Skip to main content

“இந்துக்களின் உண்மையான எதிரி பாஜக..” - அமைச்சர் உதயநிதி

Published on 21/01/2024 | Edited on 21/01/2024
"BJP is the real enemy of Hindus." - Minister Udayanidhi

திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் இன்று (ஜன. 21) நடக்கிறது. இதையொட்டி கோட்டை கொத்தளம் போன்ற அலங்கார நுழைவு வாயில், பிரம்மாண்ட பந்தல் என விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திமுக இளைஞரணி முதல் மாநில மாநாடு கடந்த 2007ம் ஆண்டு நெல்லையில் நடந்தது. இந்நிலையில், இரண்டாவது மாநில மாநாடு சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று (ஜன. 21) நடக்கிறது. திமுகவின் எழுச்சிப் படையாகக் கருதப்படும் இளைஞரணிக்கு 17 ஆண்டுகள் கழித்து நடைபெறும் மாநாடு என்பதாலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்தும் மாநாடு என்பதாலும், இந்த மாநாடு ஒட்டுமொத்த அரசியல் அரங்கிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனையொட்டி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன் பாளையத்தில் உள்ள திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ள மாநாட்டு திடலில் 1,500 டிரோன்களின் கண்ணைக் கவரும் காட்சி நேற்று நடைபெற்றது. இதனை முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த டிரோன் காட்சியில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் வானில் ஜொலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அதிலும் குறிப்பாக கலைஞரின் கையெழுத்துடன் கூடிய ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று (21ம் தேதி) காலை 9 மணிக்கு மாநாடு திடலுக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் எம்.பி. கனிமொழி மற்றும் அமைச்சர்களும், எம்.பி.க்களும், கட்சி நிர்வாகிகளும் வந்தனர். பிறகு துணைப் பொதுச்செயலாளர் எம்.பி. கனிமொழி அங்கு அமைக்கப்பட்டிருக்கும் 100அடி உயர் கொடி கம்பத்தில், தி.மு.க. கொடியை ஏற்றி தி.மு.க. இளைஞரணி இரண்டாவது மாநில மாநாட்டை துவக்கி வைத்தார். 

அதனைத் தொடர்ந்து திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு துவங்கியது. இதில், மாநாட்டின் கொள்கை தீர்மானங்களின் சுருக்க வடிவத்தை உதயநிதி அறிவித்தார். அவர் தெரிவித்ததாவது; “இளைஞர் அணியின் மாநில மாநாட்டிற்கு அனுமதி அளித்த கழகத் தலைவருக்கு இளைஞர் அணியின் சார்பாக நன்றி. தமிழ்நாடு முதன்மை மாநிலமாக தொடர்ந்திட அயராது பாடுபடும் முதல்வருக்கு என்றும் இளைஞர் அணி துணை நிற்கும். மாநிலத்தின் எல்லா உரிமைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு பறித்துவரும் நிலையில், எல்லார்க்கும் எல்லாம் என்ற ஒப்பற்ற சிந்தனையுடன் திராவிட மாடல் அரசை நடத்தி வரும் முதலமைச்சர் எண்ணத்தின்படி இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு  தொடர்ந்திட கழக இளைஞரணி அயராது பாடுபடும் என இந்த மாநாடு தீர்மானிக்கிறது. 

மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் அளித்ததன் மூலம் 2023 டிசம்பர் மாதம் வரை 44 கோடியே 6 லட்சம் முறை மகளிர் பயணம் மேற்கொண்டுள்ளனர். பாலின சமத்துவத்தை போற்றும் விடியல் திட்டத்தை வழங்கிய மாநில முதலமைச்சருக்கு இந்த மாநாடு நன்றி தெரிவிக்கின்றது. குடும்பத் தலைவியின் உழைப்பை மதிக்கும் வகையில் கலைஞரின் உரிமை திட்டத்தினை செயல்படுத்தி ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே 15 லட்சத்து 84 ஆயிரத்து 300 பெண்களுக்கு தலா மாதம் ரூபாய் ஆயிரம் கிடைக்க செய்து இது உதவித்தொகை அல்ல உங்களின் உரிமைத்தொகை என அறிவித்த முதலமைச்சருக்கு இளைஞர் அணி இந்த மாநாட்டில் நன்றி தெரிவிக்கின்றது.

