Skip to main content

வேட்பாளர் லிஸ்ட்! -கூட்டணிக்கு வேட்டு வைப்பதா என சலசலப்பு!!!

Published on 28/10/2020 | Edited on 28/10/2020
ddd

 

 

எப்போது தேர்தல் அறிவித்தாலும் சந்திக்க தயார் என்று திமுகவும், அதிமுகவும் சொல்லி வருகிறது. அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களையும், தி.மு.க.வின் அரசியல் ஆலோசனைக் குழுவான ஐ-பேக்தான் தேர்ந்தெடுக்கும் என செய்திகள் கசிந்துள்ளன.

 

பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் சார்பில் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 5 பேரைக் கொண்ட தி.மு.க. வேட்பாளர் பரிந்துரைப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதை 3 பேர் பட்டியலாக்கும் வேலையும் நடக்குது. தி.மு.க.வில் சீட் வாங்க நினைக்கும் பலரும் ஐ-பேக் டீமை பிடிப்பதில் மும்முரமா இருக்காங்க. இதைப் புரிஞ்சிக்கிட்டு, ஐபேக் பட்டியலில் உங்கள் பெயரையும் இடம்பெறச் செய்கிறோம்னு அரசியலுக்கு அப்பாற்பட்ட கும்பல் ஒன்றும், வேட்பாளராகும் ஆசையில் உள்ள தி.மு.கவினரிடம் வருமானம் பார்க்க அலைகிறதாம்.

 

இந்த நேரத்தில், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும், அந்தந்த கட்சிகளிடம் தலா 3 பேர் கொண்ட பட்டியலை வாங்கி, நாமே தேர்ந்தெடுக்கலாம்ங்கிற யோசனையை ஐபேக்கின் பாஸான பிரசாந்த் கிஷோர், ஸ்டாலினிடம் சொல்லியிருப்பதா தகவல் கசிய, நல்லா இருக்கிற கூட்டணிக்கு வேட்டு வைப்பதான்னு தி.மு.க. சீனியர்களிடமும், கூட்டணியினரிடமும் சலசலப்பு ஏற்பட்டிருக்குது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களவைத் தேர்தல்; போட்டியின்றி தேர்வான பா.ஜ.க வேட்பாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
BJP candidate selected without competition at Lok Sabha elections

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதற்கிடையே,மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் மே 7ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 19ஆம் தேதி எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில், காங்கிரஸ், பா.ஜ.க, மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.  அதன்படி, குஜ்ராத் மாநிலத்துக்கு உட்பட்ட சூரத் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிட பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில், பா.ஜ.க சார்பில் முகேஷ் தலால் வேட்புமனு தாக்கல் செய்தார். அதே போல், காங்கிரஸ் கட்சி சார்பாக நிலேஷ் கும்பானி, பகுஜன் சமாஜ் கட்சி பியோரேலால் பாரதி உட்பட 8 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில்,காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனுவில் போலியான சாட்சி கையெழுத்திட்டதாக கூறி அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு பதிலாக காங்கிரஸ் சார்பில் மாற்று வேட்பாளராக சுரேஷ் பத்ஷாலா அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரது வேட்புமனுவும் தகுதியற்றது எனக் கூறி, அவருடைய வேட்புமனுவிலும் போலியான சாட்சி கையெழுத்திட்டதாகக் கூறி நிராகரிக்கப்பட்டது.

இதனால், சூரத் மக்களவைத் தொகுதிக்கான போட்டியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் இன்று (22-04-24) என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உட்பட அனைத்து சுயேட்சை வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுவிட்டனர்.

