Skip to main content

சரியும் பா.ஜ.க!!! நிமிரும் காங்கிரஸ்?

Published on 19/11/2018 | Edited on 19/11/2018

இந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்திஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இது அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் நடக்கும் அரையிறுதியாகவே பார்க்கப்படுகிறது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் 29, ராஜஸ்தானில் 25, தெலுங்கானாவில் 17, சத்திஸ்கரில் 11 மற்றும் மிசோரமில் 1 என மொத்தம் 83 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளதால் இந்த மாநிலத் தேர்தல்கள் மிகவும் முக்கியத்துவம் பெற்றவையாக கருதப்படுகிறது.

 

 

cc


 
“காங்கிரஸ் இல்லாத இந்தியா” என்ற முழக்கத்துடன் 2014-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலை சந்தித்தது பா.ஜ.க.. வரலாற்றில் முதன்முறையாக காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. நூற்றாண்டு கண்ட இந்தியாவின் பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் தன்னுடைய வரலாற்றில் மிக மோசமான ஒரு தோல்வியைத் தழுவியது. 44 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், 282 தொகுதிகளில் பா.ஜ.க.வும் வெற்றி பெற்றன.

 

2015-க்குப் பிறகு 18 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று உள்ளது. இதில் காங்கிரஸ், பஞ்சாப் மற்றும் புதுசேரியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ், கூட்டணி ஆட்சியில் உள்ளது. ஆனால் 11 மாநிலங்களில்  பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சியை பிடித்தன. அதே சமயம் 2014-க்குப் பிறகு 30 தொகுதிகளில் நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் 6 தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வென்றுள்ளது. 2014-ல் 16 தொகுதிகளில் வென்று இருந்தது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 20 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 

 

ராஜஸ்தான் மாநிலத்தில் 2018-ஆம் ஆண்டு 2 மக்களவைக்கு தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைதேர்தலில் அல்வார் தொகுதியில் 1,96,496 வாக்குகள் வித்தியாசத்திலும், அஜ்மீர் தொகுதியில் 84,414 வாக்குகள் வித்தியாசத்திலும் காங்கிரஸ் கட்சி வென்றது. இந்த தொகுதிகளில் 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. முறையே 2.84, 1.72 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது. மேலும் இங்கு அப்போது நடந்த சட்டமன்ற இடைதேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. சச்சின் பைலட் தலைமையின் கீழ், காங்கிரஸ் ராஜஸ்தானில் உள்ளாட்சி தேர்தலில்களில் பெரும்பான்மை இடங்களை வென்றுள்ளது. இது ஆளும் வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க.வுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது.

 

 

cc

 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற ரத்லம் தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் 88,832 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதே தொகுதியில் 2014-ஆம் ஆண்டு பா.ஜ.க. 1,08,457 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று இருந்தது. 2016-ஆம் ஆண்டு ஷஹ்டோல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க. 60,383 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது. இதே தொகுதியில் 2014-ஆம் ஆண்டு பா.ஜ.க. 2,41,301 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 2018-ல் இந்த மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி இடைதேர்தல்களில் காங்கிரஸ் பெரும் வெற்றியை பெற்றுள்ளது.  2 சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தலில், ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் கமல்நாத் தலைமையில் சந்தித்த காங்கிரஸ் வெற்றிபெற்றது. பா.ஜ.க.-ன் இந்தத் தோல்வி 13 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள சிவராஜ் சிங் சௌஹான் அரசிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

 


தற்போது ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. இரு  மாநிலங்களிலும் ஆளும் கட்சிகளை சேர்ந்த முக்கிய கட்சி தலைவர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து வருகின்றனர். இரு மாநிலங்களிலும் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை பொறுத்தவரை காங்கிரஸ் எளிதாக வெற்றி பெரும் வாய்ப்புகள் மிக அதிகம். ஆனால் மத்திய பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ள போதிலும், உட்கட்சி பிரச்சனை காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும். 

 

சத்திஸ்கரில் ஆளும் ரமன் சிங் தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு எதிராக மனநிலை இருந்தாலும், காங்கிரஸ் கட்சிக்கு உட்கட்சி பிரச்சனைகள், அஜீத் ஜோகியின் தனிக்கட்சி என பல காரணிகள் சவாலாக உள்ளது. அதனால் இங்கு போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. 

 

தெலுங்கானா மாநிலத்தில் சந்திர சேகர் ராவ்வின் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு அதிருப்தி நிலவுகிறது. இருப்பினும் பெரிய எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மிகவும் வலுமையான எதிர்க்கட்சி இல்லாத காரணத்தால் எளிதாக வெற்றி பெறலாம் என எண்ணி முன்கூட்டியே சட்டசபையை கலைத்தார் சந்திர சேகர் ராவ். ஆனால் எதிர்பாராத விதமாக காங்கிரஸ், தெலுங்கு தேசம் மற்றும் சில கட்சிகள் பெரிய வலுவான கூட்டணியை அமைத்துள்ளன. இது ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு பெரும் சவாலாக உள்ளது. முதலில் ராஷ்ட்ரிய சமிதி கட்சி எளிதாக வென்று விடும் என கருதப்பட்டது. தற்போதுள்ள நிலையில் வலுவான கூட்டணி காரணமாக வெற்றியின் அலை மாற தொடங்கியுள்ளது. 

 

40 தொகுதிகளை மட்டுமே கொண்டுள்ள மிசாரம் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் வெற்றிபெறுவது எளிதல்ல. இங்கு 2 மாநில கட்சிகள் மற்றும் காங்கிரஸ் இடையே போட்டி கடுமையாக உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியே அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும்.  

 

2019-ஆம் ஆண்டு மக்களைவை தேர்தலுக்கு முன்னதாக இந்த 5 மாநிலங்களில் நடக்க இருக்கும் தேர்தல் ஒரு முன்னோட்ட பொதுத்தேர்தல்களாக பார்க்கப்படுகிறது. இன்று இருக்கும் சூழ்நிலைகளைப் பார்த்தால் இந்த மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி பெரும் புத்துணர்ச்சி பெற்று வருகிறது. அதே சமயம் பல மாநிலங்களில் வெற்றி பெற்று வரும் பா.ஜ.க. இந்த பெரிய முக்கியமான மாநிலங்களில் செல்வாக்கை இழந்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற பெரும்பாலான சட்டமன்ற தேர்தல்களில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் திட்டங்கள் வெற்றி பெற்று வருகின்றன என்பது கவனிக்கத்தக்கது. இந்த மாநிலத் தேர்தல் முடிவுகள் பொதுத் தேர்தலின் திசையை தீர்மானிக்கும் என்பது யதார்த்தம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ராகுல், நேரு குடும்பத்தில் பிறந்தவர் தானா?” - கேரள எம்.எல்.ஏ பரபரப்பு பேச்சு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kerala MLA sensational speech on Rahul was born in the Nehru family?

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-04-24) மாலையுடன் நிறைவு பெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் ஒருசேர இருந்தாலும், கேரளாவைப் பொறுத்தவரை இந்த இரு கட்சிகளும் தனித்தே போட்டியிடுகின்றன. அதே வேளையில், இந்த இரு கட்சி தலைவர்களும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். இது இந்தியா கூட்டணியில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசும் போது, “பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள போது, மத்திய விசாரணை அமைப்புகள் அவரை ஏன் விட்டு வைத்திருக்கிறது?” என்று கூறி கேரள முதல்வர் பினராயி விஜயனை கடுமையாக சாடினார்.

இந்த நிலையில், பினராயி விஜயன் இருக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியின் எம்.எல்.ஏ. பி.வி அன்வர், ராகுல் காந்தியைக் கடுமையாக சாடியுள்ளார். அதில் அவர், “காந்தி பெயரை பயன்படுத்த ராகுலுக்கு உரிமை இல்லை. அவர் நான்காம் தர குடிமகன் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் நேரு குடும்பத்தில் பிறந்தவரா? எனக்கு சந்தேகம் உள்ளது. அவரது டி.என்.ஏ ஆய்வு செய்யப்பட வேண்டும்” என்று பரபரப்பு கருத்தை கூறியுள்ளார்.

