திய தலைவர்கள் அனைவரையும் சந்தித்தேன்.

நேற்ரு மாலை நான் பாட்னாவிற்கு சென்றதும் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக லல்லு பிரசாத் யாதவ்வின் இல்லத்திற்கு சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்து சிறிது நேரம் பேசினோம். அது எனக்கு உற்சாகத்தை கொடுத்தது. ஒன்றிய அளவில் ஆட்சியில் இருக்கும் பாஜகவை வீழ்த்துவது என்பதே நோக்கம் என்று பீகார் முதல்வர் இக்கூட்டத்தை கூட்டி இருந்தார்கள். பாஜகவிற்கு எதிரான கூட்டம் என்பதால் இது தனிப்பட்ட கட்சிக்கு எதிரான கூட்டம் என்று மட்டும் யாரும் நினைத்துவிட வேண்டாம். இந்தியாவின் ஜனநாயகத்தை, மக்களாட்சியை, பன்முகத்தன்மையை, ஒடுக்கப்பட்ட மக்களை, ஏழை எளிய மக்களை காப்பாற்ற வேண்டுமானால், பாஜக மீண்டும் ஒரு முறை ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் அனைத்து கட்சிகளும் மிகத் தெளிவாக இருக்கிறோம். இதில் கடைசிவரை உறுதுணையோடு இருக்க வேண்டும் என்று இன்று காலை பேசும் போது குறிப்பிட்டேன்.

Advertisment

2023 ஜுன் 23 ஆம் தேதி கூடினார்கள். 2024 மே மாதம் வெற்றி பெற்றார்கள் என்பது மட்டும் தான் வரலாற்றில் பதிவாக வேண்டும். மதச்சார்பற்ற கட்சிகளின் வெற்றி தான் தமிழ்நாட்டில் நடந்த அனைத்து வெற்றிகளுக்கும் காரணமாக அமைந்தது. அது போல் அகில இந்திய அளவிலும் ஒற்றுமைதான் முக்கியம் என்பதை வற்புறுத்திச் சொன்னேன். சில முக்கிய ஆலோசனைகளையும் அந்த கூட்டத்தில் நான் வழங்கினேன். உதாரணமாக, எந்த மாநிலத்தில் எந்த கட்சி செல்வாக்குடன் இருக்கிறதோ அந்த கட்சியின் தலைமையில் கூட்டணியை அமைத்துக் கொள்ளலாம். கூட்டணியாக அமைக்க முடியவில்லை என்றால் தொகுதி பங்கீடுகளை மட்டும் செய்து கொள்ளலாம். அதுவும் முடியவில்லை என்றால் பொது வேட்பாளர் அறிவித்துக் கொள்ளலாம். தேர்தலுக்கு பின் கூட்டணி அமைத்துக்கொள்ளலாம் என்பது சரியான நிலைப்பாடாக இருக்க முடியாது. அரசியல் கட்சிகளிடையே குறைந்த பட்சம் செயல் திட்டம் வகுக்கப்பட வேண்டும். இது போன்ற 7 பிரச்சனைகளை சரி செய்ய ஒருங்கிணைந்த நடவடிக்கை குழு அமைக்கப்பட வேண்டும். இது போன்று சிலவற்றை சொல்லியுள்ளேன்.

பாஜகவை வீழ்த்துவதை அனைத்து தலைவர்களும் ஒற்றை இலக்காக கொண்டுள்ளார்கள். பாஜவை வீழ்த்த அனைத்து கட்சிகளும் ஒன்று பட வேண்டும் என நினைத்தோம். அந்த ஒற்றுமை பாட்னாவில் ஏற்பட்டுள்ளது. ஒற்றுமையே வெற்றிக்கு அடிப்படை. நிச்சயமாக அகில இந்திய அளவில் பாஜக தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. இப்போது தான் கருவாகி உள்ளது. அது உருவாக இன்னும் சில மாதங்கள் ஆகலாம். பாட்னாவில் கூடினோம் மகிழ்ச்சியாக திரும்பியுள்ளோம்.

நன்றி சொல்லி முடிக்கும் வரை நான் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன். அதன் பின் விமானத்திற்கு நேரமானது. மதிய உணவிற்கு பின்பே செய்தியாளர் சந்திப்பை வைத்திருந்தார்கள். அதனால் அவர்களிடம் சொல்லிவிட்டு தான் வந்தேன். விமானத்தில் தான் என் மதிய உணவை உட்கொண்டேன். நான் எந்த நோக்கத்துடனும் வெளி வரவில்லை அதுதான் உண்மை” என்றார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe