Advertisment

தொடர் நெருக்கடியில் பாஜக; அடுத்தடுத்து அதிர்ச்சிகளைக் கொடுக்கும் மூத்த தலைவர்கள் 

BJP under continuous pressure; Senior leaders who give successive shocks

Advertisment

கர்நாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தல் வரும் மே மாதம் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியைத்தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு வியூகங்களை வகுத்து கர்நாடகா மாநில பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய அம்மாநிலத்தின் பிரதான கட்சிகள் மும்முரமாக இயங்கி வருகின்றன. அதே நேரம் கூட்டணி குறித்த பேச்சுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள 189 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் புதியவர்கள் 52 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் 8 பெண்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். தற்போதைய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிகாவன் தொகுதியில் போட்டியிட உள்ளார்.

சில தினங்கள் முன் அதானி தொகுதியில் தனக்கு வாய்ப்பளிக்க மறுத்ததால் பாஜகவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் முன்னாள் துணை முதலமைச்சர் லட்சுமணன் சவுதி ஏற்கனவே அறிவித்திருந்தார். நேற்று பெங்களூருவில் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா மற்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோரை சந்தித்த லட்சுமண சவுதி காங்கிரஸில் இணைவதாக அறிவித்தார்.

Advertisment

இதனிடையே நேற்று கர்நாடக பாஜகவின் முக்கியத் தலைவரான ஜெகதீஸ் ஷெட்டர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் பாஜகவில் இருந்தும் ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார். ஆறு முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ள ஷெட்டர் தனது ராஜினாமா கடிதத்தை சட்டசபை சபாநாயகர் விஸ்வேஷ்வர் ஹெக்டே காகேரியிடம் கொடுத்துள்ளார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்னிலையில் காங்கிரஸில் இணைந்துள்ளார். பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்று அங்கு காங்கிரஸில் இணைந்துள்ளார் ஜெகதீஷ் ஷட்டர். முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன், “சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இல்லையென்றால் தனித்துப் போட்டியிடுவேன் என தெரிவித்துள்ள ஜெகதீஷ் ஷட்டர், அதே நேரம் தன்னை தேர்தல் அரசியலிலிருந்து விலகும்படி கட்சித்தலைமை வற்புறுத்துவதாகவும், வேட்புமனு தாக்கல் செய்ய இரண்டு நாட்களே உள்ள நிலையில் இறுதி நேரத்தில் அரசியலை விட்டு விலக நிர்ப்பந்திக்கின்றனர்” எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் அவர்காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளது பாஜகவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பாஜக சட்டமேலவை உறுப்பினர் விஸ்வநாத் தற்போது பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “அரசியல் காரணங்களுக்காக பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைகிறேன். ஏனென்றால் நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பினை சேர்ந்தவர். கிராமவாசி. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஒன்றாக இணைய வேண்டும். ஒன்றிணைந்து இருப்பதே இந்த நாட்டின் அடையாளம், சித்தாந்தம். ஆனால் பாஜக அதற்கு எதிராக உள்ளது. அதன் காரணமாகவே பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைகிறேன். காங்கிரஸ் கண்டிப்பாக வெல்லப் போகிறது. ஆனால் நான் காங்கிரஸில் இணைவது அதன் காரணமாக அல்ல” எனக் கூறியுள்ளார்.

கர்நாடகத் தேர்தலின் கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக வந்த நிலையில் தற்போது பாஜகவின் மூத்த தலைவர்கள் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைவது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

amithshah modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe