ADVERTISEMENT

“பாஜக தொண்டர்கள் கைது செய்யப்படுகிறார்கள்; ஜெயிலுக்கு செல்கிறார்கள்; மீண்டும் வருகிறார்கள்” - அண்ணாமலை

04:39 PM Mar 10, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக தலைமை அலுவலகத்தை திறந்து வைக்க பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இன்று காலை கிருஷ்ணகிரி வந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் பாஜக தலைமை அலுவலகத்தை திறந்து வைத்த ஜே.பி.நட்டா, அங்கிருந்து காணொளி மூலம் தமிழகத்தில் பிற மாவட்டங்களில் கட்டப்பட்ட மாவட்ட தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தார். தமிழகத்தில் திருச்சி, விருதுநகர் உட்பட 9 மாவட்டங்களில் இன்று முதல் பாஜக தலைமை அலுவலகங்கள் திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வருகிறது. மேலும் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் பாஜக தலைமை அலுவலகங்கள் கட்டப்பட்டு வருவதாக பாஜக மாநில துணைத் தலைவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். தொடர்ந்து கிருஷ்ணகிரியில் பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். இந்நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “ஜே.பி.நட்டா சரித்திரமொன்றை நிகழ்த்திக் காட்டிவிட்டு தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். வட கிழக்கு மாநிலங்களில் மறுபடியும் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. தலைவராக நட்டா வந்த பிறகு பிரதமரின் கரத்தை அனைத்து இடத்திலும் வலுப்படுத்தி வருகிறார். தமிழகத்தில் பாஜக தான் மக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. சிறிய பிரச்சனையாக இருந்தாலும் பெரிய பிரச்சனையாக இருந்தாலும் பாஜக தொண்டர்கள் அதை தட்டிக் கேட்கின்றனர். கைது செய்யப்படுகின்றனர். ஜெயிலுக்கு சென்று வந்தாலும் மீண்டும் பிரச்சனைகளை தட்டிக் கேட்டு சிறை செல்கின்றனர். கட்சியின் வளர்ச்சிக்கு இதுதான் ஆணி வேர். தமிழ்நாட்டில் திமுகவின் 22 மாத ஆட்சிக் காலத்தை பார்த்து வருகிறோம். திமுக வந்த பின் தமிழ்நாடு எப்படி மாறி இருக்கிறது என்பது நமக்குத் தெரியும். இதை அகற்ற வேண்டும். அகற்றியாக வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.

இன்னும் 12 மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் வருகிறது. பிரதமர் செய்யாத வேலை எதுவும் இல்லை. 12 மாதம் வேகமாக வந்து விடும். வேகமாக செயல்பட வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. நாம் என்ன அரசியலை பேசினாலும் பூத்தில் அதை ஓட்டுக்களாக மாற்றி எம்.பி. எம்.எல்.ஏக்களை நாம் தேர்ந்தெடுக்கும் போது தான் கட்சி வளர்ச்சிப் பாதையில் செல்லுகிறது என்று அர்த்தம். பாராளுமன்ற தேர்தலில் நம் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் சென்று அமர வேண்டும். இங்கிருந்து நாம் எம்.பி.க்களை அனுப்புவோம். 39 எம்.பி.க்களும் தமிழகத்தில் இருந்து பாராளுமன்றம் செல்லுவார்கள். தமிழ்நாட்டிற்காக குரல் கொடுப்பார்கள். மக்கள் பிரச்சனைகளை முன்னெடுத்து பாஜக அரசியல் இருக்க வேண்டும். எங்கு மக்கள் பிரச்சனைகளை பார்த்தாலும் முதலில் பாஜக தொண்டர்கள் அதை தட்டிக் கேட்க வேண்டும். இந்த பேச்சை மக்கள் பேச வேண்டும்.” எனக் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT