Skip to main content

காவிரியில் கழிவுநீர் கலப்பு: ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்... அன்புமணி ராமதாஸ்!

Published on 27/05/2020 | Edited on 27/05/2020

 

Anbumani Ramadoss


காவிரி ஆற்றில் கழிவுநீரை கலக்கவிடும் அனைத்து தொழிற்சாலைகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் முன்வர வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
 


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு வகையான தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் திறந்து விடப்படும் கழிவு நீர் காவிரி ஆற்றில் தொடர்ந்து கலந்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கும், விவசாயத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த அத்துமீறலை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது.

ஈரோடு நகரத்தையொட்டிய பகுதிகளில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறைகள், சலவை ஆலைகள், அச்சு தொழிற்சாலைகள் போன்றவற்றிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் காவிரி ஆற்றில் கலக்கவிடப்பட்டு வந்தது. இதைத் தடுக்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தப்பட்ட போதும் சட்டவிரோதமாக காவிரி ஆற்றில் கழிவுகள் கலக்க விடப்பட்டு வந்தன. கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டதால், காவிரியில் கழிவு நீர் கலப்பது முடிவுக்கு வந்தது. காவிரி ஆறும் தூய்மையடைந்தது.

ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு ஆலைகள் செயல்பட அண்மையில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், ஆலைகள் திறக்கப்படுவதற்கு முன்பாக ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரைச் சுத்திகரிக்க கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றனவா? என்பதை ஈரோடு மாவட்டத்திலுள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாததன் விளைவாக தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஓடை போல ஓடி காவிரி ஆற்றில் கலக்கிறது. கழிவு நீரில் அமிலம் கலந்திருப்பதால் அப்பகுதியில் கடுமையான காரநெடி வீசுவதுடன், அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், தோல் அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வளவுக்குப் பிறகும் தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீர் வெளியேற்றப்படுவதைத் தடுக்க மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
 


இந்தியாவின் புனித நதிகளில் ஒன்றாக காவிரி போற்றப்படுகிறது. ஆனால், கள எதார்த்தம் வேறு விதமாக இருக்கிறது. காவியங்களில் காவிரி புனித நதியாகப் போற்றப்பட்டாலும், களத்தில் காவிரி சாக்கடையாக மாற்றப்பட்டு வருகிறது. பெங்களூரு நகரிலும், அதையொட்டிய பகுதிகளிலும் உள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து ஒவ்வொரு நாளும் 150 கோடி லிட்டர் கழிவுகள் காவிரியில் கலக்கவிடப்படுகின்றன. தமிழகத்திற்குள் வந்த பிறகு மேட்டூரிலேயே காவிரியை கழிவுநீர் கால்வாய் ஆக்கும் பணிகள் தொடங்கிவிடுகின்றன. அங்குள்ள கெம்பிளாஸ்ட் ஆலையிலிருந்து புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கார்சினோஜென், நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கும் டையாக்சின் போன்ற 28 வகையான நச்சுப்பொருட்கள் காவிரியில் கலக்க விடப்படுகின்றன. மேட்டூரில் உள்ள பிற ஆலைகள், ஈரோடு, கரூர், திருச்சி என அனைத்து மாவட்டங்களில் இருந்தும் காவிரியில் கழிவுகள் கலக்கின்றன.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் காவிரியில் மக்கள் புனித நீராடும் தலமாக திகழ்கிறது. ஆனால், அங்கு தான் காவிரியில் மொத்தம் 52 வகையாக நச்சுப்பொருட்கள் கலந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. காவிரியில் இவ்வளவு கழிவுகள் கலந்திருப்பது விவசாயத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் தீமையை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, ஆற்றில் குளிப்பவர்களுக்கும் உடல்நலக் கேட்டை ஏற்படுத்தும். காவிரி கழிவுநீர் தொட்டியாக்கப்படுவதைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு காலகட்டங்களில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. காவிரியைத் தூய்மைப்படுத்த வலியுறுத்தி கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் ‘‘கரம் கோர்ப்போம் & காவிரி காப்போம்’’ என்ற பெயரில் காவிரியைக் காக்க வலியுறுத்தி ஓகனேக்கல் முதல் பூம்புகார் வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டேன்.

அதன்பின்னர் காவிரியைத் தூய்மைப்படுத்துவதற்காக ‘‘நடந்தாய் வாழி காவேரி’’ என்ற பெயரிலான திட்டத்தைத் தமிழக அரசு, தயாரித்து மத்திய அரசின் நிதியைக் கோரியிருக்கிறது. தமிழக அரசின் இந்த நோக்கத்தைப் புரிந்து கொண்டு, காவிரியைத் தூய்மைப்படுத்தும் பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். மாறாக, காவிரியை கழிவுநீர் கால்வாயாக மாற்றுவதை வேடிக்கை பார்க்கக் கூடாது. அதுமட்டுமின்றி, காவிரி ஆற்றில் கழிவுநீரைக் கலக்கவிடும் அனைத்து தொழிற்சாலைகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் முன்வர வேண்டும்.
 

http://onelink.to/nknapp


காவிரி ஆறு 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகத் திகழ்வதால், அதைக் காக்கவும், தூய்மைப்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கங்கை ஆற்றைத் தூய்மைப்படுத்த மத்திய அரசு நடப்பாண்டு இறுதிக்குள் மொத்தம் ரூ.20,000 கோடியைச் செலவிடவுள்ளது. அதேபோல், காவிரியைத் தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கான நிதியையும் மத்திய அரசு வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் மோடி ஆட்சியில் தமிழ்நாட்டில் சிறு, குறு தொழில்களுக்கு பேரழிவு” - ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Jairam Ramesh alleges Damage for small and micro businesses under Prime Minister Modi's rule

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், பா.ஜ.க மீதும், பிரதமர் மோடி மீதும் கடுமையாக குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது குறித்து ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “பா.ஜ.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட 10 லட்சத்திற்கும் அதிகமான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (எம்எஸ்எம்இ) என்ற செழிப்பான சுற்றுச்சூழல் அமைப்பைப் பெருமைப்படுத்தியது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, மற்றும் திட்டமிடப்படாத கொரோனா கால ஊரடங்கு ஆகிய மும்முனை தாக்குதலால் MSME சுற்றுச்சூழல் அமைப்பை அழித்தது.