மாணவர்களின் உடல் நலம் காத்து ஊக்கமளிக்கும் காலை உணவு திட்டம். இந்தியாவுக்கே முன்னோடி திட்டமான முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை 31,000 தொடக்கப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தி 18 லட்சத்து 54 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுவதற்கு காரணமான முதலமைச்சருக்கு இந்த மாநாடு நன்றி தெரிவித்துக் கொள்கின்றது.

நாளைய தலைமுறையை வளர்த்தெடுக்கும் நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண்கள் திட்டத்திற்கு இந்த மாநாடு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. மக்களின் உயிர் காக்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் வாயிலாக ஒரு கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு நேரடியாக சென்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்துகள் வழங்கப்படுவதும், விபத்துகளில் சிக்கியவர்களின் உயிரை காப்பாற்றுவதும் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் வாயிலாக இரண்டு லட்சம் உயிர்களை காப்பாற்றிய மனிதநேய முதலமைச்சருக்கு இந்த மாநாடு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. 

நிதி நெருக்கடியிலும் மகிழ்ச்சி பொங்க வைத்த பொங்கல் பரிசு தொகுப்பு; தமிழர் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் 2 கோடியே 19 லட்சத்து 71 ஆயிரத்து 113 அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூபாய் ஆயிரம் வழங்கி ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கின்ற முதலமைச்சருக்கு இந்த மாநாடு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது. 

வரலாறு காணாத மழையிலும் மக்களை காத்த முதலமைச்சருக்கு நன்றி. சென்னையிலும் சென்னையின் அருகில் உள்ள மாவட்டங்களிலும், தென் தமிழ் நாட்டில் உள்ள மாவட்டங்களிலும் பெய்த வரலாறு காணாத மழையினால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்க குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய், வீடு, பயிர், கால்நடை, இழப்பீடுகள் என மொத்தம் ரூபாய் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிவாரணம் வழங்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு இந்த மாநாடு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. 

நூற்றாண்டு நாயகர் தலைவர் கலைஞரின் இலட்சிய வழி நடப்போம்; நவீன தமிழ்நாட்டின் சிற்பி முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு சிறப்பினை ஆண்டு முழுவதும் கொண்டாடும் வகையில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம், கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் என முத்தமிழ் அறிஞர் புகழ்போற்றும் நிலையான அமைப்புகளை உருவாக்கித் தந்துள்ள முதலமைச்சருக்கு இந்த மாநாடு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

நீட் நுழைவுத் தேர்வை ஒழிக்கும் வரை நமது போராட்டம் ஓயாது. தங்கை அனிதா முதல் சென்னை ஜெகதீஸ்வரன் வரை தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்து உயிர்களை பறிக்கின்ற நீட் தேர்வில் இருந்து விலக்குக் கோரி உண்ணா நிலை அறப்போராட்டத்தை முன்னெடுத்த இளைஞர் அணி, அதனைத் தொடர்ந்து நீட் விலக்கு நமது இலக்கு எனும் முழக்கத்துடன் இதுவரை 85 லட்சத்திற்கும் மேலான கையெழுத்துகளை பெற்று ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றி காட்டியுள்ள நிலையில், நீட் தேர்வு ஒழிப்பில் இறுதி வெற்றியாய் முழுமையாய் பெற்று தீரும் என இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

குலக்கல்வியை புகுத்தும் தேசிய கல்விக் கொள்கையை இளைஞர் அணி எதிர்த்து போராட்டம் நடத்தும். மாநில பட்டியலுக்கு கல்வி, மருத்துவத்தை மாற்ற வேண்டும். முதலமைச்சரே பல்கலைக்கழகத்தின் வேந்தர், ஆளுநர் பதவியை நிரந்தரமாக அகற்றிட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு வேலைகளில் தமிழர்களை நியமிக்க வேண்டும்.

மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் ஒன்றிய அரசுக்கு கண்டனம். கலைஞரின் மாநில சுயாட்சி தீர்மானத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்க வேண்டும். அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை கைப்பாவை ஆக்கிய ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனம். நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிக்கும் சர்வாதிகாரத்தை ஒழித்திடுவோம். இந்துக்களின் உண்மையான எதிரி பாஜக தான் என்பதை அம்பலப்படுத்துவோம். பாஜக ஆட்சியினை வீழ்த்திடும் முன் கள வீரர்களாக இளைஞரணி செயல்படும். நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான சூளுரை உள்ளிட்ட தீர்மானங்களை கொண்டுவந்தார்.

சார்ந்த செய்திகள்