Skip to main content

பயங்கரவாதிகளின் பாசறையாகிறதா பா.ஜ.க.? - கி.வீரமணி அறிக்கை

 

dddd

 

பல கொலை வழக்குகளில் சிக்கியவர்களும், கேடிகளும் பா.ஜ.க.வில் சேர்வது ஓர் ஆபத்தான போக்காகும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

அந்த அறிக்கையில், ''செங்கல்பட்டு பகுதியில் ஏரிக்கரையில் மணற்கொள்ளையைத் தடுப்பவர்களைத் தலையை வெட்டிக் கொலை செய்யும் கூலிப்படைத் தலைவன் சீர்காழி சத்யா. கோவையில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட மூன்று கொலைகள் உள்பட 5 கொலை வழக்குகளோடு, 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளும் இவர் மீதுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படிப்பட்டவர் அண்மையில் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். சேலத்தில் 5 முறை குண்டர் சட்டத்தில் கைதான ரவுடி முரளிக்கு தமிழக பாஜகவில் இளைஞரணியில் பொறுப்பு வழங்கப்பட்டது.

 

வடசென்னையைக் கலக்கிய கல்வெட்டு ரவி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாஜகவில் இணைந்தார். கல்வெட்டு ரவி மீது 6 முறை குண்டர் சட்டம் பாய்ந்தது. 6 படுகொலை வழக்குகளில் தொடர்புடையவர் அந்த ரவி. இதேபோல் சென்னை சூர்யா என்ற ரவுடியும் பாஜகவில் இணைந்தார்.

 

வடசென்னை கஞ்சா வியாபாரியாக வலம் வந்த புளியந்தோப்பு அஞ்சலைக்கும் பாஜக அடைக்கலம் கொடுத்தது. அவர் வடசென்னை மாவட்ட பாஜக மகளிர் அணி செயலாளராகி விட்டார். புளியந்தோப்பு அஞ்சலைமீது கொலை உள்ளிட்ட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

 

அதேபோல் புதுச்சேரியை மிரளவைத்துக்கொண்டிருக்கும் பெண் தாதா எழிலரசியும் பாஜகவில் இணைந்துள்ளார். புதுவை முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி. சிவகுமார் படுகொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி எழிலரசிதான். சமூக சேவகி என்ற அடையாளத்துடன் வலம் வரும் தாதா எழிலரசி இப்போது பாஜக பிரமுகராகி விட்டார்.

 

புதுச்சேரி ரவுடிகளான சோழன், விக்கி, பாம்வேலு ஆகியோர் ஏற்கெனவே பாஜகவில் இணைந்து பதவிகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 2008 ஆம் ஆண்டு ‘ஆனந்த விகடன்’ இதழ் வெளியிட்ட செய்தியில் உள்ள பயங்கர கொலைகாரர் பட்டியலில் உள்ளவர்களில் பலர் இன்றைய பாஜக பிரமுகர்கள்தாம்.

 

தி.மு.க. திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைச்செல்வன் கொலை மற்றும் மாங்குடி ஊராட்சிமன்றத் தலைவர் ஜெயக்குமார் கொலைகளில் சம்பந்தப்பட்ட நபர்கள் எந்தக் கட்சியில் சங்கமம் ஆகியுள்ளனர்? இதில் ஜெயக்குமார் கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் தீவிரம் காட்டிவந்தவர். இதனால் இவருடைய கிராமத்துக்கு மத்திய அரசின் ‘நிர்மல் புரஸ்கார்’ விருது கிடைத்தது.  இவரையும் கொலை செய்தனர்.


இந்தக் கொலைகளுக்குப் பின்னால் இருந்தவர் பி.ஜே.பி.யின் திருவாரூர் மாவட்டச் செயலாளரான மாணிக்கம். இந்த மாணிக்கத்தின் கூட்டாளிகள் பலர் சிறையில் இருந்து பின்னர் பிணையில் வந்தனர். இவர்களில் குரங்கு ஆனந்த், குடவாசல் அருள், சீர்காழி ஆனந்த், சென்னை பாலாஜி, குடந்தை அரசன் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.

 

தஞ்சை ‘பாம்‘ பாலாஜி குரூப்பும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. அதில் ஸ்பீடு பாலாஜி, அரியமங்கலம் ஜாகிர், தஞ்சை பாக்கெட் ராஜா, குடவாசல் சீனு, பல்லு கார்த்திக், பல்லு சீனு, பூண்டு பதன், மெடிக்கல் காலேஜ் வெற்றி, சுரேஷ் என்று அனைவருமே கூலிக்குக் கொலை செய்யும் கும்பல்களாவர். பயங்கர கொலைச் செயலில் ஈடுபட்டவர்கள். இவர்களோடு தற்போது சீர்காழி ஆனந்த் உட்பட அனைவருமே பாஜகவில் சங்கமம்.

 

எந்த நோக்கத்தில் சேர்கிறார்கள்?

 

மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கக் கூடிய பா.ஜ.க.வில் கொலைகாரர்களும், ரவுடிகளும் சேர்வது எந்த நோக்கத்தில் என்பது எளிதாகப் புரிந்துகொள்ளத்தக்கதே! தார்மீகம் பேசும் பா.ஜ.க.வின் தரம் எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு இவையெல்லாம் மிகமிக முக்கியமான எடுத்துக்காட்டுகளேயாகும்.

 

பாபர் மசூதி இடிப்பும் - விளைவும்!

 

ஒரு பட்டப்பகலில் 450 ஆண்டுகால வரலாறு படைத்த - சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலமான அயோத்தியில் பாபர் மசூதியை மேல்மட்டத் தலைவர்கள் முன்னிலையில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடி அடித்து நொறுக்கியதும், அதில் ஒரு குற்றவாளிகூட தண்டிக்கப்படாதது மட்டுமல்ல; அவர்கள் எல்லாம் மத்திய அமைச்சர்களாக அலங்கரிக்கிறார்கள் என்றால், நாட்டில் பயங்கரவாதமும், வன்முறையும் கண்மண் தெரியாமல் தாண்டவமாடித்தானே தீரும்!

 

பொதுமக்கள் தீர்ப்பு வழங்கவேண்டும்

 

கொலைகாரர்களையும், ரவுடிகளையும், வன்முறையாளர்களையும் கட்சியில் சேர்த்துக்கொள்ளும் கட்சியின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் நிலை என்ன? நினைக்கவே பதறும் நிலைதான்! எல்லா வகைகளிலும் பா.ஜ.க. ஆட்சியில் நீடிப்பது நாட்டுக்கான பெருந்தீங்காகும் - பொதுமக்கள் தங்கள் தீர்ப்பை வழங்கத் தயாராக இருக்கவேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!” இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.