/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/judgement-art_47.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்த 66 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து விஷச் சாராய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அதே சமயம் இது தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இந்தச் சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என அதிமுக சார்பில் இன்பதுரை, பாமக சார்பில் கே.பாலு, பாஜக சார்பில் ஏற்காடு ஏ.மோகன்தாஸ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படாமல் இருந்து வந்தது. இத்தகைய சூழலில் தான் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமார், பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று (20.11.2024) வழங்கியது. அதில், ‘கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்படுகிறது. இதில் எவ்வித குறுக்கீடும் இருக்கக் கூடாது. இந்த வழக்கை சிஐபி அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விசாரணைக்காக மாநில காவல்துறையினர் தங்களிடம் உள்ள ஆவணங்களை சிஐபி அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதோடு சிபிஐ விசாரணைக்கு நீதிபதிகள் எவ்வித காலக்கெடுவும் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், ‘கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. கள்ளச்சாராய மரணங்கள் குறித்து மடியில் கனமில்லை என்றால் திமுக அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யக் கூடாது. சி.பி.ஐ. விசாரணை மூலம் உயிரிழந்த 67 பேருக்கும் உரிய நீதி கிடைக்கட்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசுகையில், ‘கைப்பற்றப்பட்ட 570 கோடி ரூபாய் யாருக்கு சொந்தம் யாருடைய பணம் என்று நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டும் என்று திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று 2017-18 இல் உத்தரவிடப்பட்டது. 2024 இல் சிபிஐ இந்த வழக்கு விசாரணையைத் துவக்கி உள்ளதா?. விசாரணை நடத்தியுள்ளதா என்பதை நட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். சிபிஐ எவ்வாறு விசாரணை செய்யும் என்பதற்கு இதைவிட வேறு எடுத்துக் காட்டு தேவையில்லை. எடப்பாடி பழனிச்சாமி கேட்பது போல உச்ச நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லையென்றாலும் கூட கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உடனடியாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துரிதமாக நடவடிக்கை எடுத்தார். அந்த வகையில் செங்கல்பட்டு, சேலம், காஞ்சிபுரம் போன்ற பல்வேறு மருத்துவமனையில் இருந்து ஏறத்தாழ 57 மருத்துவர்களை அனுப்பினார். மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சம்பந்தப்பட்ட குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்ட செய்யப்பட்டார்கள். எல்லா விதமான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rs-bharathi-art-pm_1.jpg)
எடப்பாடி பழனிச்சாமி யோக்கியரை போல மேல்முறையீடு செய்யக்கூடாது சிபிஐ விசாரணைக்குத் தயாராக வேண்டும் எனக் கூறுகிறார். வழக்கறிஞர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி சட்ட ஒழுங்கு கெட்டுவிட்டது என்று பேசுகிறார். இவருடைய ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்த ஏழுமலையின் மருமகன் சென்னையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழகில் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் தீர்ப்பு வந்தது” எனப் பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)