Chief Minister assures they will not sign the National Education Policy even if we get Rs. 10,000 crore

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இரண்டு நாள் பயணமாக கடலூர் மாவட்டத்திற்கு பிப்ரவரி 21ஆம் தேதி சென்றிருந்தார். அங்கு, நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் பங்கேற்று பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர், முடிவுற்ற பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

Advertisment

இந்த நிலையில், இரண்டாம் நாளான இன்று (22-02-25) திருப்பயர் பகுதியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘பெற்றோர்களைக் கொண்டாடுவோம்’என்ற விழா நடைபெற்றது. தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் 7வது மண்டல மாநாடாக இந்நிகழ்வு நடந்தது. இந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த விழாவில், அப்பா (APPA) என்ற பெயரில் செயலியை வெளியிட்டார். மேலும், அமைச்சர்களான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சி.வி.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் கலந்துகொள்வதற்கு முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களைச் சந்தித்தார்.

Advertisment

இந்த விழாவில் பேசிய தமிழக முதல்வர், “நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததற்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் வழிகளில் எல்லாம் மக்களைச் சந்தித்தேன். எனவே தாமதாகிவிட்டது. ஒவ்வொரு மாணவர்களும் தமிழ்நாட்டின் சொத்து என்ற நினைப்புடன் வளர்த்து வருகிறோம். கல்வித்துறையில் உலக அளவிலான சாதனைகளை திராவிட மாடல் அரசு நிகழ்த்தி வருகிறது. அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொறுப்பு வகிக்கும் காலம் பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலம். 10, +2ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியை அவர் அதிகரித்துள்ளார். பள்ளிக்கல்வியில் நாட்டிலேயே 2வது இடத்திற்கு அன்பில் மகேஸ் உயர்த்திருக்கிறார்.பெற்றோர்களுக்கு இருக்கும் அதே அக்கறை அரசுக்கும் உள்ளது என்று கூறும் வகையில் உள்ளது இந்த மாநாடு. இல்லம் தேடி கல்வித் திட்டம் மூலம் இதுவரை 30 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர். அரசு பள்ளிகளுக்கு பெற்றோர், முன்னாள் மாணவர்கள் நன்கொடை அளித்து வருகிறார்கள். பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் 10, +2 மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் வழங்கப்படுகிறது. நமது அரசுக்கு கல்வி, மருத்துவம் இரு கண்கள். இந்தாண்டு மட்டும் பள்ளிக்கல்வித்துறை 44,000 கோடி ரூபாயும், உயர் கல்வித்துறைக்கு 200 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் இருந்து கல்வித்துறைக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோம் என்பதை நீங்கள் தெளிவாக உணர வேண்டும். அதனால் தான், தரமான கல்வி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு 2வது இடத்தில் இருக்கிறது.

ஒன்றிய அரசு ஒரு பக்கம் நம்மை பாராட்டினாலும், இன்னொரு பக்கம் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை தர மறுக்கிறது. ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ.2152 கோடியை நிறுத்தி வைத்திருக்கிறது. இது 43 லட்சம் பள்ளி குழந்தைகளுக்காக செலவு செய்ய வேண்டிய தொகை. தேசிய கல்வி கொள்கை என்பது, சமூக நீதிக்கு வேட்டு வைக்கிற கொள்கை. தமிழுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் வேட்டு வைக்கிற கொள்கை. எந்த மொழிக்கும் தனிப்பட்ட முறையில் நாம் எதிரிகள் இல்லை. ஆனால், எந்த மொழியை எங்களிடம் திணிக்க நினைத்தால் அந்த திணிப்பை நாங்கள் எதிர்ப்போம். அதில் உறுதியாக இருப்போம். இந்தியை திணிப்பதற்காக மட்டுமே நாம் அந்த கொள்கையை எதிர்க்கவில்லை. மாணவர்களை பள்ளிக்கூடங்களில் இருந்து விரட்டுகிற கொள்கை அது. 3, 5 ஆம் வகுப்புகளில் பொதுத் தேர்வு நடத்தவும், பொறியியல் கலை படிப்பிற்கும் நுழைவுத்தேர்வு நடத்தவும் தேசிய கல்வி கொள்கை சொல்கிறது. அதுமட்டுமல்லாமல், 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் படிக்க விருப்பமில்லாமல் இருந்தால் அவர்கள் விருப்பப்படி படிக்காமல் இருக்கலாம் என்று சொல்கிறது. இது நம்மை படிக்காமல் போ என்று சொல்வது போல் இல்லையா? இதையெல்லாம் பார்த்து தான் தேசியக் கல்விக் கொள்கை ஏற்கமாட்டோம் என்று உறுதியாக சொல்கிறோம்.

Advertisment

இந்த திட்டத்தில் கையெழுத்துப் போட்டால் தான் ரூ.2,000 கோடி கிடைக்கும். ரூ.10,000 கோடி பணம் கிடைக்கும் என்று சொன்னாலும் நாங்கள் கையெழுத்துப் போடமாட்டோம். 2,000 கோடிக்காக நாங்கள் கையெழுத்து போட்டால், 2,000 ஆண்டுக்கு பின்னோக்கி நமது தமிழ் சமுதாயம் போய்விடும். அந்த பாவத்தை, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஒருபோதும் செய்யமாட்டான். இந்தியை எங்கள் மீது திணிக்க நினைக்காதீர்கள். அப்படி திணிக்க நினைத்தால், தமிழர் என்ற இனமுண்டு, தனியே அவருக்கு குணமுண்டு என்பதை தமிழ்நாடு காட்டிவிடும். இருமொழி கொள்கையால் எந்தளவுக்கு உயர்ந்திருக்கிறோம் என்பதை தமிழக மாணவர்கள் இந்த உலகிற்கு நிரூபித்திருக்கிறார்கள். எங்கள் உயிரை விட மேலாக தமிழை மதிக்கிறவர்கள் நாங்கள் என்பதை நான் மத்திய அமைச்சருக்கு சொல்லிக் கொள்கிறேன். எங்கள் மொழியை அழிக்க எந்த ஆதிக்கம் வந்தாலும் அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று கூறினார்.