Chennai District Secretaries  intimidated by Edappadi! Candidates Selection

Advertisment

சென்னை மாநகராட்சி வார்டுகளுக்கான வேட்பாளர்களை முடிவு செய்வதில் எடப்பாடி பழனிச்சாமியை மிரட்டியிருக்கிறார்கள் அதிமுக மாவட்ட செயலாளர்கள். இந்த விவகாரம் அதிமுகவின் சீனியர் தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

சென்னை பெருநகர மாநகராட்சியில் 200 வார்டுகள் இருக்கின்றன. இந்த முறை சென்னை மாநகராட்சியைக் கைப்பற்ற வேண்டும் எனத் திட்டமிட்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.சும், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்.சும் சென்னையில் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களைக் களமிறக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். இதற்காக, தேர்தல் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்.

தென்சென்னையின் தேர்தல் பொறுப்பாளராக வைத்தியலிங்கம் நியமிக்கப்பட்டார். பல்வேறு ஆய்வுகளுக்கும் ஆலோசனைகளுக்கும் பிறகு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 139-வது வார்டுக்கு அதிமுகவின் தென்சென்னை தெற்கு மாவட்ட துணைச்செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான கடும்பாடி தேர்வு செய்யப்பட்டார்.

Advertisment

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., முனுசாமி, ஜெயக்குமார், வைத்தியலிங்கம் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கடும்பாடியை தேர்வு செய்தனர். காரணம், 1996-ல் சுயேட்சையாக நின்று ஜெயித்தவர் கடும்பாடி. எம்.ஜி.ஆரின் சிஸ்யர் எனப் போற்றப்பட்டவர். கட்சியின் தீவிர விசுவாசி. 139-வது வட்டத்தில் மக்களின் ஏகோபித்த ஆதரவு அவருக்கு இருக்கிறது. தொடர்சியாக அப்பகுதியில் மக்கள் பணி செய்து வருபவர். தென்சென்னையில் கடும்பாடியை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்கிற அளவுக்கு மக்களின் அபிமானத்தைப் பெற்றிருப்பவர். கட்சியில் மாவட்ட அளவில் உயர் பொறுப்பில் இருக்கிறார். இத்தனை தகுதிகள் இருப்பதும், வெற்றி வாய்ப்புள்ளவர் என்பதாலும் கடும்பாடியை வேட்பாளராகக் கட்சியின் மூத்த தலைவர்கள் தேர்வு செய்தனர். வேட்பாளர் இறுதிப்பட்டியலில் அவரது பெயர்தான் இடம் பெற்றிருந்தது.

Chennai District Secretaries  intimidated by Edappadi! Candidates Selection

இந்த நிலையில் மாவட்டச் செயலாளர் விருகை ரவி, கடும்பாடிக்கு சீட் கிடைக்கக்கூடாது என கங்கணம் கட்டினார். கரோனா வைரஸ் தாக்கியதில் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்கிற கட்டுப்பாட்டினை உதறிவிட்டு, சென்னையின் மாவட்டச் செயலாளர்களான தி.நகர் சத்யா, பாலகங்கா, வெங்கடேஷ்பாபு, ராஜேஷ் ஆகிய 4 பேரையும் தன்னுடன் அழைத்துச் சென்று எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார் மாவட்ட செயலாளர் விருகை ரவி.

Advertisment

அந்தச் சந்திப்பில், “கடும்பாடிக்கு சீட் கொடுக்கக் கூடாது" என விருகை ரவி சொல்ல, "வெற்றி வாய்ப்புள்ளவர்களுக்குத்தான் சீட் கொடுக்க வேண்டும். அந்த வட்டத்தில் கடும்பாடிக்கு வெற்றி வாய்ப்பு நன்றாக இருக்கிறது என எல்லாவித ரிப்போர்ட்டும் சொல்லுது. பிறகெதற்கு அவருக்கு சீட் கொடுக்கக் கூடாது என சொல்கிறீர்கள்? உங்களுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை வேட்பாளர்கள் லிஸ்டில் காட்டாதீர்கள்" எனச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், விருகை ரவியும் அவருடன் சென்ற மற்ற 4 மா.செ.க்களும் இதனை ஏற்கவில்லை. மாறாக, "வெற்றி வாய்ப்பெல்லாம் பார்க்கக் கூடாது; பகுதிச் செயலாளர்களுக்கும் வட்டச் செயலாளர்களுக்கும் வாய்ப்பு தர வேண்டும். அதுதான் எங்களுடைய முடிவு" என்று வாக்குவாதம் செய்திருக்கிறார்கள்.

இதனை ரசிக்காத எடப்பாடி பழனிச்சாமி, "நீங்க சொல்ற பகுதிச் செயலாளருக்கு வாய்ப்பு தந்தால் 10 ஓட்டுகூட வாங்க மாட்டாரு. இதுதான் நீங்க கட்சியை வளர்த்து வைத்திருக்கிற லட்சணமா?" என்று எகிற, "அதெல்லாம் முடியாதுங்க. கடும்பாடிக்கு சீட் கொடுக்கக் கூடாது. எங்களையும் மீறி வாய்ப்புக் கொடுத்தால் சென்னையில் அதிமுக கவுன்சிலர்கள் யாரையும் ஜெயிக்க விடமாட்டோம். உங்களுக்குத் தெரிந்ததை நீங்க பாருங்க; எங்களுக்குத் தெரிந்ததை நாங்க பார்க்கிறோம்" என்று எடப்பாடியை மிரட்டும் தொணியில் கோபமாக பேசியிருக்கிறார்கள்.

இப்படி வாக்குவாதம் நடப்பதையறிந்து ஓபிஎஸ், முனுசாமி, ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் விருகை ரவியை தொடர்பு கொண்டு, "நீங்க நடந்துகிறது சரியில்லை. கட்சி தலைமை ஒரு முடிவு செய்தால் அதை நீங்கள் மீறுவீர்களா?"என்று கேட்க, அவர்களையும் எடுத்தெறிந்து பேசியிருக்கிறார் விருகை ரவி. இவருக்கு ஆதரவாக மற்ற மா.செ.க்களும் குரல் கொடுத்ததால், வேறு வழியின்றி அவர்களின் மிரட்டல்களுக்கு பயந்து கடும்பாடியின் பெயரை நீக்க சம்மதித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கடும்பாடியைப்போல மக்களிடம் செல்வாக்கு உள்ள மலைராஜன் போன்ற பலருக்கும் வாய்ப்பளிக்க விடவில்லை விருகை ரவி.

இதுகுறித்து நம்மிடம் விவரித்த அதிமுக சீனியர் நிர்வாகிகள், “தமிழகத்தில் அதிமுகவுக்கு ஒங்கிணைப்பாளராக ஓபிஎஸ்சும், இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ்சும் இருந்தாலும், சென்னையைப் பொறுத்தவரை கட்சியின் தலைவர்களாக மேற்கண்ட 5 மா.செ.களும், கட்சியின் மா.செ.க்களாக எடப்பாடியும் பன்னீரும் இருக்கிறார்கள். இதுதான் அதிமுகவின் தற்போதைய நிலை. அதனால்தான் கட்சித் தலைமையையே இந்த மா.செ.க்களால் மிரட்ட முடிகிறது” என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.