Cant say that now Ramadoss hints about alliance

Advertisment

பா.ம.க.வின் (நிறுவன) தலைவர் ராமதாஸுக்கும், அவரின் மகனும், அக்கட்சியின் (செயல்) தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணிக்கும் இடையே கட்சிக்குத் தலைமை தாங்குவது, வழிநடத்துவது தொடர்பாகக் கடுமையான பனிப்போர் நிலவி வருகிறது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் கடந்த 5ஆம் தேதி ராமதாஸை, அன்புமணி சந்தித்துப் பேசியிருந்தார். அதே சமயம் ராமதாஸ் - அன்புமணியின் இந்த சந்திப்பைத் தொடர்ந்து குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி ஆகியோரும் ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்திருந்தனர். இதனையடுத்து தைலாபுரம் தோட்டத்தில் இருந்து ராமதாஸ் நேற்று முன்தினம் (07.06.2025) சென்னை வந்திருந்தார்.

இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் ராமதாஸ் இன்று (09.06.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தேவையானவற்றை 2 நாட்களாக நான் சொல்ல முடியவில்லை. எல்லாம் சென்றாக போய்க் கொண்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு ஏற்படும். அந்த தீர்வு ஏற்படும்போது உங்களுக்கு (ஊடகம்) தெரியாமல் இருக்காது. அதனால் நிச்சயமாகக் கட்சிக்கும், நாட்டுக்கும் சரியான தீர்வாக இருக்கும். ஊடக நண்பர்கள் அதுவரை சற்று பொறுத்திருங்கள் என்று கூறி உங்களிடமிருந்து பிரியா விடைபெறுகின்றேன்” எனத் தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர் ஒருவர், “2024இல் பாஜக கூட கூட்டணி நிலைப்பாட்டில் நான் இல்லை என்று கடந்த செய்தியாளர் சந்திப்பில் சொன்னீர்கள். சொன்னீர்கள் இப்போதும் அதே நிலைப்பாட்டில் இருக்கிறீர்களா?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு ராமதாஸ், “அதை இப்போது சொல்ல முடியாது” எனச் சூசகமாகப் பதிலளித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர், “பாமக இடதுசாரி சிந்தனையோடு வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி. தற்போது வலதுசாரி சிந்தனை மேலோங்கி இருக்கிறது என்று தொல். திருமாவளவன் சொல்லிருக்கிறார். அதனை எப்படிப் பார்க்கிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு ராமதாஸ், “பூதக் கண்ணாடி இல்லையே” எனப் பதிலளித்தார்.

Advertisment

இப்போது தொண்டர்கள் நீங்கள் சொல்ல விரும்புவது என்ற கேள்விக்கு ராமதாஸ், “தொண்டர்கள் எப்பொழுதும், எந்நாளும் என் பக்கம் தான். என் பக்கம் தான் என்று சொல்வதை விட என்னைக் குலதெய்வமாகக், கடவுளாக நினைக்கக்கூடிய கோடான கோடி தொண்டர்களை நான் தொண்டர்கள் என்று சொல்வதில்லை. அவர்கள் என்னுடைய சொந்தங்கள். அவர்கள் தான் எனக்கு வழிகாட்டிகள். இந்த தொண்டர்கள் என்று நீங்கள் சொன்னீர்களே அவர்கள் தான் எனக்கு எல்லா வகையிலும் வழிகாட்டிகள். அந்த வகையிலே அவருடைய நலத்துக்காக அவருடைய முன்னேற்றத்திற்காக நான் எதையும் செய்வேன்” எனப் பேசினார்.