/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/k-balakrishnan_0.jpg)
தமிழகத்தில் பரவலாகப் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய கூட்டுறவுத்துறை முறைகேடுகள் குறித்துப் பல அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று(22.09.2021) பத்திரிகையாளர்களைச் சந்தித்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பேசியதாவது, “தமிழ்நாட்டில் கூட்டுறவு சொசைட்டிகளில் நடந்திருக்கிற முறைகேடு என்பது ஒரு மிகப் பெரிய பேரதிர்ச்சி உருவாக்கியிருக்கிறது. கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தமிழக முதலமைச்சர் 40 கிராமிற்குக் கீழ் பெற்றிருக்கும் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு அந்த நகைகள் திரும்பிக் கொடுக்கப்படும் என அறிவித்தார்கள். இந்த வகையில் பயனாளிகள் யார் யார் உள்ளடங்குவார்கள் என ஆய்வு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படப்பட்டுள்ளது.
கூட்டுறவு அதிகாரிகளின் ஆய்வுகளின் மூலம் ஏராளமான முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூட்டுறவு பதிவாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளின் மூலமே தெரிய வருகிறது. அதாவது இந்த நகைக்கடன் பெறப்பட்டதில் கிட்டத்தட்ட 2000 ஆயிரம் கோடிக்கு மேலே முறைகேடுகளை மீறி கடன்களைப் பெற்றிருப்பதால் அதனைத் தள்ளுபடி செய்தால் அதற்குத் துணை போகும் நிலை ஏற்படுகிறது. உதாரணத்திற்கு நகைக்கடனுக்கு அதிகபட்சம் கடன் பெற வேண்டும் என்றால் 20 லட்சம் ரூபாய்தான் பெற முடியும். ஆனால் ஒரே நபர் 50 முதல் 60 வரை நகைக்கடன்களைத் தனித் தனியாக வைத்து 2 கோடி வரை கடன் பெற்றுள்ளனர். நகையே இல்லாமல் நகை அடமானம் வைத்ததாக வைத்து அந்தப் பணத்தை வாங்கியதாகவும் மற்றும் அதனை எஃப்டியில் போடப்பட்டதாகப் பல தவறான முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
அதே போல் அந்நியோதி, அன்னயோஜனா திட்டத்தில் கீழ் மிகவும் நலிந்த குடும்பத்திற்கு 35 கிலோ அரிசி வழங்குகிற திட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறது. அப்படி நலிந்தவர்கள் பெயரில் 40லட்சம், 50 லட்சம் பெறப்பட்டதாக அவர்களின் பெயரில் நகைகளை வைத்து கடன் பெற்றிருக்கிறார்கள். போலி நகைகளை வைத்து சில இடங்களில் கடன் பெற்றிருப்பதாகச் செய்திகள் வந்திருக்கிறது. ஆகவே இதெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்தால் கடந்த அதிமுக ஆட்சியில் நகைக்கடன் பெறுவதிலும், வழங்குவதிலும் ஏகப்பட்ட முறைகேடுகள் நடைபெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் இது போன்ற முறைகேடுகள் நடந்திருப்பது விசாரணையில் தெரிய வருகிறது. அரசு உடந்தையாக இல்லாமல் இவ்வளவு பெரிய தவறுகளை அதிகாரிகளால் செய்யமுடியும் என எனக்கு தோன்றவில்லை. அரசும், கடந்த ஆளுங்கட்சியும் துணைபோகாமல் இது நடந்திருக்காது என்பது தான் என்னுடைய அழுத்தமான குற்றச்சாட்டு” எனக் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)