''உங்களுடைய பர்சனல் ஈகோவிற்காக மாநிலத்தின்  நலன்களை பலியிட வேண்டாம்''-வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி 

bjp Vanathi Srinivasan Interview

பிரதமர் மோடி நாளை தமிழகம் வரவிருக்கும் நிலையில் பாஜக கட்சியின் எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''இப்போது பெட்ரோல், டீசல் வரியை தமிழக அரசு குறைக்காவிட்டால் கோட்டையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என அண்ணாமலை அறிவித்திருக்கிறார். நாளை நாட்டினுடைய பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். அடிப்படை கட்டமைப்பு வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காகவும், நிறைவுற்ற திட்டங்களையும் அதே நேரத்தில் துவக்கி வைப்பதற்காகவும் நாளை வருகிறார். நாளைக்கு அவர் வரக்கூடிய காரணம் என்பது முழுக்க முழுக்க தமிழக நலன் சார்ந்தது. மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் இணைந்து அவரவருடைய துறைகளில் மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்பது தான் மக்களுடைய விருப்பமாக இருக்க முடியும்.

தங்களுக்கு அரசியல் வாழ்க்கை வேண்டுமென்றால் மோடி அவர்களை எதிர்ப்பது, பிஜேபியை எதிர்ப்பது என்ற உங்கள் அரசியல் அஜெண்டாவை தனியாக வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் மாநிலத்தின் நலன் என்பது முக்கியம். உங்களுடைய பர்சனல் ஈகோவிற்காக மாநிலத்தின் நலன்களை பலியிட வேண்டாம். இப்பொழுதும் எங்களுடைய கோரிக்கை ஏழை எளிய மக்களுக்கு, சாமானிய மக்களுக்கு பெட்ரோல், டீசல் மீதான வரியை மாநில அரசு குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையைவைக்கிறோம். தமிழக அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும். எந்த ஏழை மக்களுக்காக பேசுங்கள் என பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்களைப் பார்த்து முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறினாரோ அதே சாதாரண மக்களுக்காகதான் இப்போது இதைக் கேட்கிறோம். மத்திய அரசு வரியை குறைத்துள்ளது. மாநில அரசு நீங்களும் உங்கள் பங்கிற்கு குறைத்துக் கொள்ளுங்கள்'' என்றார்.

Chennai modi
இதையும் படியுங்கள்
Subscribe