BJP started negotiations with alliance parties in Tamil Nadu

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

Advertisment

இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் இல்லத்தி்ல் பா.ஜ.க. - த.மா.க. இடையே கூட்டணி குறித்துப் பாஜக நாடாளுமன்றத் தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பாஜக மாநில துணைத் தலைவர்கள் கரு. நாகராஜன், நாராயணன் திருப்பதி மற்றும் பால் கனகராஜ் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகளும் உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகத்துடனும் கூட்டணி குறித்து அரவிந்த் மேனன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Advertisment

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.சி. சண்முகம் பேசுகையில், “வாஜ்பாய் காலத்தில் இருந்து இன்று வரை 23 ஆண்டு காலமாக புதிய நீதிக் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வருகிறது. பா.ஜ.க.வின் தாமரை சின்னத்தில் புதிய நீதிக் கட்சி போட்டியிடும். போட்டியிடக் கூடிய தொகுதிகளை விரைவில் அறிவிக்கஇருக்கிறார்கள். இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர் மோடி தான் பிரதமர் வேட்பாளராக நிற்கிறார். இந்தியா கூட்டணியிலும், அதிமுக கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்று சொல்ல முடியாத சூழல் நிலவுகிறது. பிரதமர் மோடிக்கு இணையான தலைவர்கள் இன்றைய தினம் இந்தியாவில் யாரும் இல்லை” எனத் தெரிவித்தார். மேலும் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளஅரசியல் கட்சித் தலைவர்களான பாரிவேந்தர், தேவநாதன் யாதவ், தமிழருவி மணியன் ஆகியோரையும் பாஜக நாடாளுமன்றத் தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் சந்தித்து பேச உள்ளார்.