நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றியது.தமிழகத்தில் திமுக கூட்டணி 38 இடங்களை கைப்பற்றியது.அதிமுக கூட்டணி தேனி நாடாளுமன்ற தொகுதியை தவிர அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்தது.இந்த தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரனின் அமமுக கட்சி தான் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்தது இல்லாமல் டெபாசிட்டையும் இழந்தது.இதனால் போட்டியிட்ட வேட்பாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisment

ttv

தேர்தல் பிரச்சாரத்தின் போது தினகரன் செல்லும் இடமெல்லாம் மக்கள் ஆதரவு கிடைத்தது. இதனால் அதிமுக தரப்புக்கு தினகரனின் பிரச்சாரத்தின் போது கூடிய கூட்டத்தை பார்த்து சற்று கலங்கியது.மேலும் தினகரனால் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று கருதினர்.ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் தினகரனால் அதிமுகவுக்கு எந்த பெரிய இழப்பும் ஏற்படவில்லை.மேலும் தினகரன் கட்சி நிறைய இடங்களில் நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டது.சென்னையில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்ட அனைத்து இடத்திலும் மூன்றாம் இடம் பிடித்தது.இது தினகரன் கட்சிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இதனையடுத்து தினகரன் கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தலில் தோல்வி அடைந்தது மட்டுமில்லாமல்,பணமும் நிறைய செலவு செய்ததால் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் ஒரு சில வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திமுக அல்லது அதிமுகவுக்கு செல்ல திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.