Advertisment

"பெரியண்ணன்” பாணியில் மத்திய பா.ஜ.க. அரசு! -டி.ஆர்.பாலு கடும் கண்டனம்!

T. R. Baalu

Advertisment

"நாட்டில் நிலவும் அசாதாரண சூழலை உச்சநீதிமன்றமே உணர்ந்து தீர்வுகாண முன்வருகின்ற நேரத்தில் - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதைப் பற்றியும் கவலைப்படாமல் நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ரத்து செய்திருப்பது கண்டனத்திற்குரியது" என்றும் "பெரியண்ணன்” பாணியில் செயல்படும் போக்கை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக கைவிட்டு “கருத்தொற்றுமை” “ஜனநாயகம்” என்ற உன்னதமான பாதைக்குத் திரும்ப வேண்டும்!" என்றும் திமுக பொருளாளரும் நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கரோனா நோய்த் தொற்றைக் காரணம் காட்டி நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரை மத்திய பா.ஜ.க. அரசு ரத்து செய்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“இந்திய - சீன உறவு மிக மோசமான நிலையில் இருக்கிறது” என்று ஒருபுறம் நாட்டின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியுள்ள, எல்லையில் பிரச்சனை - இன்னொரு பக்கம் தலைநகர் டெல்லியின் எல்லையில் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்து விவசாயிகள் இரவு பகலாக தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தும் போராட்டம் என்று மிக தலையாய பிரச்சனைகள் இன்றைக்கு அணிவகுத்து நிற்கின்றன.

Advertisment

இப்பிரச்சனைகள் குறித்தெல்லாம் விவாதிக்க வேண்டிய மிக முக்கியமான காலகட்டத்தில் - நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரை நடத்த மத்திய பா.ஜ.க. அரசு விரும்பவில்லை என்பது மிகுந்த கவலையளிக்கிறது.

“விவசாயிகள் போராட்டம் தேசிய பிரச்சினையாக மாறலாம்” என்று எச்சரித்துள்ள உச்சநீதிமன்றம் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. நாட்டில் நிலவும் அசாதாரண சூழலை உச்சநீதிமன்றமே உணர்ந்து தீர்வுகாண முன்வருகின்ற நேரத்தில் - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதைப் பற்றியும் கவலைப்படாமல் நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ரத்து செய்திருப்பது கண்டனத்திற்குரியது.

“திசைதிருப்பும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு” “போராடும் விவசாய அமைப்புகளைக் கொச்சைப்படுத்தி” - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நாட்டின் முக்கியமான பிரச்சினைகள் குறித்து கருத்துச் சொல்வதையும், விவாதம் நடத்துவதையும் தடுப்பது ஜனநாயக மரபு அல்ல!

நம் நாட்டின் இதயம் ஜனநாயகம்தான். அந்த இதயம் நாடாளுமன்றத்தில் நடைபெறும் அர்த்தமுள்ள விவாதங்களின் மூலம்தான் துடித்துக் கொண்டிருக்கிறது என்பதை ஏனோ பிரதமர் நரேந்திர மோடி உணர முன்வராதது கவலையளிக்கிறது. ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் வலிமை மிக்க இந்திய ஜனநாயகத்தின் இரு சக்கரங்கள். ஆனால் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்த உலகம் போற்றும் ஜனநாயக நெறிமுறைகள் மீறப்படுகின்றன; நசுக்கப்படுகின்றன!

இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் குளிர்காலக் கூட்டத்தை ரத்து செய்வது குறித்துக் கலந்து ஆலோசனை கூட நடத்தாமல் - எதேச்சதிகாரமாக முடிவு எடுத்து “நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நடக்காது” என்று அறிவிப்பது ஏற்றுக்கொள்ள இயலாத நடைமுறை.

விவாதங்கள் ஏதுமின்றி - மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை அறிந்துகொள்ள மனமின்றி - அவசரச் சட்டங்களை நிறைவேற்றுவதே மார்க்கம் என்று ஒரு ஆட்சியை நடத்தலாம் என்று மத்திய பா.ஜ.க. அரசு இன்னமும் நினைத்துக் கொண்டிருப்பது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை.

ஆகவே, எதிர்க்கட்சிகளைப் புறக்கணித்து “பெரியண்ணன்” பாணியில் இதுபோன்று செயல்படும் போக்கை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக கைவிட்டு “கருத்தொற்றுமை” “ஜனநாயகம்” என்ற உன்னதமான பாதைக்குத் திரும்ப வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

T.R.Baalu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe