Skip to main content

பா.ஜ.க.வின் இமாலய வெற்றியும்; இமாச்சல் சறுக்கலும்; தேர்தல் முடிவுகள் அலசல்

-தெ.சு.கவுதமன்

 

BJP's Himalayan victory in gujarat and Himachal slide! Analysis of election results!

 

இன்றைய தினம் குஜராத் மற்றும் இமாசல பிரதேச மாநிலங்களின் தேர்தல் முடிவுகளால் நாடே பரபரப்பாயிருக்கிறது. ஒரு பக்கம் குஜராத்தில் 155+ தொகுதிகளில் பா.ஜ.க. சாதனை வெற்றியைப் பெற்று பூரிப்பாக உள்ளது. இங்கே காங்கிரஸ் 17 தொகுதிகளில் மட்டுமே வென்று மிகமோசமான தோல்வியைத் தழுவியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி முதன்முறையாகத் தனது முத்திரையைப் பதித்து 12% வாக்குகளுடன், 5 வெற்றிகளுடன் மூன்றாமிடத்துக்கு வந்துள்ளது. இன்னொரு பக்கம் இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க. தனது ஆட்சியை காங்கிரஸ் வசம் பறிகொடுத்துள்ளது. இங்கே காங்கிரஸ் 40 தொகுதிகளிலும், பா.ஜ.க. 25 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. இமாச்சல பிரதேசத்தைப் பொறுத்தவரை ஒருமுறை காங்கிரஸ் வென்றால் மறுமுறை பா.ஜ.க. வெல்வதாகத் தொடர்கிறது. அதே வரிசையில்தான் இம்முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.  

 

குஜராத்தில் பா.ஜ.க. தொடர்ச்சியாக ஏழாவது முறையாக வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. ஒரு கட்சி தொடர்ச்சியாக ஏழாவது முறை வெற்றி பெறுவதென்பது, அதுவும் மிகப்பெரிய சாதனை வெற்றியைப் பெறுவது ஆச்சர்யமான ஒன்றாகும். பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களின் தொடர்ச்சியான பிரச்சாரம், பேரணி போன்றவற்றால் மோடி அலையை உருவாக்கி பிரமாண்ட வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள்.

 

காங்கிரஸ் கட்சி, தனக்கான தலைவர் யார், முதல்வர் வேட்பாளர் யார் என்பதையே உறுதிப்படுத்தாமல்தான் பிரச்சாரக் களத்தில் இருந்தது. பிரச்சாரத்திலும்கூட நட்சத்திரப் பேச்சாளர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்றோர் அதிக ஆர்வம் காட்டவில்லை. ராகுல் காந்தி தனது பாத யாத்திரையிலேயே கவனத்திலிருந்தார். காங்கிரஸ் கட்சியின் இத்தகைய அணுகுமுறை அவர்களை வெற்றிக்கு அப்பால் வெகுதூரத்தில் நிறுத்திவிட்டது.  

 

காங்கிரஸ் வெற்றிக்கு ஆப்பு வைத்த இன்னொரு விஷயம், ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி. இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மிகத் தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டது. டெல்லி, பஞ்சாபில் பெற்ற வெற்றி, இக்கட்சியை தேசியக் கட்சியாகப் பார்க்க வைத்தது. பா.ஜ.க.வைப் போலவே ஆம் ஆத்மி கட்சிக்கும் இந்துத்துவா முகம் உண்டு. அதையும் தாண்டி நேர்மையான கட்சி என்ற முகமும் இருந்ததால் இவர்களின் பிரச்சாரம் மக்களிடம் எடுபட்டது. அதை உடைக்கத்தான் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான முயற்சியில் பா.ஜ.க. இறங்கியது. ஆனால் அவற்றை ஆம் ஆத்மி வலுவாக எதிர்கொண்டு அம்பலப்படுத்தியது. இதன் காரணமாக, பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் மாற்றான கட்சியாக அதனைப் பார்க்கத் தொடங்கினார்கள். இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகவும் குறைந்த வாக்குகளில் தோல்வியைத் தழுவிய இடங்களிலெல்லாம் ஆம் ஆத்மி வாக்குகளைப் பிரித்துள்ளது. இதைத்தான் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா குறிப்பிட்டுள்ளார். 

 

குஜராத்தில் பா.ஜ.க.வின் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதானென்றும் ஆம் ஆத்மி கட்சி காங்கிரசின் வாக்குகளைப் பிரிப்பதற்காக பா.ஜ.க.விடம் நிதி ஆதாயம் பெற்றதாகவே குற்றச்சாட்டு வைத்துள்ளார். காங்கிரஸ் கட்சியைவிட ஆம் ஆத்மி அதிகமாக தேர்தல் செலவுகளைச் செய்ததாகவும், அதற்கு பா.ஜ.க.வுடனான மறைமுகக்கூட்டு தான் காரணமென்றும் குற்றம்சாட்டினார். இத்தேர்தலில், பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளர் புபேந்திர படேல் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளார்.

 

கிரிக்கெட்டர் ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா, 61,000 வாக்குகள் வித்தியாசத்தில் தனது முதல் தேர்தலிலேயே அசத்தியுள்ளார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி தொடர்ச்சியாகப் பின்தங்கியிருந்து இறுதியில் வெற்றிபெற்றார். மிக மோசமான மோர்பி பால விபத்து  நடந்த தொகுதியில் பா.ஜ.க.வின் வெற்றி பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. இன்றைய தினம் வெளியான பல்வேறு இடைத்தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு சாதகமாக இல்லாதது ஆச்சர்யப்படுத்துவதாக உள்ளது. ஆக, இந்த தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு கேள்விக்குறியாகவும் ஆம் ஆத்மி, பா.ஜ.க.வுக்கு ஆச்சர்யக்குறியாகவும் அமைந்துள்ளது.

 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !