தொடர் மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரி நிரம்பியுள்ளது. பாதுகாப்பு கருதி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்தத் தண்ணீர் எண்ணுர் கடலில் கலக்கும். தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் புழல் ஏரி கரையோரம், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், நாரவாரிக்குப்பம், வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.முன்னதாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியில் தண்ணீர் நிரம்பியதால் மாதவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம் புழல் ஏரியின் மதகுகள் வலிமை உள்ளதாக இருக்கிறதா என்று ஆய்வு செய்தார்.