தமிழக அரசு செய்யாததை மத்திய அரசு செய்திருக்கிறது - அண்ணாமலை

The central government has done what the Tamil Nadu government has not done - Annamalai

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 'என் மண்; என் மக்கள்’ எனும் நடைபயணத்தை கடந்த 28 ஆம் தேதி இராமேஸ்வரத்திலிருந்து தொடங்கினார். இந்த நிலையில், சனிக்கிழமை அன்று ராமேஸ்வரம், மண்டபம், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் நடைபயணத்தை மேற்கொண்ட அண்ணாமலை, நேற்று மதியம் 12 மணி அளவில் முதுகுளத்தூர் மற்றும் பரமக்குடி பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது, அங்கு பலதரப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அதன் பின்னர் முதுகுளத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர், அந்தக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “கடந்த 70 ஆண்டு காலமாகத்தமிழக அரசியலை எல்லாம் நீங்கள் தெரிந்து வைத்திருப்பீர்கள். குறிப்பாக தி.மு.க ஆட்சியை உன்னிப்பாக கவனித்திருப்பீர்கள். அவர்களின் ஆட்சியில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஏதாவது ஒருநலத்திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்குமா? என்றால் கிடையாது. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் என ஒவ்வொரு தேர்தல்களிலும் வெற்றி பெறுகிறார்கள். ஆனால், இந்த மாவட்டத்தைத்தொடர்ந்து வறட்சி மாவட்டமாக வைத்திருக்கிறார்கள். இதை வளமான மாவட்டமாக மாற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால், பா.ஜ.க தொண்டர்களான நாங்கள் பாதயாத்திரையாக வந்து உங்களிடம்ஒரு கோரிக்கை வைக்கிறோம். அதாவது, வருகிற நாடாளுமன்றத்தேர்தலில் மோடியை வெற்றி பெறச் செய்து மீண்டும் பிரதமராக அறிவித்து இந்த நல்ல ஆட்சியைத்தொடரச் செய்ய வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை.

சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் என் முன்பாக தாய்மார்கள், முதியவர்கள், பெண்கள் என அனைவரும் நின்று கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உள்பட பொதுமக்கள் மனதில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணம் பிரதிபலிக்கிறது. ஒரே ஒரு குடும்பம் இரும்புச் சிறையை போல் தமிழகத்தை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. ஒரே குடும்பத்தில் இருந்து வருபவர்கள் மட்டும் ஆட்சியாளராக இருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

ஒரு குழந்தை படித்து, வளர்ந்து ஒரு நல்ல பதவிக்கு வர வேண்டும் என்றால் ஒரே குடும்பம் ஆட்சி செய்தால் அது சாத்தியம் ஆகாது. குடும்ப அரசியல் என்பது பொதுமக்களின் வளர்ச்சியை அடியோடு நாசப்படுத்திவிடும். கடந்த 2021ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் அடுத்த 5 ஆண்டுகளில் மூன்றரை லட்சம் இளைஞர்களுக்கு அரசுவேலை வழங்கும் என்று சொன்னார்கள். தமிழகத்தில் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றித்தவிக்கின்றனர். தற்போது தி.மு.க ஆட்சி அமைத்து 28 மாதங்கள் ஆகின்றன. இந்த நாட்களில் எத்தனை இளைஞர்களுக்கு நீங்கள் அரசு வேலை வழங்கி உள்ளீர்கள் என நான் கேள்வி எழுப்புகிறேன். குரூப்-4 தேர்வை நடத்திவிட்டு அதன் மூலம் 1,400 பேருக்குக் கூடக் கடந்த ஓராண்டில் வேலை கொடுக்க முடியவில்லை. ஆனால், 2023 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை வாங்கிக் கொடுப்போம் என்று மோடி தெரிவித்தார். அதுபோல், தற்போது வரை ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலை கொடுக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள நான்கரை லட்சம் பேருக்கு வரும் டிசம்பருக்குள் அரசு வேலை வழங்கப்படும். அதற்கு வருகிற நாடாளுமன்றத்தேர்தலில் பா.ஜ.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்று கூறினார்.

Annamalai
இதையும் படியுங்கள்
Subscribe