இதனை, ராகுல் காந்தி கடந்த பத்தாண்டுகளாக தொடர்ந்து முன்னிலைப்படுத்தி வருகிறார். மேலும், ஏப்ரல் 12 ஆம் தேதி கோயம்புத்தூரில் நடைபெற்ற இந்தியப் பேரணியின் மெகா பேரணியின் போது அவர் மீண்டும் வலியுறுத்தியது போல், மாநிலத்தின் தொழில்துறை மையமான கோவை பகுதியில் உள்ள எம்எஸ்எம்இ என்னும் மையத்தின் தவறான நிர்வாகத்தால் தத்தளிக்கின்றன. பணப்புழக்கத்தை அதிகம் நம்பியிருக்கும் கொங்குநாட்டின் MSMEகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. திருப்பூரில் ஏற்பட்ட திடீர் பொருளாதார சீர்குலைவைத் தாங்க முடியாமல் 1,000 சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டன.

தமிழ்நாட்டில் உள்ள  எம்.எஸ்.எம்.இ.களுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் கொடுத்த இரண்டாவது அடி ஜி.எஸ்.டி ஆகும். மிக சிக்கலான வரி விதிப்பு முறை அவசரமாக கொண்டு வரப்பட்டது. பெரிய நிறுவனங்கள் அவற்றின் பயனுள்ள வரி விகிதத்தை 27% லிருந்து 28% ஆகக் கண்டாலும், MSMEகள் அவற்றின் பயனுள்ள வரி விகிதத்தை முந்தைய ஆட்சியை விட இரு மடங்காகக் கண்டன. 2019 ஆம் ஆண்டளவில், தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 50,000 தொழில் நிறுவனங்கள் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 2017-18ல் மட்டும் 5.19 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளனர். 

மோடி அரசின் மோசமான நிர்வாகத்தினால் கொங்கு வட்டாரத்தில் இன்னும் சிறு, குறு தொழில்கள் பாதிப்பில் இருந்து மீளவில்லை. மோடி என்ற தனிமனிதர் ஏற்படுத்திய பணமதிப்பிழப்பு என்ற பேரிழப்பால் பொருளாதார நடவடிக்கையே முடங்கிப் போய்விட்டது. தொழிலாளர்களுக்கு சிறு, குறு தொழில் நிறுவனங்களால் ஊதியம் வழங்க முடியாத நிலையால் பொருள் நுகர்வும் முடங்கிப் போனது. நடைமுறை மூலதனத்தை நம்பியே செயல்படும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.  

Next Story

'மாமன்னன் படத்தில் நடித்தால் மட்டும் போதாது'-அன்புமணி ராமதாஸ் கடும் விமர்சனம்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட பாமகவின் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''விளையாட்டு துறை அமைச்சர்  இன்னும் விளையாட்டு பிள்ளையாகவே இருக்கிறார். அதற்கு மேல் வளர மாட்டேன் என்கிறார். தர்மபுரியில் வந்து பேசிவிட்டு போகிறார். என்னுடைய தந்தை முதலமைச்சர்  உறுதியாக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க சட்ட போராட்டம் நடத்துவார் என்று சொல்லியுள்ளார். உங்களுக்கும் சட்டத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கு. முதலமைச்சர் எதுக்கைய்யா சட்ட போராட்டம் நடத்த வேண்டும். கையெழுத்து போட வேண்டும் அவ்வளவு தானே.

கையெழுத்து போடும் அதிகாரம் உங்களுக்கு இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் ஒரு மிகப்பெரிய தீர்ப்பை கொடுத்திருந்தார்கள். அந்த தீர்ப்பில் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க எந்த தடையும் கிடையாது. தரவுகளை சேகரித்து நீங்கள் அதை நியாயப்படுத்தி உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதன்பிறகு என்ன உங்களுக்கு சட்ட போராட்டம் இருக்கிறது. தரவுகள் எங்கே இருக்கிறது? தரவுகள் கம்ப்யூட்டரில் இருக்கிறது. கம்ப்யூட்டரில் டவுன்லோட் செய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும். ஒரு மணி நேரமாகும். நான் முதலமைச்சராக இருந்தேன் என்றால் ஒரு மணி நேரத்தில் கையெழுத்து போட்டுவிடுவேன். தேர்தல் வந்தால் மட்டும் வன்னியர்களை பற்றி ஞாபகம் வரும்; தேர்தல் வந்தால் மட்டும் தலித்துகளை பற்றி ஞாபகம் வரும். மாமன்னன் படத்தில் நடித்தால் போதுமா? பட்டியலின மக்களுக்கு நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டாமா? தெரிந்தால் தானே மரியாதை கொடுப்பீர்கள். இது சினிமா அல்ல இது வாழ்க்கை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழ்நாட்டிலேயே அதிகமாக செய்த கட்சி பாமக தான்'' என்றார்.