/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/21_70.jpg)
ஊட்டியில் நடைபெற்ற துணை வேந்தர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர், “நமது மாநிலத்தில், தொழில் முதலீட்டாளர்களை மேலும் மேலும் கவரக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும். நாம் கேட்பதாலோ அல்லது அவர்களுடன் சென்று பேசுவதாலோ முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள்.” என்று முதல்வரை நேரடியாகவே விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “துணை வேந்தர் மாநாட்டை ஆளுநர் அரசியலுக்காக பயன்படுத்தியுள்ளார். சிதம்பரம் தீட்சிதர்கள் விவகாரத்தில் ஆளுநர் கூறியதற்கு மாறாக ஆதாரங்கள் வெளியாகியுள்ளதால், அதிலிருந்து கவனத்தை திசை திருப்பும் நோக்கத்தோடு முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.ஆளுநர் ஆர்.என். ரவிதன்னை முழு அரசியல்வாதியாக மாற்றிக் கொண்டுள்ளார்.உதகையில் நடந்த துணை வேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் தனது அரசியலுக்காக பயன்படுத்தியுள்ளார்.
கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதை பல்கலைக் கழகங்களின் வேந்தராக இருக்கும் ஆளுநர் ரவி மறைத்துவிட்டு பேசியுள்ளார்.ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள கல்வி நிறுவனங்களின் தர வரிசையில், தேசிய அளவில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளதை தெரிந்தும் தெரியாதது போல் பேசுகிறார்.அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கோடு உண்மைக்கு மாறான செய்திகளைப் பேசி வருகிறார் ஆளுநர்.அப்படி பேசும் கருத்துக்கு கண்டனம் வலுக்கும்போதுஅடுத்த கருத்தை கூறுகிறார்.அரசியல் செய்ய வேண்டும் என ஆளுநர் எண்ணினால் அதற்கு அவர் ஆளுநர் மாளிகையைப் பயன்படுத்த வேண்டாம்.
வெளிநாட்டு பயணங்களை தமிழக முதலமைச்சர் மட்டுமா மேற்கொண்டுள்ளார். இன்றைய மத்திய அரசின் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது எத்தனை நாடுகளுக்கு பயணம் செய்தார். பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து அங்கிருக்கும் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்துள்ளார். எனவே பாஜக தான் கவர்னரை நோக்கி இதற்கெதிராக கேள்விகளை கேட்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)