Campaigning in Vikravandi ends today!

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த ஜூன் 14ஆம் தேதி தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பா.ஜ.க கூட்டணியில் உள்ள பா.ம.க சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியில் உள்ளனர். தி.மு.க, பா.ம.க நா.த.க உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேட்சை என மொத்தம் 29 பேர் களத்தில் உள்ளனர்.

Advertisment

அதே சமயம் அதிமுக, தேமுதிக ஆகிய இருகட்சிகளும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தவெக தலைவரும், நடிகருமான விஜய் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த தேர்தலில் வெற்றி பெற மும்முனை போட்டி நிலவியது. மூன்று கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

Advertisment

இந்த நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் 20 நாட்களாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் இன்று (08-07-24) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. தேர்தல் நடத்தை விதிப்படி இன்று மாலை 6 மணிக்கு மேல் வாக்கு சேகரிக்கவோ, பிரச்சாரம் மேற்கொள்ளவோ கூடாது. மேலும், விக்கிரவாண்டி தொகுதியில் மாலை 6 மணிக்குள் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர் வெளியேற வேண்டும். ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் வரும் ஜூலை 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.