Next Story

மோடியின் சர்ச்சை பேச்சு; பரப்படும் மன்மோகன் சிங்கின் விடியோ - தகிக்கும் தேர்தல் களம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Congress accuses BJP of misrepresenting Manmohan Singh's video and spreading it

ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தேசத்தின் செல்வத்தை இந்துக்களிடமிருந்து முஸ்லீம்களுக்கு கொடுத்துவிடுவார்கள் எனக் கூறி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். அதற்கு நாடு முழுவதம் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. சர்வாதிகாரியின் உண்மை முகம் வெளிவந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, '‘காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது,​ ​தேசத்தின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு கொடுக்கப் போகிறீர்களா?’ என்றார். இதில், இஸ்லாமியர்களைப் பிரதமர் மோடி ஊடுருவல்காரர்கள் என்றும், அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள் எனவும் சித்தரித்து பேசியிருந்தார்.

தொடர்ந்து பேசிய மோடி, ''பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, இஸ்லாமியர்களுக்கே செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியைக்கூட விட்டுவைக்காது. எனக் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். இந்திய அரசியல் வரலாற்றில் எந்தவொரு பிரதமரும், இவ்வளவு தரம் தாழ்ந்து பேசியது கிடையாது என்றும், முதல் பிரதமாராக மோடி வெறுப்பு பிரச்சாரம் செய்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் எனக் கடும் கண்டனங்கள் எழுந்து வந்தது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நேரத்தில் நாட்டின் பிரதமர் வெறுப்பு பிரச்சாரம் செய்து இருப்பதால் மோடியைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே, காங்கிரஸ் சார்பில் பிரதமர் மோடி வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், தன்னாட்சியாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் வெறுப்பு பேச்சு தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. இதற்கு முன்பு உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் என்று முத்திரை குத்தி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். ஆனால், இந்திய தேர்தல் ஆணையம் அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் நீட்சியாக பிரதமர் மோடி தொடர்ந்து இஸ்லாமியர்களை குறிவைத்து வெறுப்பு பிரச்சாரம் செய்து வரும் நிலையல், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமரின் அப்பட்டமான வெறுப்புப் பேச்சுக்கு காது கேளாத வகையில், இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமின்றி நடுநிலைமையைக் கூட கைவிட்டுள்ளதாக குற்றம் சாற்றியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் நாட்டின் முன் வெளிவந்துள்ளதாக சாடியுள்ளார். 

ஆனால், பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சை நியாப்படுத்தும் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், பிரதமர் மன்மோகன் சிங் பேசும் பழைய வீடியோவை கட் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதனால், மன்மோகன் சிங் உண்மையில் பேசியது குறித்து காங்கிரஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில்,  கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், தேசத்தின் பல்வேறு வளர்ச்சிகள் சார்ந்த முன்னுரிமைகளை விளக்குகிறார். “பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினர், ஓபிசி பிரிவினர், சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள், குறிப்பாக, முஸ்லிம் சிறுபான்மையினர் வளர்ச்சியின் பலன்களில் சமமாகப் பங்குபெறும் வகையில், புதுமையான திட்டங்களை வகுக்க வேண்டும். வளங்கள் மீதான முதல் உரிமையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். நாட்டின் வளங்களில் மத்திய அரசுக்கு எண்ணற்ற பிற பொறுப்புகள் உள்ளன. அது நாட்டு மக்கள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும். என மன்மோகன் சிங் பேசியுள்ளார்.

அப்போதே அவரது பேச்சு பொதுவெளியில் வேறாக புரிந்துகொள்ளப்பட்டதால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து விளக்கமும் கொடுத்ததாக சொல்லப்படுப்படுகிறது. ஆனால், பாஜகவினர், 'குறிப்பாக முஸ்லிம் மக்கள்' என  மன்மோகன் சிங் பேசுவதை மட்டும் கட் செய்து சமூக வலைத்தளங்களில் வெறுப்பு பிரச்சாரம் செய்து வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டுகின்றனர். நாட்டில் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பாஜக ஆட்சிகால சாதனைகளைக் கூற முடியாமல் 18 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை திரித்து வெறுப்பு பிரச்சாரம் செய்வதாக கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடி உண்மைக்கு மாறான தகவலைத் தந்துள்ளார் எனவும், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் மோடி பேசியது எதையும் கூறவில்லை என்றும் அக்கட்சித் தலைவர்கள் விளக்கம் அளித்துவருகின்றனர். ஆனால், இதனிடையே உத்திரபிரதேசத்திற்கு தேர்தல் பரப்புரைக்கு சென்ற மோடி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். முன்னதாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இடத்திற்கு இடம் பிரதமர் மோடி மாற்றி பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது