Advertisment

கர்நாடகத்தின் நோக்கம் பிழையானது! ராமதாஸ்

காவிரி நீரை கர்நாடகம் சட்டவிரோதமாக பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும், மிகக்குறைந்த அளவே தண்ணீர் இருந்தாலும் கூட அதை நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் தமிழகத்துடன் பகிர்ந்து கொள்ளாமல், காவிரியில் வரும் தண்ணீர் முழுவதும் தமக்கு மட்டுமே சொந்தமானது என்று கருதி செயல்படும் கர்நாடகத்தின் நோக்கம் தான் பிழையானது என்றும் கூறியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காவிரி நீரில் தமிழகத்திற்குரிய பங்கை வழங்கும்படி காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள ஆணையை செயல்படுத்தாத கர்நாடக அரசு, அங்குள்ள அணைகளில் இருக்கும் தண்ணீரை அதன் சொந்தத் தேவைக்காக பயன்படுத்தி வருகிறது. காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான கர்நாடக அரசின் இந்த சட்டவிரோத செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

Advertisment

ramadoss

தில்லியில் கடந்த மே மாதம் 28-ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், காவிரி நீரில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய ஜூன் மாதத்திற்கான பங்காக 9.19 டி.எம்.சி நீரை உடனடியாக திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு ஆணையிடப்பட்டது. அதன்பின் 4 வாரங்களாகியும் காவிரியில் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீரைக் கூட கர்நாடகம் திறந்துவிடவில்லை. கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை என்பதால், தண்ணீர் திறக்க முடியாது என்றும் பருவமழை பெய்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியும் என்றும் கர்நாடக அரசு கூறி வருகிறது.

ஆனால், கர்நாடகத்தில் காவிரி ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் உள்ள நீரையும், அந்த அணைகளுக்கு வரும் தண்ணீரையும் காவிரி மேலாண்மை ஆணையம் உள்ளிட்ட எந்த அமைப்பின் அனுமதியும் இல்லாமல் சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகிறது. நடப்பு நீர் ஆண்டு கடந்த ஜுன் ஒன்றாம் தேதி தொடங்கியது. அன்றிலிருந்து கடந்த 21-ஆம் தேதி வரையிலான 3 வாரங்களில் மட்டும் கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய நான்கு அணைகளில் இருந்து 2.544 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் பயன்படுத்தியிருக்கிறது. கடந்த ஜூன் ஒன்றாம் தேதி முதல் இப்போது வரை மேற்கண்ட 4 அணைகளுக்கும் 1.814 டி.எம்.சி நீர் மட்டுமே வந்துள்ள நிலையில், அந்த நீரையும் ஏற்கனவே அணைகளில் இருந்த நீரையும் சட்டவிரோதமாக தனது பாசனத் தேவைகளுக்காக கர்நாடகம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இது பெரும் அநீதியாகும்.

ஜூன் மாதத்தில் தமிழகத்தின் பங்காக 9.19 டி.எம்.சி. தண்ணீர் திறக்கும்படி காவிரி மேலாண்மை ஆணையம் ஆணையிட்டுள்ள நிலையில், அதை நிறைவேற்றுவது தான் கர்நாடக அரசின் முதன்மைக் கடமையாக இருக்க வேண்டும். ஆனால், கர்நாடக அரசு அதை செய்யாமல் அணைகளில் உள்ள நீரை தன்னிச்சையாக பயன்படுத்திக் கொள்வதுடன், மாநிலம் முழுவதும் உருவாக்கப்பட்டுள்ள ஏரிகள் மற்றும் குளங்களிலும் சேமித்து வைக்கிறது. இது சட்டவிரோதமான செயல். இதை மன்னிக்க முடியாது.

கேரளத்தில் மிகவும் தாமதமாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை பல்வேறு காரணங்களால் இன்னும் தீவிரமடையாததால் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளுக்கு சொல்லிக் கொள்ளும்படியாக தண்ணீர் வரவில்லை. 21-ஆம் தேதி நிலவரப்படி கபினி அணைக்கு வினாடிக்கு 677 கன அடி, கிருஷ்ணராஜ சாகர் 153 கன அடி, ஹாரங்கி 297 கன அடி, ஹேமாவதி 270 கன அடி என்ற அளவில் தான் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 4 அணைகளிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாகவே 13.21 டி.எம்.சி தண்ணீர் தான் உள்ளது. இதில் கர்நாடகம் பயன்படுத்திய 2.544 டி.எம்.சி என்பது மிக மிகக் குறைவு. ஆனால், மிகக்குறைந்த அளவே தண்ணீர் இருந்தாலும் கூட அதை நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் தமிழகத்துடன் பகிர்ந்து கொள்ளாமல், காவிரியில் வரும் தண்ணீர் முழுவதும் தமக்கு மட்டுமே சொந்தமானது என்று கருதி செயல்படும் கர்நாடகத்தின் நோக்கம் தான் பிழையானது.

காவிரி நீர் பகிர்வு குறித்த நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்த கர்நாடகம் மறுத்து வந்தது என்பதால் தான் தமிழகம் மிக நீண்ட சட்டப் போராட்டம் நடத்தி காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்கச் செய்தது. அவ்வாறு ஆணையம் அமைக்கப்பட்டு, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும்படி ஆணையிடப்பட்ட பிறகும் கூட, அதை மதிக்காமல் கர்நாடக அரசு காவிரி நீரை அதன் விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளும் என்றால் காவிரி மேலாண்மை ஆணையம் என்ற அமைப்பு எதற்காக செயல்பட வேண்டும்? அந்த அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தான் என்ன? என்பன போன்ற வினாக்கள் எழுகின்றன.

காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றால் காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அதைத் தான் காவிரி நடுவர் மன்றம் அதன் தீர்ப்பில் வலியுறுத்தியிருந்தது. ஆனால், அத்தகைய அதிகாரம் காவிரி ஆணையத்திற்கு வழங்கப்படாததே இந்த நிலைக்கு காரணமாகும். இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு காவிரி நீரை கர்நாடகம் சட்டவிரோதமாக பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, காவிரி ஆற்றில் உள்ள அனைத்து அணைகளையும் நிர்வகிக்கும் அதிகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு வழங்கவும் அரசு முன்வர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

karnataka issue water cauvery Ramadoss
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe