ADVERTISEMENT

நிர்வாகிகளுக்கு பாஜக தலைமை கொடுத்த டார்கெட்; வெள்ளையாக்கப்படும் கருப்பு பணம் - பகீர் ரிப்போர்ட்

04:53 PM Mar 15, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

அடுத்த ஆண்டு வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக இப்போதே கட்சி நிதியை வசூலிக்கத் தொடங்கிவிட்டது பா.ஜ.க., அதேநேரம் எதிர்க்கட்சிகளுக்கு நிதி கொடுக்கக்கூடாது என்று தொழில் நிறுவனங்களையும் ரெய்டைக் காட்டி மிரட்டுகிறதாம். பா.ஜ.க. தரப்பின் இந்த அதிரடி நடவடிக்கை எதிர்க்கட்சிகளை அதிர வைத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ளன. அதனைக் கட்சி ரீதியாக 59 மாவட்டங்களாகப் பிரித்து வைத்துள்ளது பா.ஜ.க., ஒவ்வொரு மாவட்டமும் எவ்வளவு நன்கொடை வசூலிக்க வேண்டும் என ஒரு டார்கெட் ஃபிக்ஸ் செய்துள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்துக்கு 7 கோடி, திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 10 கோடி, புதுக்கோட்டை மாவட்டத்துக்கு 10 கோடி, எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் உள்ள தென்காசி மாவட்டத்துக்கு 15 கோடி, முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏவான எம்.ஆர்.காந்தி ஆகியோர் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 15 கோடி, தேசிய மகளிரணி தலைவரும் எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் உள்ள கோவை மாவட்டத்துக்கு 25 கோடி என ரேட் ஃபிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறதாம்.

இப்படி தமிழ்நாட்டில் வசூல் செய்ய வேண்டிய மொத்த தொகை என 500 கோடிக்கு டார்கெட் வைத்திருக்கிறார்களாம். இதற்காக 100 ரூபாய், 500 ரூபாய், 1000 ரூபாய் நன்கொடை புத்தகம், அச்சடிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வழங்கப்பட்டுள்ளதாம். இதைத் தொடர்ந்து வசூல் பணிகள் ஜரூராகத் தொடங்கிவிட்டன. குறிப்பாக, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவரான போளுர் ஏழுமலை தனது மாவட்டத்துக்கு உட்பட்ட வந்தவாசி, சேத்பட், போளுர், ஆரணி ஆகிய ஒன்றியங்களில் உள்ள கிராமங்களுக்கு படையுடன் சென்று கட்சி நிர்வாகிகளிடம் ரசீது புத்தகங்களைத் தந்திருக்கிறார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியும் கூட்டம் போட்டு நிர்வாகிகளிடம் ரசீது புத்தகங்களை தந்து வசூல் வேட்டையில் இறக்கிவிட்டுள்ளார். திருவண்ணாமலையில் வியாபாரம் செய்யும் சேட்டுகள், மார்வாடிகள் ஓரளவு நன்கொடை தந்துள்ளார்கள். கட்சியின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் சிலர் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை மொய் எழுதியுள்ளார்கள்.

இதுபற்றி பா.ஜ.க. நிர்வாகிகளிடம் கேட்டபோது, "நன்கொடை வசூலிக்கும் தொகையில் 40 சதவீதம் மாவட்ட நிர்வாகத்துக்கும் 60 சதவீதம் மாநில தலைமைக்கும் உரியதுன்னு சொல்லியிருக்காங்க. தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதுமே இப்படி கட்சிக்கு நிதி திரட்டும் பணியை செய்யச் சொல்லியுள்ளது எங்கள் தேசியத் தலைமை” என்கிறார்கள்.

இந்தியாவிலுள்ள 7 தேசிய கட்சிகளின் சொத்து மதிப்பை சில மாதங்களுக்கு முன்பு தனியார் நிறுவனம் வெளியிட்டது. அதன்படி, பாஜக 4,847 கோடி ரூபாயோடு முதலிடத்தில் உள்ளது. சுமார் 50 ஆண்டுகள் இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியின் சொத்து மதிப்பு வெறும் 588 கோடி மட்டுமே. 2018-ல் மோடி அரசு, தேர்தல் பத்திர சட்டத்தைக் கொண்டு வந்தது. அது நடைமுறைக்கு வந்தபின் இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட 18 அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர நன்கொடை விவரத்தினை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இப்படி 2018 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 18 அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் வழியாக 9,208 கோடி நன்கொடை பெற்றுள்ளன. அதில் 5,270 கோடி ரூபாயை பா.ஜ.க. மட்டுமே பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 964 கோடி பெற்றுள்ளது. இப்படி சகல வகையிலும் இந்தியாவின் பணக்கார கட்சியாக உருவாகியுள்ளது பா.ஜ.க. அப்படியிருக்க எதற்கு மக்களை நேரடியாக சந்தித்து நன்கொடை வசூலிக்க வேண்டும்? என்கிற கேள்வியை, டெல்லியோடு நேரடித் தொடர்பில் உள்ள தமிழக பாஜக நிர்வாகிகள் சிலரிடம் கேட்டோம். புன்னகையோடு பதில் சொல்லத் தொடங்கிய அவர்கள், “நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க பல்லாயிரம் கோடி ரூபாய்கள் தேவைப்படுகிறது. கடந்த காலங்களில் பிரதமர் மோடி என்கிற பிம்பத்தை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யப்பட்டது. அது அப்போது பெரியதாக கை கொடுத்தது. அதனால் பணத்தை வைத்து இந்த முறை தேர்தலை சந்திக்கலாம் என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதேபோல், கட்சிக்கு வெளியேவுள்ள கறுப்புப் பணத்தை நன்கொடைக் கணக்கில் சேர்த்து கருப்பை வெள்ளையாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. எப்படி என்றால், கட்சிகளுக்கு நேரடியாக 20 ஆயிரத்துக்கு மேல் பணமாக நிதி வழங்கியவரின் விவரங்களை மட்டும்தான் தேர்தல் ஆணையத்துக்கு கட்சிகள் வழங்க வேண்டும். அதனால் 5 ஆயிரம் 10 ஆயிரம் என்று மக்கள் நிதி தந்ததாக பலரின் பெயர்களில் கையிருப்பை வரவு வைத்துவிடுவோம். இதனால் எங்கள் கட்சியின் கருப்புப் பணம் வெள்ளைப் பணமாக மாறிவிடும்” என்கிறார்கள்.

இப்படி தங்களிடமுள்ள ஊழல் பணத்தினை வெள்ளையாக்கத் துடிக்கும் பா.ஜ.க., எதிர்க்கட்சிகளுக்கு நன்கொடை தரும் தொழில் நிறுவனங்களை மிரட்ட வருமான வரித்துறையை ஏவி வருகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. குறிப்பாக, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பரிதா காலணி தொழிற்சாலை குரூப் இந்தியாவில் முக்கியமானது. இவர்கள் காங்கிரஸ் கட்சியோடும், மாநிலத்தை ஆளும் தி.மு.க.வோடும் நெருக்கமாக உள்ளார்கள். நேரடியாகவும் மறைமுகமாவும் பல கோடி ரூபாயை அவர்களுக்கு இவர்கள் தேர்தல் நிதியாகத் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த நிறுவனத்தை மிரட்ட வருமான வரித்துறை அடுத்தடுத்து இரண்டு முறை ஏவி விடப்பட்டிருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் வேலூர் குடியாத்தம் அம்பாலால் குரூப், கன்னியாகுமரியின் கே.கே.எம் குழுமம், ஆயுர்வேதிக் மருந்து தயாரிக்கும் குரூப் போன்றவற்றிலும் ரெய்டு செய்ததற்கான காரணம், காங்கிரஸுக்கு இந்த கம்பெனிகள் நன்கொடை தருகின்றன என்பதால்தானாம். எப்போதும் ரெய்டு செய்தால் என்ன கைப்பற்றப்பட்டது என்கிற தகவலை வருமான வரித்துறை வெளியிடும். இப்போதெல்லாம் தகவலை வெளியிடுவதில்லை. காரணம் ரெய்டில் சிக்கும் ஆவணங்களை வைத்து, பா.ஜ.க. டீலிங் பேசுகிறது என்று குற்றம்சாட்டுகிறார்கள் எதிர்க்கட்சியினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT