
அதிமுக துவங்கப்பட்டு 52வது ஆண்டை அக்கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று (17ம் தேதி) கொண்டாடி முடிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவின் தோழி சசிகலா நேரடியாக ஓ.பி.எஸ்.க்கு பச்சை சிக்னல் கொடுத்துள்ளார்.
நேற்று சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ‘ஓபிஎஸ் - டிடிவி தினகரன் இணைந்தது மற்றும் உங்களை சந்திப்பதற்காக ஓபிஎஸ் காத்திருப்பதாகக் கூறப்படுவது...’ என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, பதிலளித்த அவர், “அவரெல்லாம் எங்கள் கட்சிக்காரர்” என்றார்.

முன்னதாக பலமுறை ஓ.பி.எஸ். சசிகலாவை விரைவில் சந்திப்பேன் என்று தெரிவித்துவந்த நிலையில், தற்போது சசிகலா ஓ.பி.எஸ்.சை தன் கட்சிக்காரர் என வெளிப்படையாக பேசியிருப்பது ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம், இரட்டை இலையை முடக்குவோம் என்று கூறி ஓ.பி.எஸ் தரப்பு, எடப்பாடி தரப்பின் நிம்மதியை குலைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து விசாரித்தபோது, ‘அ.தி.மு.கவின். தலையெழுத்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொங்கிக்கொண்டு இருக்கிறது. எடப்பாடி நடத்திய பொதுக்குழுவின் தீர்மானங்கள் செல்லாது என்று ஓ.பி.எஸ். தரப்பு தொடர்ந்த வழக்கில், எடப்பாடி விளக்கம் அளிக்கவேண்டும் என்று அங்குள்ள உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. தேர்தல் ஆணையத்துக்கும் இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறதாம். இப்போது நீதிமன்றங்கள் எந்த மாதிரியான தீர்ப்பைத் தரும் என்று அனுமானிக்க முடியாத நிலை இருந்து வருகிறது.
இந்த நிலையில், இரட்டை இலை சின்னத்தை நாங்கள் முடக்கிவிடுவோம். இதன்மூலம் எங்கள் பலத்தை நிரூபிப்போம் என்று ஓ.பி.எஸ். தரப்பு இப்போது அழுத்தமாகச் சொல்லத் தொடங்கி இருக்கிறது. கூடுதலாக சசிகலாவும், ஓ.பி.எஸ்.க்கு கேட்டை ஓப்பன் செய்திருக்கிறார். இதனால், உள்ளபடியே இரட்டை இலைக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று எடப்பாடி தூக்கத்தைத் தொலைத்திருக்கிறாராம்’ எனச் சொல்கிறார்கள்.