பாஜகவின் குஷ்பூ உள்ளிட்டோர் கருப்பு துணியால் வாயைக் கட்டிக்கொண்டு போராட்டம்... பட்டினப்பாக்கத்தில் போலீசார் குவிப்பு! 

பஞ்சாப் மாநிலத்தில் மேம்பாலத்தில் பிரதமர் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சென்னையில் பாஜகவினர் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அந்த மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்ற பிரதமர் மோடியின் பாதுகாப்பில் மாநில அரசு அக்கறை காட்டவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தனது பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு டெல்லிக்கு திரும்பினார் மோடி.

இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மத்திய உள்துறை இது குறித்த விசாரணையைத் துவக்கியிருக்கிறது. அதேசமயம், பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடிகள் இருந்ததா என்பதை விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனை அவசர வழக்காக எடுத்துக் கொண்டு இன்று விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்.

இந்த நிலையில், பிரதமரின் பயணத்தில் திட்டமிட்டே பாதுகாப்பு குளறுபடிகளை ஏற்படுத்தியதாகப் பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசைக் குற்றம் சாட்டுகிறது தமிழக பாஜக. இதனையடுத்து, பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து சென்னையில் பட்டினப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய இணையமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, எம்.என்.ராஜா, பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு, சென்னை மாநகராட்சி தேர்தல் பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன், மாநில மீனவர் அணித் தலைவர் சதீஷ்குமார் உள்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் அவர்களை கைது செய்ய முற்பட்ட நிலையில் 'எங்களை பாதுகாக்கத்தான் நீங்கள் இருக்கிறீர்கள் கைது செய்ய அல்ல' என பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து மெரினாவிலிருந்து பட்டினப்பாக்கம் வரும் லிங்க் சாலையில் அமர்ந்து வாயை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வரும் நிலையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Chennai kushboo modi police Pon Radhakrishnan
இதையும் படியுங்கள்
Subscribe