இதனால், சூரத் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் முகேஷ் தலால், வாக்குப்பதிவுக்கு முன்னரே போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.  இது காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளையும் கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும், இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Next Story

'விட்டால் திருப்பூரையும் மணிப்பூர் ஆகிவிடுவார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
'If BJP enterTirupur will also become Manipur' - Chief Minister M.K.Stal's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருப்பூரில் திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய முதல்வர் ,''பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால், மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் அரசமைப்பு சட்டத்தை மாற்றி விடுவார்கள்.  மோடியின் பாஜக அரசு வீட்டுக்கும் கேடு நாட்டுக்கும் கேடு. கலவரம் செய்வது பாஜகவின் டிஎன்ஏவில் ஊறிப்போய் உள்ளது. பாஜகவை உள்ளே நுழையவிட்டால் சமூக அமைதியைக் கெடுத்து விடுவார்கள். அதிகாரத்தில் உள்ள பாஜக வென்றால், திருப்பூரை மணிப்பூர் ஆக்கி விடுவார்கள். பன்முகத்தன்மைக் கொண்ட இந்தியாவை பிரதமர் மோடி சிதைக்க பார்க்கிறார். சமூகநீதி என்ற வார்த்தையே பிரதமர் மோடிக்கு அலர்ஜியாக உள்ளது.

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முதலில் இட ஒதுக்கீட்டைத்தான் காலி செய்வார். வருகின்ற மக்களவைத் தேர்தல் இரண்டு தத்துவங்களுக்கு இடையே நடக்கின்ற போர். வீழ்ச்சிதான் மோடியின் சாதனை. மோடி ஆட்சியில் பத்திரிகையாளர்கள் நிம்மதியாக நடமாட முடிகின்றதா? ஊடக நிறுவனங்களால் நிம்மதியாக செயல்பட முடிகிறதா? தங்களுக்கு கட்டுப்படவில்லை என்றால் ஒட்டுமொத்த நிறுவனங்களை விலைக்கு வாங்கி  பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறைகளை ஏவுவார்கள். உண்மையை எழுதும் பத்திரிகையாளர்களை சிறையில் அடைப்பது, அவர்கள் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கை பார்ப்பது எனப் பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது.

அதன் விளைவு தான் இன்று ஊடகச் சுதந்திரத்தில் 180 நாடுகளில் 161 வது இடத்தில் இந்தியா இருக்கிறது. நம்முடைய பழம்பெரும் ஜனநாயகத்திற்கு மோடி எவ்வளவு பெரிய அவமானம் ஏற்படுத்தி இருக்கிறார். மோடி சொன்ன புதிய இந்தியா அவருடைய ஆட்சியில் எப்படி இருக்கிறது? 32 விழுக்காடு மக்கள் ஊட்டச்சத்து குறைவோடு இருக்கிறார்கள். 44 விழுக்காடு மக்கள் சமையல் எரிவாயு பயன்படுத்தவில்லை. 30 விழுக்காடு மக்கள் அடிப்படை சுகாதார வசதி இல்லாமல் வாழ்கிறார்கள். 41 விழுக்காடு மக்களுக்கு வீடுகள் இல்லை. இப்படித்தான் உள்ளது மோடி சொன்ன புதிய இந்தியா.

மோடி ஆட்சியில் தானியங்களின் விலை 54 விழுக்காடு அதிகமாகிவிட்டது. பால் பொருட்களின் விலை 53 விழுக்காடு அதிகம், எண்ணெய் விலை 48 விழுக்காடு அதிகம், காய்கறி விலை 48 விழுக்காடு அதிகம், மருத்துவ செலவுகள் 71 விழுக்காடு அதிகம். கல்விச் செலவுகள் 60 விழுக்காடு அதிகம். இதெல்லாம் மோடி சொன்ன வளர்ச்சியா? 10 ஆண்டுகளாக பெரும்பான்மையுடன் ஆட்சி செய்தோம் எனச் சொல்லிக் கொள்ளும் பாஜக, கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அதனால்தான் எந்த மேடையிலும் திட்டங்களையும், சாதனைகளையும் சொல்ல முடியவில்லை. ஆனால் திராவிட மாடலாட்சியைப் பொறுத்தவரை ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டில் கஜானாவை தூர்வாரிய அதிமுகவினால் ஏற்பட்ட நிதிச் சுமை; ஒன்றிய பாஜக அரசு தரும் நிதி நெருக்கடி ஆகியவற்றை மீறி ஏராளமான சாதனைகளைச் செய்திருக்கிறோம்'' என்றார்.