Advertisment

தொகுதிகள் மாறி வாக்களித்த வேட்பாளர்கள்...

ddd

கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. திமுக, அதிமுக, பாமக, மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சி, தேமுதிக உட்பட பிரதான கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் சுயேச்சைகள் உட்பட 136 பேர் போட்டியில் உள்ளனர். இவர்கள் கடும் வெயிலில் இரவு பகல் பாராமல் பிரச்சாரம் செய்து முடித்தனர். இதன் விளைவாக நேற்று வேட்பாளர்கள் அனைவரும் ஓட்டளிக்கச் சென்றனர்.

Advertisment

இதில் அதிமுக வேட்பாளர்களில் கடலூரில் போட்டியிடும் அமைச்சர் சம்பத் தனது சொந்த ஊரான பண்ருட்டி தொகுதியில் உள்ள மேல்குமாரமங்கலத்தில் வாக்களித்தார். புவனகிரியில் போட்டியிடும் அருண்மொழித்தேவன் திட்டக்குடி தொகுதியில் உள்ள திட்டக்குடி அரசுப் பள்ளியில் வாக்களித்தார். குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் அவரது சொந்த ஊர் புவனகிரி தொகுதியில் உள்ளது. அங்கு சென்று வாக்களித்தார். பண்ருட்டி தொகுதியில் போட்டியிடும் சொரத்தூர் ராஜேந்திரன் நெய்வேலி தொகுதியில் உள்ள அவரது சொந்த ஊரான சொரத்தூரில் வாக்களித்தார். சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் பாண்டியன் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் உள்ள குமராட்சி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

Advertisment

அதேபோல் திமுக சார்பில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் உள்ள முட்டத்தில் வாக்களித்தார். பண்ருட்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தவாக தலைவர் வேல்முருகன் அவரது வாக்கை நெய்வேலி தொகுதியில் உள்ள இந்திரா நகரில் செலுத்தினார்.

அதேபோன்று விருத்தாசலம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் ராதாகிருஷ்ணன் நெய்வேலி தொகுதியில் உள்ள அவரது சொந்த ஊரான முத்தாண்டிக் குப்பத்தில் வாக்களித்தார். புவனகிரி தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் துரைசரவணன் தனது வாக்கை சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள அரசுப் பள்ளியில் செலுத்தினார். திட்டக்குடி தொகுதியில் அதிமுக கூட்டணியில் பிஜேபி கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் 'தடா' பெரியசாமி அவரது வாக்கை குன்னம் தொகுதியில் உள்ள காளிங்கராய நல்லூர் பள்ளியில் செலுத்தினார். காட்டுமன்னார்கோயில் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளரான சிந்தனைச்செல்வன்,தனது வாக்கை விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் செலுத்தினார். விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, அவரது வாக்கினை சென்னையில் செலுத்தினார்.

மேற்படி வேட்பாளர்கள் அனைவரும் அவரவர் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வாக்கை அவர்களுக்கே செலுத்த முடியாமல் தங்கள் சொந்த ஊர் அமைந்துள்ள தொகுதியில் தங்கள் கட்சி மற்றும் தங்களது கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு போட்டியிட்ட மற்ற வேட்பாளர்கள் அனைவரும் அவரவர் வாக்கினை அவரவர்களுக்குச் செலுத்தி கொண்டனர்.

Candidate vote
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe