Advertisment

'மத்திய அரசோ, தமிழக அரசோ ஆர்வம் காட்டவில்லை...' போராட்டத்தை அறிவித்த பாமக ராமதாஸ்  

'Central government, Tamil Nadu government is not interested ...' PMK Ramadas announced the protest

தமிழ்நாட்டில் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள தொடர்வண்டித் திட்டங்களுக்கான செலவு மதிப்பீடுகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதை மத்திய அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆனாலும் கூட, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வழி வகுக்கக்கூடிய அந்தத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த மத்திய அரசும், தொடர்வண்டித்துறை நிர்வாகமும் முன்வராதது ஏமாற்றமளிப்பதாக பாமகநிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் வட மாவட்டங்கள் வளர்ச்சியடையாதவையாக உள்ளன. வட மாவட்டங்களில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை பெருக்கும் நோக்கத்துடன் திண்டிவனம் - நகரி, திண்டிவனம் - திருவண்ணாமலை, சென்னை- மாமல்லபுரம் - கடலூர், திருப்பெரும்புதூர் - கூடுவாஞ்சேரி ஆகிய புதிய தொடர்வண்டிப் பாதை திட்டங்கள் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அரங்க.வேலு மத்திய தொடர்வண்டித்துறை இணையமைச்சராக பொறுப்பு வகித்த போது அறிவிக்கப்பட்டன. இந்தத் திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு எளிதாக கிடைத்து விடவில்லை. மத்திய அமைச்சரவையிலும், மத்திய திட்டக்குழுவிலும் போராட்டங்களை நடத்தித் தான் பெற முடிந்தது. தமிழ்நாட்டிற்கான தொடர்வண்டித் திட்டங்களைப் பெற மத்திய அரசில் நடத்தப்பட்ட போராட்டங்கள் பற்றி பாட்டாளி மக்கள் கட்சிக்குத் தான் தெரியும்.

Advertisment

ஆனால், 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் மத்திய அரசோ, தமிழக அரசோ ஆர்வம் காட்டவில்லை. அதனால், இந்தத் திட்டப்பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. இவை மட்டுமின்றி, மேலும் பல புதிய தொடர்வண்டிப் பாதை திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் 9 புதிய திட்டங்களில் இராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே 17.20 கி.மீ தொலைவுக்கு புதிய பாதை அமைக்கும் திட்டத்திற்கு மட்டும் ரூ.59 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திண்டிவனம் - நகரி, திண்டிவனம் - திருவண்ணாமலை, சென்னை - மாமல்லபுரம் - கடலூர், அத்திப்பட்டு - புத்தூர், ஈரோடு - பழநி, தருமபுரி - மொரப்பூர், திருப்பெரும்புதூர் - கூடுவாஞ்சேரி, மதுரை- அருப்புகோட்டை- தூத்துக்குடி ஆகிய 8 தொடர்வண்டித் திட்டங்களுக்கு அடையாளமாக தலா ரூ.1000 மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இதே நடைமுறை தான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் இந்தத் தொடர்வண்டித் திட்டங்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நிறைவேற்றி முடிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை.

இந்தத் திட்டங்களில் ஒன்றான திண்டிவனம் - நகரி புதிய பாதைத் திட்டம் கடந்த 2006-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட போது, அதன் மதிப்பு ரூ.582.80 கோடி மட்டும் தான். ஆனால், கடந்த 13 ஆண்டுகளாக இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படாததால், பணிகள் நடைபெறவில்லை. 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தத் திட்டத்தை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், இத்திட்டம் முடிக்கப்படும் போது அதன் மதிப்பு ரூ.3,444 கோடியாக உயரும் என்றும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இது 591% உயர்வு ஆகும். திட்ட மதிப்பு இந்த அளவுக்கு அதிகரிக்க அரசு அனுமதித்திருக்கக்கூடாது.

அதேபோல், கிழக்குக் கடற்கரை தொடர்வண்டிப் பாதை திட்டத்தின் அங்கமான மயிலாடுதுறை- காரைக்குடி அகலப் பாதை திட்டத்தின் மதிப்பு 325% அதிகரித்துள்ளது. திண்டிவனம் - திருவண்ணாமலை, சென்னை - மாமல்லபுரம் - கடலூர், திருப்பெரும்புதூர் - கூடுவாஞ்சேரி ஆகிய திட்டங்களின் மதிப்புகளும் குறைந்தபட்சம் 400% அதிகரித்திருப்பதாக தொடர்வண்டித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இத்திட்டங்களுக்கு உரிய காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப் படாதது தான் அவற்றின் திட்டச் செலவு அதிகரித்ததற்கு மிகவும் முக்கியமான காரணம் ஆகும்.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட தொடர்வண்டித் திட்டங்கள் 13 ஆண்டுகள் முதல் 16 ஆண்டுகள் வரை கிடப்பில் போட்டு வைத்திருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பீட்டில் ஆண்டுக்கு 7% முதல் 10% ஒதுக்கீடு செய்திருந்தாலும் கூட இந்த பணிகள் எப்போதோ முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்திருக்கும். வட மாவட்டங்களின் வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் பெருமளவில் பங்களிப்பை செய்திருக்கும். ஆனால், தமிழ்நாட்டிற்கான, குறிப்பாக வட மாவட்டங்களுக்கான திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டிற்கான தொடர்வண்டித் திட்டங்கள் இனியும் தாமதிக்கப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாது. திண்டிவனம் - நகரி, திண்டிவனம் - திருவண்ணாமலை, சென்னை - மாமல்லபுரம் - கடலூர், திருப்பெரும்புதூர்- கூடுவாஞ்சேரி, தருமபுரி - மொரப்பூர் ஆகிய தொடர்வண்டிப் பாதை திட்டங்களுக்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து முடிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தருமபுரி ஆகிய வருவாய் மாவட்டங்களில் உள்ள மத்திய அரசு மற்றும் தொடர்வண்டித்துறை அலுவலகங்கள் முன் வரும் 16-ஆம் தேதி சனிக்கிழமை தொடர்முழக்கப் போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டங்களுக்கு அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள் தலைமை ஏற்பார்கள். பா.ம.க.வின் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் பெருந்திரளாக கலந்து கொள்வார்கள்' எனத்தெரிவித்துள்ளார்.

struggle ramadas pmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe