Skip to main content

"வீழ்வேனென்று நினைத்தாயோ!  மீண்டு வருவேன்! நான் சென்னை!" -நடிகர் பார்த்திபன் குரலில் நம்பிக்கை வீடியோ! 

cc

 

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸின் பரவலை தடுக்க, மத்திய சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்றி தமிழக அரசு தீவிர நோய்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், நாட்டிலேயே தினமும் அதிகமான கரோனா பரிசோதனை நடைபெறும் மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழ்நாட்டில், சென்னையில் நோய் தொற்று பரவல் அதிகம் இருப்பதாகவும் கண்டறியப்படுகிறது.

 

சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட தலைநகர் சென்னையில், இந்த வைரஸை கட்டுப்படுத்தும் பணிகளையும், இதுபற்றிய விழிப்புணர்வு பணிகளையும் தமிழக உள்ளாட்சித்துறையின்கீழ் செயல்படும் சென்னை மாநகராட்சி கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ந்து செய்து வருகிறது. 

 

30 லட்சத்துக்கும் மேலான குடிசை பகுதி மக்கள் வசிக்கும் சென்னையில், வீதி விதியாக களப்பணியாளர்கள் கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நோயில் இருந்து சென்னையை காப்போம் என்று மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதை விடுத்து, பயத்தையும் பீதியையும் உண்டாக்கியதால் சென்னையை விட்டு பலரும் சொந்த ஊர்களுக்கு கிளம்பிச் சென்றனர்.  

 

இதனால், சென்னையில் வசிப்பவர்கள் சோர்வடைந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, சென்னை மாநகர் முழுவதும் நாள்தோறும், வீதிதோறும் காய்ச்சல் முகாம்கள் என்கிற மைக்ரோ திட்டத்தை ஒருபுறம் செயல்படுத்தி நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும், மறுபுறம் "வீழ்வேனென்று நினைத்தாயோ! மீண்டு வருவேன்! நான் சென்னை!" என்கிற வாசகத்தோடு வரலாற்றில் சென்னை கடந்து வந்த சோதனைகளையும், சாதனைகளையும் பட்டியிலிட்டு சென்னையின் நம்பிக்கை குரலாக தமது சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்  உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி.  

 

வந்தாரை வாழவைக்கும் சென்னை, அனைவரையும் அரவணைக்கும் அன்னை என்று வழக்கமாக குறிப்பிட்டாலும், சென்னை நகரமாக தோன்றியது முதல், பல பேரிடர்களை தகர்த்தெறிந்து நிமிர்ந்து நிற்கும் ஆற்றல் பெற்றதை பெருமைக்குரிய வரலாற்றுச் சான்றுகளுடன் தினமும் தமது சமூக வலைதள பகுதிகளில் பதிவிட்டு வந்த எஸ்.பி.வேலுமணி, 'சென்னை எதனையும் வெல்லும், கரோனாவையும் வெல்லும் ' என்பதையும் அழுத்தமாக கூறி வருகிறார்.

 

இதன் தொடர்ச்சியாக "வீழ்வேனென்று நினைத்தாயோ, மீண்டு வருவேன்! நான் சென்னை!" என்ற வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார். சென்னையின் பெருமைகளை பறைசாற்றும் அந்த வீடியோவில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனக்கே உரித்தான பாணியில் பின்னணி குரல் கொடுத்து, உயிரோட்டத்தை வேகப்படுத்தி இருக்கிறார். 

 

வீடியோவில் பார்ப்பது மட்டுமின்றி, அதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வரிகளை படித்தாலே, கம்பீரமாக ‘நான் சென்னை ' என்று பெருமையுடன் சொல்ல தூண்டுகிரது அந்த வைர வரிகள்! 

 

ccc

 

தடைகள் ஆயிரம் தகர்த்தவன், 
படைகள் ஆயிரம் பார்த்தவன், 
பஞ்சம் கண்டவன், பகையும் கண்டவன்
பேரலையைக் கண்டவன், பேரிடரும் கண்டவன்
பெயர் மாறி, உருமாறி வலுவானவன்,
எதுவந்த போதும் நிறம் மாறாதவன் 
வந்தவர் எத்தனை, போனவர் எத்தனை 
கண்டது எத்தனை, கொண்டது எத்தனை 
என் பலம் எனதல்ல, என்னில் இரண்டற கலந்து வாழும் 
என் மக்களே என் பலம்.
நீரால், நெருப்பால், காற்றால், நிலத்தால், உளத்தால் 
எவ்வழி இடர் வரினும், தளர்வரினும் என் கரம் இறுகப் பற்றும் 
என் மக்களே என் பலம். 
எனக்கு எப்பொழுதும் என்றைக்கும் இன்றைக்கும் தோள் கொடுப்பர்
கரம் பற்றி அல்ல, முகத்தில் கவசம் அணிந்து சமூக விலகலோடு.
வீழ்வேனென்று நினைத்தாயோ!
மீண்டு வருவேன்!
நான்சென்னை!. 

 

 

என்று சென்னையே பேசுவதாக அந்த வீடியோ வித்தியாசமாக கருத்துருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

 

கரோனா காலத்தில் இந்த நோய் தொற்றை தடுக்க  தொடர்ந்து  விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும்  அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின், இந்த வீடியோ, சென்னை மக்களின் தன்னம்பிக்கையை உயர்த்தும் பெருமைக் குரலாகவே ஒலிக்கிறது.

 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !